தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்

கருணாகரன்   —-

 

முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள சுண்ணாகத்தில் ஓயில் கலந்து விட்டது. அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மின்பிறப்பாக்கிகளின் கழிவு ஓயில் மண்ணில் ஊறி நீரூற்றுக் கண்களை மாசுபடுத்தி விட்டது. போறபோக்கில நிலாவரை ஊற்றும் கெட்டிடும் போலிருக்கு” என்ற அபாயக் குரல்கள் பெரிதாக ஒலித்தன.

இந்த அபாயக்குரலை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலானோர் தங்கள் கிணறுகளைக் கவலையோடு எட்டிப்பார்த்தனர். காலாதிகாலமாக இந்தக் கிணறுகளிலிருந்தே நீரெடுத்துக் குடித்ததும் சமைத்ததும் கோயிலில் பொங்கலிட்டதும் பிற கொண்டாட்டங்கள் செய்ததும் நடந்தது. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து வேறு ஊர்களுக்குச் சென்றபோது கூட பலருடைய வாயிலும் வந்த வார்த்தைகள், “என்ன இருந்தாலும் எங்கட வீட்டுத் தண்ணியை மாதிரி வராது. எங்கட கிணத்தில இருந்து பச்சைத் தண்ணியை அள்ளிக் குடிச்சிட்டுப் படுத்திருக்கலாம். பசி, தாகம் எல்லாம் தீர்ந்திடும்” என்பதாகவே இருந்தது.

அப்படிப் பெருமிதமாக நம்பிக்கொண்டிருந்த கிணறுகள் இப்படித் திடீரெனக் கைவிடுவதென்றால்…!

இந்த அதிர்ச்சித் தகவலைத் தாங்க முடியாத பத்திரிகைகள் ஐயோ என்று கூக்குரலிட்டன. சனங்கள் திகைத்துத் துக்கித்தனர். அரசியல் தரப்புகள் இதை அவரவருக்கு ஏற்றமாதிரி தங்களிடமிருந்த அளவு கோல்களால் அளக்க முற்பட்டன. எவருக்கும் அடுத்ததாக என்ன செய்வதே என்று தெரியவில்லை. பலரும் சுத்திகரிக்கப்பட்ட போத்தல் தண்ணீரை வாங்கிப் பாவிக்கத் தொடங்கினார்கள். நாளொன்றுக்கு பல லட்சம் ரூபாய்கள் குடிநீருக்காக யாழ்ப்பாணத்துக்கு வெளியே போகிறது என்று கவலைப்பட்டார் குமாரதேவன். இந்த நிலையில் சில இளைஞர்கள் மட்டும் இந்தப் பிரச்சினையைக் குறித்துக் கொஞ்சம் சீரியஸாகச் சிந்திக்க முற்பட்டனர்.

அவர்கள் இதை ஒரு விழிப்பு நிலைக்குக் கொண்டு வர விரும்பினர். இதற்காக அவர்களால் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏறக்குறைய யாழ்ப்பாணத்தை உலுக்கி, ஒரு கணம் சிந்திக்க வைத்த போராட்டம் அது.

மாகாணசபை தொடக்கம் மத்திய அரசு வரையில் தலையைப் பிய்க்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தது.

ஆனால் எந்தப் பெறுமானங்களையும் பெறாமல், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல், அதில் வெற்றியை எட்டாமல் அந்தப் போராட்டத்தை அப்படியே மெல்லக் காயடித்துக் கை விட்டது யாழ்ப்பாணச் சமூகம்.

இப்பொழுது நீர் மாசு பற்றிய கதைகளில்லை. ஓயில் கழிவு பற்றிய பேச்சுகளைக் காணோம். அப்படியென்றால் எல்லோரும் தங்களுடைய கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்களா? என்றால், அப்படியில்லை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து வரும் போத்தல் தண்ணீரையே எல்லோரும் வாங்குகிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றவர்கள் மட்டும் இதில் சேர்த்தியில்லை. மற்றும்படி தண்ணீர் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்காக தெரு நீளத்துக்குக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன. இந்தக் குழாய்களுக்கு எங்கேயிருந்து எப்படித் தண்ணீர் வருமென்று யாருக்கும் தெரியாது. இதைப்பற்றி இந்தப் பத்தியாளர் சில நாட்களுக்கு முன்பும் குறிப்பிட்டிருந்தார்.

குமாரதேவனுடைய கவலைக்கேற்ற மாதிரி தினமும் தண்ணீருக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகை பணம் வெளியே போகிறது. தண்ணீர் வணிகம் வளர்ந்து கொண்டு வருகிறது.

