சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை ஆராயாமல் பகிர்வோர் அதிகம்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி ஆராயாமலேயே, பெரும்பாலானவர்கள் அதனைப் பகிர்ந்துவிடுவதாக அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, பிஹேவியர் அண்டு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 396 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், சமூக வலைதளங்களில் தங்களுக்கு வரும் செய்திகள் உண்மையானவையா, போலியானவையா என்பதை பெரும்பானவர்கள் ஆராயாமலேயே அதனை பிறருக்குப் பகிர்ந்து விடுவது தெரிய வந்தது.
இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தாருக்கும் பொருந்தும். மேலும், எல்லா வயதினரும், சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் எந்த வித பேதமும் இன்றி இதே தவறை செய்து வருகின்றனர்.

எனினும், ஒரு செய்தி போலியானதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

கூகுள் போன்ற தேடுதல் பொறியைப் பயன்படுத்தி, அந்தச் செய்திகள் நம்பத் தகுந்த வலைதளங்களில் வெளியாகியுள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், செய்திகள் வந்தவுடனேயே அதனை பகிரக் கூடாது. இதுபோன்ற செயல்கள் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க உதவும் என்பது எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், எங்களது ஆய்வு முடிவுகளின்படி, எந்தத் தகவலையும் சந்தேகித்து சரிபார்க்கும் வழக்கம் உடையவர்கள் பொய்ச் செய்திகளை பகிர்வது கிடையாது.
அதே நேரம், எந்தச் செய்திகளையும் உண்மையானது என்று நம்பி விடுபவர்கள் போலியான செய்திகளை தாரளமாகப் பகிர்ந்துவிடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது தற்போது உலகம் சந்தித்துள்ள மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

இந்தோனேசியா போன்ற நாடுகளின் அரசுகள் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், இணையதளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு வரும் தகவல்களை ஆக்கப்பூர்வமான முறையில் சந்தேகிக்கவும், அவற்றை சரிபார்க்கவும் வேண்டும்.
அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும் என்று ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb