பிரிட்டனில் இந்திய ஆதரவு பேரணியில் கைகலப்பு

பிரிட்டனிலுள்ள இந்தியத் தூதரகம் எதிரே காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், இந்திய ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையினர் தெரிவித்ததாவது:
பிரிட்டனைச் சேர்ந்த காஷ்மீரி மற்றும் காலிஸ்தான் அமைப்பினர், தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  இந்த நிலையில்,  இந்திய நண்பர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவினைவாத ஆதரவாளர்களுக்கு போட்டியாக அதே பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது என்று ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டதாக லண்டன் மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் நல கவுன்சில், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆர்ப்பாட்டங்கள் கைகலப்பில் முடிந்ததற்கு எதிர் தரப்பினர்தான் காரணம் என்று இந்திய ஆதரவு அமைப்பினரும், எதிர்ப்பு அமைப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb