பறவையின் சிறகு தான் கடவுள்…!

===வி.பரமேசுவரன்====

 

“கம்யூனிஸ்ட்டாக இருப்பது ஏதோ சமூகவிரோதியாக இருப்பது போன்று தாங்கள் கருதினால், அது தவறு. நான் கம்யூனிஸ்ட் இல்லை. என்னைப் போன்ற ஜனங்கள் துயரப்படுகையில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், உதவுவதும் அவர்களின் போராட்டங்களில் ஆத்மார்த்தமான பங்களிப்பு செய்வதும் கம்யூனிஸம் என்றால் அந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொள்கிறேன்.”

இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர் புதுமை எழுத்தாளர் பிரபஞ்சன். கதை, நாவல், கட்டுரை என பல துறைகளிலும் சிறகை விரித்து பறந்தவர் பிரபஞ்சன். இன்றைய அழுக்குப்படிந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பிரபஞ்சன் தனது நாவல்களில் ஆழமாக சித்தரிக்கிறார். ஆணைச்சார்ந்த உடமையாகவே பெண் என்றும் இருக்கிறாள். ஒருவனுக்கு அவள் தாயாக, காதலியாக, சகோதரியாக இருக்கிற நிலை இன்றுள்ள இலக்கியத்தில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உறவுகள் நீங்கிய மனுஷியாக அவளை நம் இலக்கியம் கண்டிருக்கின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை; நான் முயன்றிருக்கிறேன் என்று ‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்ற நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த நாவலில் மனித மனங்களின் கபட வேடங்களை படம்பிடித்துக் காட்டுகிறார். புதுமைப் பெண்ணாக சுமதி வலம் வரும் காட்சிகள் அற்புதம்.

 

அரசு பணியில் உள்ள சுமதியிடம் அவரது தந்தை கூறும் ஒரு காட்சி…….“அரசுப்பணியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொண்டு செய் ; அப்போது தான் சம்பளப் பணம் சந்தோஷம் தரும். இல்லாவிட்டால் அது திருட்டுப் பணம், லஞ்சப் பணம்.”

 

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் பக்கத்தில் அதன் சுற்றுச் சுவரை ஒட்டி இருக்கிற குடிசைகளை பிரித்துப் போடவேண்டும் என்ற ‘பைல்’ அரசு அதிகாரியான சுமதி மேசைக்குவருகிறது. அப்போது தனது தந்தை கூறிய மந்திர வாக்கு சுமதியின் மனதில் நிழலாடுகிறது. “ பெருகி வரும் நகர வளர்ச்சியின் பயனாக சேரிகள் உருவாகின்றன.

 

மத்திய தர மக்களையும் மேல் வர்க்க மக்களையும் சார்ந்து வாழ்கிற இடம் சேரியாகத்தான் இருக்க முடியும். அவர்களை தாம்பரத்திற்கு அப்பால் குடிசை போட்டுக்கொண்டு வாழச்சொல்வது மனிதாபிமான காரியமாக இருக்க முடியாது.” என்று பைலில் குறிப்பெழுதுகிறார் சுமதி. இந்த குறிப்பைப் பார்த்த உயர் அதிகாரி “ கம்யூனிஸ்ட்த்தனமான சிந்தனைகளை பைல்களில் எழுதுவது முறையற்றது” என்று எழுதி சுமதியிடம் விளக்கம் கேட்கிறார். சுமதி தரும் விளக்கத்தில் இவ்வாறு விளாசித்தள்ளுகிறார்.

 

“கம்யூனிஸ்ட்டாக இருப்பது ஏதோ சமூகவிரோதியாக இருப்பது போன்று தாங்கள் கருதினால், அது தவறு. நான் கம்யூனிஸ்ட் இல்லை. என்னைப் போன்ற ஜனங்கள் துயரப்படுகையில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், உதவுவதும் அவர்களின் போராட்டங்களில் ஆத்மார்த்தமான பங்களிப்பு செய்வதும் கம்யூனிஸம் என்றால் அந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொள்கிறேன்.”

 

சுமதியை மணக்க விரும்பும் கணேசன் கறுப்பு நிறம். “ எனது நிறம் மாறப்போவதில்லை ”என்று சுமதியிடம் கணேசன் கண்கலங்குகிறான். அதற்கு சுமதி தரும் பதில், “ தோலின் நிறம் என்பது நாம்பிறந்த ஜாதிகளைப் போன்றது. இரண்டுக்கும் நாம் பொறுப்பாளி இல்லை. நாம் வேண்டிப்பெற்ற வரம் அல்ல இந்த நிறமும், சாதியும். இரண்டும் நம்மில் திணிக்கப்பட்டவை.” நாவலில் சாதிக் கொடுமை மீது இப்படியொரு சாட்டையடி.

 

புதுமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதனுக்குத் தேவை என்பதை பிரபஞ்சன் ‘நானும் நானும், நீயும் நீயும்’ நாவலில் அழுத்தமாக பதிவு செய்கிறார். பெண்களை தீயில் தள்ளிவிடும் சதி வழக்கத்தை ஒழித்திருக்கிறோமே; கைம்பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இருந்த பழக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறோமே; பதினெட்டும், இருபத்தியொன்றும் வயதான பிறகுதான் கல்யாணம் என்கின்ற புதிய வழக்கத்தை கடைப்பிடிக்கிறோமே; இதெல்லாம் புதுமையை ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மைதானே என்று பிரபஞ்சன் வாதிடுகிறார். பண்பாடு, சம்பிரதாயம் என்ற திரைமறைவில் செப்பிடு வித்தை காட்டும் பரதேசிகளுக்கு சாட்டையடி தருகிறார்.

