உலகின் மிக வயதான பெண்மணி! ஜப்பானைச் சேர்ந்தவருக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்

உலகிலேயே மிக வயதான பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கனே டனகா(116), கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஜப்பானில் கடந்த 1903-ஆம் ஆண்டு பிறந்த கனே டனகா, ஃபுகுவோகா பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார். 116 வயதான அவர், உலகிலேயே அதிக வயதான பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கனே டனகா வசிக்கும் காப்பகத்துக்கு சென்ற கின்னஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், உலகிலேயே மிக வயதான பெண்ணுக்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஃபுகுவோகா மாகாணத்தின் மேயரும், கனே டனகாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

தினமும் காலை 6 மணிக்கு எழுந்து விடும் கனே டனகா, கணிதப் பாடத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவர். அவருக்கு சதுரங்க விளையாட்டின் ஒருவகையான “ஒத்தெல்லோ’ விளையாட்டை விளையாடுவது மிகவும் பிடித்தமான செயல் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், உலகிலேயே மிக வயதான பெண் என்ற சாதனை ஜப்பானைச் சேர்ந்த சியோ மியாகோ வசம் இருந்தது. அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது 117-ஆவது வயதில் உயிரிழந்தார். அதையடுத்து கனே டனகா அந்த பெருமையை பெற்றுள்ளார்.
உலகிலேயே மிக வயதான ஆண் என்ற சாதனையும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மஸாஜோ நொனாகா வசம் இருந்தது. அவர் கடந்த ஜனவரி மாதம் தனது 113-ஆவது வயதில் உயிரிழந்ததையடுத்து, உலகிலேயே அதிக வயதான ஆண் யார் என்பதை தேடும் பணி நடைபெற்று வருவதாக கின்னஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் மக்களின் வாழ்நாள் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. உலகிலேயே வயதானவர்கள் சாதனை பட்டியலிலும் ஜப்பான் மக்களே அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர்.

Share:

Author: theneeweb