இது எங்கே போய் எப்படி முடியும் என்றும் யாருக்கும் தெரியாது. யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு தினசரிகள் வருகின்றன. தனியாக நான்கு வாரப் பத்திரிகைகள் வெளியாகின்றன. தொலைக்காட்சிகள் இரண்டு ஒளிபரப்பாகின்றன. பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், சக்திகள் உள்ளன. தண்ணீர்ப்பிரச்சினையை தொடக்கத்தில் இவையெல்லாம் கண்ணீர் மல்கப் பேசின. இப்பொழுது ”முன்னொரு காலத்திலே யாழ்ப்பாணத்திலே தண்ணீர்ப்பிரச்சினை என்றொரு விடயம் இருந்தது” என்று சொல்லுமளவுக்கு இவற்றுக்கும் இந்தப் பிரச்சினைக்குமான இடைவெளி (தூரம்) வந்து விட்டது.

“அப்படியென்றால், யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக இயக்கங்கள், புத்திஜீவிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?” என்று இப்பொழுது நீங்கள் கேட்கலாம்.

கையை விரிப்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

ஒரு தண்ணீர்ப்பிரச்சினைக்கே தீர்வைக் காண முடியாத அளவுக்குத்தான் இன்றைய யாழ்ப்பாணம் உள்ளது. இதையிட்டு யாரும் கோபப்படத் தேவையில்லை. பதிலாக வெட்கப்பட வேண்டும்.

ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பிரதேசங்களில் நிலத்தடி நீர் மிகச் சிறப்பாகவே உள்ளது. அதைக் கெட்டு விடாமல் பராமரிக்கும் பொறுப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும். இதற்குரிய பொறிமுறையில் ஊரில் உள்ள குளங்கள் ஆழப்படுத்தப்பட்டாலும் இன்னும் இது போதா நிலையே காணப்படுகிறது. தொண்டமானாறு, நாவற்குழி போன்ற இடங்களில் நீர்த்தடுப்பணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தொடர்ந்து தொடர்ச்சியான அவதானிப்பும் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

அடுத்தது, புவியியல் ரீதியாகவே நல்ல தண்ணீர் இல்லாத உவர் நீர்ப்பிரதேசங்கள் உள்ளன. தீவுப்பகுதி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், சுழிபுரம், வடமராட்சியில் கரவெட்டி, உடுப்பிட்டி, நெல்லியடியில் சில பிரதேசங்கள், தென்மராட்சியில் பல இடங்கள் மற்றும் யாழ்ப்பாண நகரைச் சூழவுள்ள பிரதேசங்கள் என.

இவற்றுக்கு குழாய் நீர் விநியோகமே ஒரே வழி. அதற்கு எங்கே இருந்து நீரைக் கொண்டு வருவது என்பதே அறியாப் பிரச்சினை. தீராப்பிரச்சினை எல்லாம்.

இதற்கெல்லாம் முதலில் யாழ்ப்பாணத்தில் முறையான கழிவகற்றல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். இதைப்பற்றி பலரும் பேசி வருகின்றனர். மனேஜர்ஸ் போறத்தில் இது தொடர்பான பல கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. ஊடகங்கள் சிலவும் இதைக்குறித்து உரையாடியுள்ளன. ஆனால், இதொன்றும் கவனத்திற் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை.

இந்தக் கழிவகற்றல் பற்றிய பேச்சு வந்தபோது ஒரு நண்பர் கேட்டார், “எந்த வீட்டிலிருந்து மலக்கழிவகற்றல் நடக்கிறது? அதற்கான வசதிகள் எத்தனை வீடுகளில் உண்டு? அப்படிக்கழிவை அகற்ற வேண்டும் என்று யாராவது சிந்திக்கிறார்களா? பொதுவாகவே கழிவகற்றலைக் குறித்து நகரசபை, பிரதேச சபைபோன்றவையே கவனத்திற் கொள்வதில்லை. இப்படியிருந்தால் தண்ணீர் கெடாமல் வேறு எப்படி இருக்கும்?” என.

எனக்குத் தெரிய எவருடைய வீடுகளிலிருந்தும் மலக்கழிவை அகற்றுவது நடக்கவில்லை. அவ்வளவு கழிவுகளும் தலைமுறை தலைமுறையாக வளவுகளுக்குள் சேகரித்துப் பாதுகாக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றாமல் அவற்றை அப்படியே பெறுமதியாகச் சேகரித்து வைத்திருக்கும் மக்களாக யாழ்ப்பாண மக்கள் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாண மக்கள் கக்கூஸ்களை உருவாக்கும் முறையே அலாதியானது. மலக்குழிகளை அவற்றுக்குரிய சரியான முறைமையில் அமைப்பது கிடையாது. குழியைக் கட்டும்போது அடிப்பாகத்தை அடைப்பதே கிடையாது. மலம் மண்ணில் செமிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு ஏறறமாதிரி கீழ்ப்பகுதியை கொங்றீற் பண்ணால் மண்ணோடு இணைத்து விடுவார்கள்.

இதனால் எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனை பேர் பாவித்தாலும் எந்த மலக்குழியும் நிரம்பாது.

இது நிலத்தையும் சூழலையும் கெடுக்காமல் வேறு என்ன செய்யும்?

சரி, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மலக்குழிகளில், கழிவகற்றல் பொறிமுறையில்தான் தவறோ, பிழையோ என்றால், இப்பொழுது அமைக்கப்படுவது மட்டும் என்ன?

அதே பழைய பல்லவிதான்.

புதிதாக அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களிலும் புதிய மலசல கூட நிர்மாணத்தின்போதும் இந்த விடயம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாலும் அதிகாரிகளாலும் குறித்துப்பேசப்படுகிறது. கழிவகற்றலுக்கு ஏற்றமாதிரி நிர்மாணிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் கேட்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு இடத்துக்குப் போயிருந்தேன். அங்கே புதிய முறைப்படி மலக்கழிவை அகற்ற வேண்டும் என்று தொழில் நுட்ப உத்தியோகத்தர் வலியுறுத்தியிருந்தார். அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர் இறுக்கமான கண்காணிப்பையும் மேற்கொண்டிருந்தார்.

ஆனாலும் என்ன பயன்?

ஏனென்றால் அந்தத் தொழில் நுட்ப உத்தியோகத்தரின் காதில் பூவைக்கிறமாதிரி, அவர் நிர்மாணப் பணிகள் நடக்கும் இடத்தைக் கண்காணித்து அறிக்கையிட்டபிறகு இரவோடிரவாக மலக்குழிகளின் அடிப்பாகத்துக்கு இடப்பட்ட கொங்கிறீற்றை உடைத்து அதை வெறும் நிலமாக்கி விடுகிறார்கள்.

து தவறல்லவா என்று அந்த மக்களிடம் கேட்டேன்.

நிலத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது எந்தக் கழிவையும் அப்படியே நாலு நாளில் அடையாளம் தெரியாமலாக்கி விடும். இந்தா இந்த இடத்தில் நெருப்பை மூட்டுங்கள். இன்றைக்கு நிலம் அப்படியே கொதித்துப்போயிருக்கும். இரண்டு வாரத்துக்கு சுடுமணலாகத் தெரியும். இரண்டு வருசத்தில இதில என்ன நடந்தது என்று தெரியுமா? இது மண்ணய்யா, மண். இயற்கை. வழியில் நாயெல்லாம் மலம் கழிக்கிது. அது அப்படியே நாறிக்கிடக்குதா? அடையாளம் தெரியாமல் அப்படியே மக்கிப்போகுது. இயற்றை எல்லாத்தையும் சீர் செய்திடும். எங்கட மண்ணுக்கு அப்பிடியான சிறப்புக்குணமிருக்கு. வெளிநாடுகளில் மலம் நாறலாம். இங்க அப்படி நாறாது” என்றார்.

எனக்கு மறு பேச்சே வரவில்லை. அவரோடு அதற்கு மேல் என்ன பேசுவது?

அவரைப்போலத்தானிருக்கிறார்கள் பலரும். நாம் அவர்களுடன் எதை எப்படிப் பேசுவது?

இது அந்தச் சனங்களின் பழக்கம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றவேணும். அவர்களைக் கோவித்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்கிறார் இன்னொரு நண்பர்.

அவர் சொல்வதிலும் நியாயமிருக்கலாம்.

ஆனால், அதற்கிடையில் வேக வேகமாக நிலமும் நீரும் கெட்டு விடும். நிலமும் நீரும் கெட்டால் நாமும் நமது உடலும் கெட்டுவிடும்.

இதற்கெல்லாம் காரணம், இந்தச் சனங்களின் மூளை கெட்டதே என்கிறார் இன்னொரு நண்பர். இதை நான் சொல்ல முடியாது. பெரிய ரத்தக்களரிதான் ஏற்படும்.

யாழ்ப்பாணத்தில் சிறுநீரகப்பாதிப்புக்கும் கான்ஸர் போன்ற தீரா வியாதிகளுக்கும் தண்ணீர் கெட்டதும் உணவுப்பழக்கம் பாழானதும் சூழல் தவறியதுமே என்கின்றனர் மருத்துவர்கள்.

நல்லனவற்றை யார்தான் கேட்கிறார்கள். சாத்தானின் சொல்லுக்கே மனிதர்கள் செவி கொடுக்கிறார்கள் போலும்.

Share:

Author: theneeweb