தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ள ஜேவிபி

பிரேரிக்கப்பட்ட 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தினுள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜேவிபியினர் கலந்துரையாடல் நடத்தினர்.

இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு குறித்து கட்சியின் பிரசார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தகவல் வெளியிட்டார்.

20ஆம் திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய, 3இல் 2 பெரும்பான்மையுடன் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டும்.

அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றத்திலேயே தடைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இதனாலேயே மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, கொள்கை அடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தாம் இணங்குவதாகவும், எனினும் சில சில பிரச்சினைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, எதிர்வரும் நாட்களில் பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகியயோரையும், அதனை தொடர்ந்து முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் சந்திக்கவுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb