தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம்

நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜே.வி.பினருக்கும் இடையிலான சந்திப்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் கட்சிக் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவரான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மதலிங்கம் சித்தார்த்தன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜே.வி.பியின் சார்பில், அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால் காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 20ஆவது உத்தேச திருத்தச் சட்டமூல வரைவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி அரசியல் கட்சி தலைவர்களுடன் நடத்திவரும் பேச்சுவாரத்தைகளுக்கு அமைய இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதிகார பரவலாக்கத்திற்கு ஆதரவளிக்க ஜே.வி.பி இணக்கம் வெளியிட்டதாக தெரிவித்தார்.

இதேநேரம், குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜே.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இணைந்து செயற்படக்கூடிய அனைத்து துறைகளிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் இரு தரப்பினருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி இணக்கபாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலில் புதிய மாற்றத்திற்கான அவசியமான முக்கிய பேச்சுவார்த்தையை இன்று தம்மால் நடத்த முடிந்திருந்ததாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb