ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரிப்பு

பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனுக்கு ஐரோப்பிய நாடுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது.

ஏற்கெனவே, திருத்தப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்த நிலையில், ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கும் எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்காததால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஏற்கெனவே நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவின் திருத்தப்பட்ட வரைவை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதனை எம்.பி.க்கள் இரண்டாவது முறையாக நிராகரித்தனர். இந்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதாவை அவர் நாடாளுமன்றதில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அந்த மசோதா மீது ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் தங்கள் விருப்பம் போல் வாக்களிக்கலாம் என்று பிரதமர் தெரசா மே முதலில் அறிவித்திருந்தார். எனினும், மசோதா குறித்து பெரும் காரசாரமான விவாதம் நடைபெற்றதால் பிரதமர் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டை எதிர்க்கும் நிலைப்பாட்டைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்தச் சூழலில், மசோதாவுக்கு எதிராக 321 எம்.பி.க்களும், ஆதரவாக 278 எம்.பி.க்களும் வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா 43 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுகுறித்து தெரசா மே கூறியதாவது: ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், கெடு தேதியான மார்ச் 29-க்குள் ஒப்பந்தம் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், விதிமுறைகளின்படி எந்த ஒப்பந்தமும் இல்லாமலேயே பிரெக்ஸிட் நிகழ்ந்துவிடும்.

எனவே, பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து இல்லாத பிரெக்ஸிட்டைத் தவிர்க்க வேண்டுமென்றால், நாம் எதாவது ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டும். அது எத்தகைய ஒப்பந்தம் என்பதில்தான் தற்போது குழப்பம் நீடிக்கிறது என்றார் அவர். இதற்கிடையே, பிரெக்ஸிட்டுக்கான கெடு தேதியை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை தெரசா மே தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த மாதம் 29-யில் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.

எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் நாடாளுமன்றம் இருமுறை நிராகரித்தது. மேலும், ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காததால் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2-ஆவது பொது வாக்கெடுப்பு தேவையில்லை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான கால அவகாசத்தை மார்ச் 29-ஆம் தேதியிலிருந்து, ஜூன் 30 அல்லது அதற்கும் மேல் நீட்டிப்பதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 412 எம்.பி.க்களும், எதிராக 202 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எனினும், இந்த நீட்டிக்கப்படும் காலகட்டத்தில் பிரெக்ஸிட் மீது 2-ஆவது பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

Share:

Author: theneeweb