போயிங் 737 விமான சேவையை நிறுத்த எத்தியோப்பியா, சீனா முடிவு

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, எத்தியோப்பியா சீனா மற்றும் இந்தோனேஷிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் அத்தகைய விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன. அத்துடன் வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்தும் அந்த விமானங்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம்(போயிங்-737 மேக்ஸ் 8) ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். அதனால் பாதுகாப்பு கருதி பயன்பாட்டில் இருந்த அனைத்து போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக எத்தியோப்பியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், “எத்தியோப்பியாவில் கோர விபத்து நிகழ்ந்ததையடுத்து, இயக்கத்தில் இருந்த அனைத்து போயிங் -737 மேக்ஸ் 8 ரக விமானங்களையும் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருந்து நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. விமான விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இருப்பினும் பாதுகாப்பு கருதி அனைத்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சேவையும் நிறுத்தப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளது.
சீன விமானங்கள் நிறுத்தம்: இதனிடையே, சீன ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களும் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சீன ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சீனாவைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இதே போன்று கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விமானங்களும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த இரண்டு விபத்துகளும் நிகழ்ந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. எனினும், பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்குமாறு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின்னர்தான் அந்த விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தோனேஷியா மற்றும் கெய்மன் தீவின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை சேவையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது. போயிங் 737 ரக விமானங்கள் மிகவும் அதிகமாக விற்கப்பட்டவை. அந்த ரகத்தின் புதிய தயாரிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 தயாரிக்கப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்த போயிங்-737 மேக்ஸ் 8 விமானங்களில் 5-இல் 1 பங்கு சீனாவுக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்புப் பெட்டி மீட்பு
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “விமானத்தின் கருப்புப் பெட்டி சேதமடைந்திருப்பதால், முழுமையான தகவல்களை அறிந்து கொள்வது கடினம். எனினும், விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார். கருப்புப் பெட்டி என்பது விமானத்தில் தகவல் சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை தொழில்நுட்பக் கருவியாகும். ஒரு விமானத்தில் இரண்டு கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளாகும்போது, அதற்கான காரணங்களை அறிவதற்கு இந்த கருப்பு பெட்டிகள் உதவியாக இருக்கும்.

 

Share:

Author: theneeweb