டான்” தொலைக்காட்சி குகநாதன்

— நடேசன்-

 

நீரில் வாழும் மீன்போல் 40 வருடங்கள் ஊடகத்துறையில் தனது சுவாசக்காற்றை எடுத்து வாழும் “டான்” தொலைக்காட்சி குகநாதனை 2009 மார்ச் மாதத்தில் சந்தித்த பின்பு ஒரு சகோதரனாக எனக்கு நெருக்கமானவர்.இலங்கை சென்றால் அவருடன் தங்குவது, ஐரோப்பா சென்றால் அவரது குடும்பத்தினருடன் தங்கியது மற்றும் நல்லது கெட்டது எனப் பல விடயங்களில் பங்கு பற்றியபோது எனக்குத் தோன்றிய எண்ணத்தை இங்கே சொல்லவேண்டும்.

ஊடகம், எழுத்துத்துறை என்பது கொக்கெயின் போன்று போதை தரும் விடயம். அதில் உண்மையாக ஈடுபாடு கொண்டவர்கள் அதனிலிருந்து வெளியே வரமுடியாது. இவர்கள் உலகத்தில் தங்கள் மட்டுமே தனித்துவமான ஒரு படைப்புத் தொழிலில் ஈடுபடுவதாக நினைக்கிறார்கள். அந்த நினைப்பில் காலம் முழுவதும் வாழ்வார்கள்

உலகத்திற்குச் செய்திகளை மட்டுமல்ல, உண்மைகளைக் கூறி சாதாரண மக்களை இரட்சிக்க வந்தவர்கள் என்ற போதை தரும் நினைப்பால், இவர்கள் ஒரு கனவுலகத்தில் அலைவார்கள் . இந்தக்கனவுகளால் பலரது உயிர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் அழிக்கப்பட்டது எமக்குத் தெரியும்.

அதற்காகச் சிறைவாசம், அடி, உதை மற்றும் சமூகப் புறக்கணிப்பு என்பவற்றைப் பலர் அனுபவித்திருக்கிறார்கள். தொட்டால் விடாத இந்தப்போதை தரும் தொழிலில் பணம் பொருள் கிடைப்பது சொற்பம்தான். ஆனால், அதனால் உருவாகிய கனவுலகம் சஞ்சாரத்திற்கு மகிழ்வானது . அந்தக் கனவுலகின் மத்தியில் குடும்பம் , பிள்ளைகள் , ஏன் பொருளாதார நலன்கள்கூட மையப் புள்ளியில் இராது. இதனோடு ஒப்பிடக்கூடியது எனச்சொல்வதனால் அது அதிகாரப்போதை மட்டுமே.

நண்பர் குகநாதனது கூர்மையான அறிவும், வியாபார அணுகுமுறை, மற்றவர்களுடன் தொடர்பாடலை வைத்திருப்பது போன்ற விடயங்களைப் பார்த்தால், இந்த ஊடகத்துறையை விட்டு விலகி ஏதாவது வேறு தொழில் ஒன்றில் அவர் ஈடுபட்டிருந்தால் தற்பொழுது மில்லியனாராக மட்டுமல்ல பில்லியனராகவே இருந்திருக்கலாம் என்றும் எனக்குத் தோன்றியது .

குகநாதனது சாதனை எளிதானது அல்ல.

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாட்டிற்குப் புலம்பெயர்ந்த சென்ற மற்றவர்கள்போல் குகநாதனும், பாரீசில் வானொலியோ, அல்லது தொலைக்காட்சியோ இல்லையென்றால் மற்றைய இலாபகரமான தொழில்கள் பலவற்றைச் செய்திருக்கலாம். ஆனால், தனது பிறந்த நாட்டிற்கு வந்து டான் தொலைக்காட்சி சேவையால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், இளம் தலை முறைக்கு புதிய தகவல் தொழில் துறையை அவர் அறிமுகப்படுத்தியிருப்பது தமிழர்களாகிய நாம் வரவேற்க வேண்டிய விடயம்.

பிரான்சில் ஈழநாடு பத்திரிகை. அதன்பின்பு அங்கு தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்கியபோது அங்கு நேர்ந்த நெருக்கடிகள் பற்றி கேள்விப்பட்டிறிந்தேன் பின் இலங்கையில் டான் தொலைக்காட்சியை உருவாக்கியபோது ஏற்பட்ட துன்பங்களையும் நான் நேரில் அறிந்தவன் .

குடும்பத்தில் இருந்து பிரிந்து, இலங்கையில் அதுவும் போருக்கு பிந்தியகாலத்தில் உள்ள அரசியல் சமூக நெருக்கடிகளின் மத்தியில் முகம் கொடுத்து சொந்த பணத்தை முதலீடு செய்வது ஒரு குதிரையில் பணங்கட்டுவது போன்ற விடயம் என நான் யோசித்தாலும், அதை அவரிடம் சொல்வதில்லை . ஆனால், என் மனதில் தொடர்ச்சியான ஒரு பயம் நிழல்போல் தொடர்ந்து கொண்டிருந்தது .

அதற்கப்பால் குடும்பத்திற்கான பணத்தைக் கொண்டு வந்து இலங்கையைப்போல் ஓட்டைவாளியான நாட்டில் போடுவதற்கு திருமதி ரஜனி குகநாதன் எப்படி அனுமதித்தார் என்ற சிந்தனையும் கூடவருவது தவிர்க்க முடியாதது. அப்படி இருந்த எனது மனப்பயம், பிற்காலத்தில் டான் தொலைக்காட்சிக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தக்கட்டிடம் ஒன்று உருவாகிய பின்பே மறைந்தது.

யாழ்ப்பாணம் என்பது ஒரு பாலை நிலம் . இங்கு உள்ள உவர் அரசியல், சமூக நிலைமைகள் பல நல்ல விடயங்கள் உருவாகுவதற்குத் தடையானவை. அங்குள்ள சமூக மனநிலை, புதிய வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாகுவதற்கு எதிரானது. அப்படியான சமூக பின்புலத்தில் போர்க்காலத்தின் பின்பு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு டான் தொலைக்காட்சி நிறுவனத்தை இடம் மாற்றியதை சாதனையாகப் பார்க்கிறேன் . பாலைவனச்சோலையாக யாழ்ப்பாணத்தில் டான் தொலைக்காட்சி வளர்ந்து மக்களுக்குப் பயன்தரவேண்டும்.

எந்தவொரு சாதனையாளருக்கும் பின்பாக ஒரு பெண் இருப்பாள் என்பது கிளேிசே(cliché)-அதாவது பொதுவான சொல்லாடல் . அந்த வார்த்தையின் அர்த்தமே குகனது மனைவி ரஜனிதான் எனச் சொல்லமுடியும் .

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஊடகத்துறை இராஜபாட்டையல்ல. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு என்ற பத்திரிகையில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல நிறுவனங்களை உருவாக்கியபடி நாற்பது வருடங்கள் கல்லும் முள்ளும் உள்ள பாதையால் நடந்து வந்த குகநாதன் தொடந்தும் பல வருடங்கள் ஊடகத்துறையில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழவேண்டுமென உடன் பிறவாத சகோதரனாக வாழ்த்துகிறேன்.

Share:

Author: theneeweb