திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் மீண்டும் நிராகரிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.
28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்த பிறகு, எஞ்சிய 27 நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய யூனியனுக்கும், தெரசா மே தலைமையிலான பிரிட்டன் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையிலான உறவு குறித்த அம்சங்கள் பிரிட்டனின் நலனுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி, அந்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம்  நிராகரித்தது.
அதையடுத்து, ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மாற்றம் செய்ய ஐரோப்பிய யூனியனுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், அந்த ஒப்பந்தமே இறுதியானது என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சிறப்பு சலுகைகளுடன் கூடிய உறவைத் தொடர்வதற்கான எந்த ஒப்பந்தமும்
இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிய நேரிடும் என்று தெரசா மே தெரிவித்து வந்தார்.

ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் இல்லாமலே அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான தீர்மானம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்டது.

எனினும், அந்தத் தீர்மானத்தையும் நாடாளுமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அயர்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதியில் திருத்தம் செய்ய ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாகக் கூறி, திருத்தப்பட்ட புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை பிரதமர் தெரசா மே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார்.

அந்த மசோதாவுக்கு  எதிராக 391 வாக்குகளும், ஆதரவாக 242 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, அந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், தேவையான மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதால் மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.இதன் காரணமாக, பிரெக்ஸிட் நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்துச் செல்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஏன் இந்த எதிர்ப்பு?

அயர்லாந்து தீவின் வடக்கே அமைந்துள்ள வடக்கு அயர்லாந்து, தற்போது பிரிட்டனின் அங்கமாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் இரு பகுதிகளுமே ஐரோப்பிய யூனியனின் அங்கம் என்ற வகையில், அயர்லாந்துக்கும், வடக்கு அயர்லாந்துக்கும் இடையிலான தாராள வர்த்தகம் நடைபெற்று வருகிறது உள்ளது.

இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்த பிறகு அயர்லாந்து நாடு ஐரோப்பிய யூனியனின் அங்கமாகவும், வடக்கு அயர்லாந்து நாடு பிரிட்டனின் அங்கமாகவும் மாறி விடுவதால், இரு பகுதிகளும் வெவ்வேறு நாடுகளாகிவிடும். இதனால், இரு பகுதிகளுக்கும் இடையே வர்த்தகக் கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இது, அந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனை ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் விரும்பவில்லை.

எனவே, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து இடையே சுதந்திர வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியான சிறப்பு சலுகைகளை, பிரெக்ஸிட் ஒப்பந்தம் வழங்குகிறது.
எனினும், தங்களது நாட்டின் ஓர் அங்கமான வடக்கு அயர்லாந்துக்கு அத்தகைய சிறப்பு சலுகை வழங்குவது, நாட்டின் இறையாண்மையை குலைக்கும் செயல் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வடக்கு அயர்லாந்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்துக்குக்கு காலக் கெடு விதிக்க வேண்டும் எனவும், அது சட்டரீதியில் ஐரோப்பிய யூனியனைக் கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே, பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

 

பிரெக்ஸிட்.. கடந்து வந்த பாதை…

1973-ஆம் ஆண்டில் நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியின்போது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்தது 1975-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் இணைந்திருப்பதற்கு மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1983-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலக்கப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது.
2014- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதை (பிரெக்ஸிட்) வலியுறுத்தி வரும் யுகேஐபி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மேலும், பிரெக்ஸிட் தொடர்பான பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் நடத்திய மக்களின் உறுதிமொழி இயக்கம் வலுவடைந்தது.
2015-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, பிரெக்ஸிட் குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் டேவிட் கேமரூன் வாக்குறுதி அளித்தார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். அந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட்டுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்த அப்போதைய பிரதமர் கேமரூன் பதவி விலகினார். பிரெக்ஸிட் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தெரசா மே புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.
2017-ஆம் ஆண்டில், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உறவு குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கியது
2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரிட்டனுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2019 ஜனவரி மாதம் – பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் 432-க்கு 202 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரித்தது.

Share:

Author: theneeweb