 

“நானும், நானும்… நீயும், நீயும்…” நாவலில் பேராசிரியர் அரசு தனது படைப்புகள் பற்றி சிநேகிதியிடம் விவரிக்கும் காட்சி புதிய சிந்தனையை துண்டுகிறது. “ ராவண வதம் முடிந்து , ராமன் திரும்புகிறான். தன் தம்பியைப் பார்த்து ‘தம்பி … ஓர் ஆழமான பள்ளம் வெட்டு; அதிலே நெருப்பை எரிய விடு; சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும்; அயலார் வீட்டில் பல மாதங்கள் இருந்தார் அல்லவா? அவள் கற்பை நிரூபிக்க வேணும் உலகுக்கு’ என்றான் ராமன் . இது எல்லோரும் எழுதியது தான். நான் கொஞ்சம் மாற்றி எழுதினேன். ராமர் சொல்லி முடிச்சதும் சீதை சொல்கிறார். ‘தம்பி, இன்னொரு பள்ளம் வெட்டு’ ‘ஏன் அண்ணி’ என்றான் லட்சுமணன்.

 

‘நான் ஊரில் இல்லாத சமயத்தில் ராமனின் சுத்தத்தையும் உலகத்திற்கு நிரூபிக்கவேணும் இல்லையா? அதுதானே நியாயமாக இருக்கும்? பழைய சீதையை இருபதாம் நூற்றாண்டு பெண்களுடன் இப்படி பேச வைத்து புதுமை சேர்க்கிறார் பிரபஞ்சன்.

 

தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வாழும் வாழ்க்கைப் பயணம் தான் அர்த்தமுள்ளது என்பதை இதே நாவலில் நயமுடன் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். அதிகார வர்க்கத்தில் உள்ளசிலரைப் பற்றி விமர்சிப்பது ஒரு தனி அழகு. “ காலை எட்டு மணிக்குப் போய், பேப்பர் தின்று, வேலை செய்து, அல்லது செய்வது போல் பாவனை செய்து, யாருக்கும் தெரியாமல் லஞ்சம் வாங்கி, பிளாட் வாங்கி, 60 வயதில் ஓய்வு பெற்று ரிடையர் ஆபீசர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்புறம் செத்துப் போகிற வாழ்க்கை ஒரு ரகம். மற்றது வீரனது வாழ்க்கை”.

 

நாவலில் கதைக்குள் கதை சொல்லும் ஒரு சுவாரசியமான காட்சி.“ஒரு நாரைக்கு கடவுளைக் பார்க்கணும்னு ஆசை. கடவுளைப் பார்க்கணும்னு புறப்பட்டு வானத்தை நோக்கி பறக்கத் தொடங்கிச்சாம். கடவுளைக் காணல. ஒரு மலைசிகரத்திலே வந்து உட்கார்ந்து கவலையில மூழ்கிடுச்சு. அப்போ ஒரு கழுகு வந்து பக்கத்திலே உட்கார்ந்துச்சு. ஏன் கவலையின்னு கேட்டது கழுகு. கடவுளை என்னால காண முடியலேன்னு வருத்தப்பட்டு சொன்னது நாரை. ‘அட முட்டாளே…உன்னோடு தானே கடவுள் இருக்கார். பிறந்ததிலிருந்து உன் கூடவே இருக்கார். உன் இரண்டு பக்கத்திலேயும் நீ பறந்து வாழ்வதற்கு துணையாக இருக்கார். இது கூட தெரியலையே உனக்கு’ என்று கழுகு சொல்லியதாம்.”
இதே நாவலில் இயந்திரகதியான இன்றைய சமூகத்தில் தனது தந்தையின் வாழ்க்கைப் பற்றி பேராசிரியர் அரசு கூறுவதை கேளுங்கள், “என் அப்பா நைட் வாட்ச்மேனாகவே இருந்து, 50 ஆண்டுகள் பணி செய்து காலமானார். இரவு வேலை முடித்துவிட்டு, பகல் முழுதும் தூங்குபவர் அவர். ஓய்வில் இருந்த ஆண்டுகள் இரண்டு வருஷம். ஒருநாள் பூங்காவுக்குள் நுழைந்தோம். அத்தனை பூக்களையும் ஒரு சேர அவர் அப்போதுதான் பார்த்தார்.

 

ஆச்சரியப்பட்டார்… காலை உலகம் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. எங்களை வாழ வைக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையை தொலைத்துவிட்டவர் அப்பா” என்று அரசு ஆதங்கப்படுகிறார். வாழ்க்கைப் பாட்டுக்காக ஒவ்வொருவரும் ஓடிஓடி உழைக்க வேண்டிய துயரத்தை சித்தரிக்கும் காட்சி வாசகர்களை நெகிழ வைப்பதாகும்.

 

மானுட தர்மத்தை நெறிப்படுத்த சகல அடிமைத்தனங்களையும் உடைத்து எறியப் போராடும் பெண்களின் பக்கமே நான் என்றும் நிற்பேன் என்று கம்பீரமாக பிரபஞ்சன் பிரகடனம் செய்கிறார். அவரது வீரிய எழுத்துக்கள் நீதி கேட்டு போராடும் மக்களுக்கு என்றென்றும் எழுச்சியூட்டும்.

தீக்கதிர்

Share:

Author: theneeweb