வெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெருக்கடியில்

சீரற்ற வானிலையால் இதுவரை 1 லட்சத்து மூவாயிரத்து 62 பேர் நாடுமுழுவதும் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.அனர்த்த நிலையுடன் இதுவரை 2 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ள அனர்த்தம் காரணமாக வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

30 ஆயிரத்து 302 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.அந்த மையம் இன்று காலை 9.00 மணிக்கு வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.17 ஆயிரத்து 572 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 688 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 282 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும், மன்னாரில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வடக்கில் 110 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுள் 3 ஆயிரத்து 22 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 455 பேர் 30 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களைத் தெளிபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார பிரிவின் தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேறும்போது, தமது வீடுகளையும், கிணறுகளையும் சுத்திகரிக்கும்போது, பிரதேச சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், உணவு மற்றும் குடிநீர் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதுடன், தொற்று நோய்கள் தொடர்பான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார்.

No automatic alt text available.
No automatic alt text available.

இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பொது அமைப்புகள் மற்றும் தன்னெழுச்சியான இளைஞர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிவாரணங்கள் மற்றும் உதவிகளை வழங்குவோர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் தரப்பினரால் கோரப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb