ஞானசாரருக்கு ஒரு சட்டம் ; விஜயகலாவுக்கு இன்னொரு சட்டமா?- கம்மன்பில

புலிகள் வேண்டும் என கூறிய விஜயகல மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப் படுகின்றார் ஆனால்  பெளத்த வாதம் பேசிய ஞானசார தேரர் சிறைக்கு செல்லவேண்டியுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சி,வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பௌத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை ஏனைய மதங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெளத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும் என பிரதமரும், சபை முதல்வரும் கூறினாலும் கூட இன்ற அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும்  ஒரே மட்டத்துக்கு கொண்டுவருவதன் முகமாக பெளத்தத்திற்கு இதுவரை கொடுத்த முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பில் 9 ஆம் உறுப்புரிமை ஒருபோதும் மாற்றப்படாது என கூறிய இவர்கள், மகாநாயக தேரர்கள் முன்னிலையில் மண்டியிட்டு கூறிய இவர்கள் இன்று கைகளையும், கால்களையும், தலையையும் நுழைத்து அரசியல் அமைப்பினை மாற்றும் நிலைமை உருவாகியுள்ளது.

புத்தசாசன அமைச்சருக்கோ அல்லது  பிரதமருக்கோ அரசியல் அமைப்பில் பெளத்தத்திற்கான முன்னுரிமையை மாற்றியமைக்க அவசியம் இல்லையென்றாலும் கூட நிழல் பிரதமர் சுமந்திரனும் இவற்றை மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.  அவரிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசியல் அமைப்பின் 9 ஆம் உறுப்புரிமையை மாற்றக்கூடாது என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இன்று பெளத்த முக்கியத்துவம் அழிக்கப்பட்டுள்ளது.

பௌத்தர்கள் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தமது மத நடவடிக்கைகளை அனுஷ்டிக்க முடியும். ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு  நடக்கவில்லை. சாம்பூர் பெளத்த சில உடைக்கப்பட்ட சம்பவம் இதற்கு நல்லதொரு உதாரணம். குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டனர். இந்த நிலைமை மேலும் தொடர்ந்தாள் இந்த நாட்டில் பிரதான பெளத்த பகுதிகளே அழிக்கப்படும் நிலைமை உருவாகும்.

மன்னர் நீதிமன்றத்திற்கு கல் வீசக்கூறிய நபர் இன்று அரசாங்கத்தில் அமைச்சரவையில் உள்ளார், புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய விஜயகலா எம்.பி இன்று அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ளார்.

ஆனால் நாட்டில் பெளத்த வாதம் பேசிய  ஞானசார தேரர் இன்றும் சிறையில் உள்ளார். இதுவே இந்த அரசாங்கத்தின் நிலைமை. ஞானசார தேரருக்கு செயற்பட்ட சட்டம் ஏன் விஜயகலா எம்.பி விடயத்தில் செயற்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

மேலும் இன்று தமிழ் பிரிவினைவாதிகள் வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழர் பகுதிகள் என கூறுகின்றனர். உலகம் முழுவதும் தமிழ் பிரிவினைவாதிகள் இந்த கருத்துக்களை  பரப்பி வருகின்றனர்.

ஆனால்  வடக்கில் பௌத்தம் பலமாக இருந்தது. அது சான்றுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை வடக்கு நிராகரித்து  வருகின்றது. இதற்கு முழு மூச்சாக செயற்பட்டது வடக்கின் முன்னாள் முதல்வர்  விக்கினேஸ்வரன்.

வேலை செய்யத்தெரியாத தமது இயலாமையை மறைத்துக்கொள்ள  முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன்  வடக்கில் பெளத்த நிராகரிப்பை கையில் எடுத்தார். தொல்பொருளியல் திணைக்களம் வடக்கில் எந்த பாதுகாப்பு நடடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை இருந்தது. ஆகவே இவர்கள் பெளத்தத்தை அழிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb