பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை காக்க பிரிட்டன் பிரதமர் போராட்டம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது (பிரெக்ஸிட்) தொடர்பான ஒப்பந்தத்தை காப்பாற்ற பிரிட்டன் பிரதமர் தெரஸா மே போராடி வருகிறார். பிரெக்ஸிட் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்டமாக எம்பிகளின் ஆதரவைப் பெற மே இறுதிகட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு மார்ச் 12-ஆம் தேதி நடைபெறும் என இரண்டு வாரங்களுக்கு முன்பாக மே, எம்பிக்கள் இடத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், இதனை பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் ஏற்காமல் வாக்கெடுப்பை தள்ளிப்போடும்படி பிரதமரை வலியுறுத்தியிருந்தனர். அப்படி செய்யாதபட்சத்தில் பிரெக்ஸிட் மசோதா மீண்டும் ஒரு படுதோல்வியை சந்திக்கும் என அவர்கள் எச்சரித்திருந்தனர்.
அயர்லாந்து எல்லை சீரமைப்பை வலியுறுத்தி பிரெக்ஸிட் மசோதாவை ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்பிக்கள் நிராகரித்தனர். இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள வாக்ககெடுப்பில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மே கடைசி கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரெக்ஸிட் பிரிட்டன் கைகளில்: பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தை இப்போது பிரிட்டனின் கைகளில்தான் உள்ளது என பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய யூனியனின் தலைவர் மைக்கேல் பார்னியர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு அதனை நிறைவற்றுவது என்பது இப்போது பிரிட்டன் பிரதமர் தெரஸா மே மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில்தான் உள்ளது. இது, தொடர்பாக அவர்களிடம் நான் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திவிட்டேன்’ என்றார்.

Share:

Author: theneeweb