5ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம்: தொடரும் துயர்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமாகி வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 8) 5 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இந்நிலையில், அந்த விமானத்தின் நிலை என்ன என்று அதில் சென்ற பயணிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தேடுதல் பணியை மீண்டும் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இதே நாளில் 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு, மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.
சுமார் 12,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் மிகத் தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், எந்த விதத்திலும் துப்பு துலங்காத நிலையில் கடந்த 2017 ஜனவரியில் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு தனிப்பட்ட முறையில் தேடுதல் பணியை தொடங்கியது. பல மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், அதில் பயணித்தவர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கிரேஸ் நாதன் பேசும்போது, விமானத்தை தேட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். அவரது தாயாரும் மாயமான விமானத்தில் பயணித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

Share:

Author: theneeweb