இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: இயக்குநர் பாரதிராஜா மனு தள்ளுபடி

திரைப்பட விழாவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்துமதக் கடவுளான விநாயகரை விமர்சித்தும், ஆண்டாள் விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டால் தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் என பேசியதாக  இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பாரதிராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், விழாவில் இந்துமதக் கடவுள்களை விமர்சித்து நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை.

மேலும் இந்த வழக்கு சம்பவம் நடந்து 4 மாதங்களுக்குப் பின் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி, ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு எதிராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி பாரதிராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share:

Author: theneeweb