ஊழல் மோசடிகளை ஒழிக்கும் புதிய சட்டதிட்டங்கள் அறிமுகம்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான தேசிய செயற்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களைக்கொண்ட இந்த தேசிய செயற்திட்டம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

ஒரு வருட காலமாக இலஞ்ச ஊழல் சட்ட மூலத்தில் இலஞ்ச ஊழல், சொத்துக்கள் தொடர்பான தண்டனை மற்றும் அதனோடு இணைந்த பலவீனமான சட்ட திட்டங்கள் மற்றும் கட்டளைகள் தொடர்பில் கருத்துக்கள் ஆராயப்பட்டன. அவை அமைச்சரவையின் அனுமதியோடு திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய சட்டதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்து வருட திட்டமே இன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து அதனூடாக பொருளாதார சமூக கலாசார சுற்றுச்சூழலை ஏற்படுத்தி நிலையான அபிவிருத்தியை நாட்டில் முன்னெடுக்கும் வகையில் மேற்படி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகல துறையையும் சார்ந்த தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு மேற்படி ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் செயற்திட்டம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அனுசரணையோடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் சாதாரண மக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது சில அதிகாரிகள் அல்லது உத்தியோகத்தர்களால் நடைமுறையிலுள்ள அறவீட்டுக் கட்டணங்களுக்கு மேலதிகமாக நிதி அல்லது வேறு விதமான நன்கொடை இலஞ்சமாக பெறப்படுகின்றது. அவ்வாறான எதனையும் பெற்றுக்கொள்ளும் எந்த உரிமையும் அதிகாரமும் அரச அதிகாரிகளுக்கு கிடையாது. அதனை முற்றாக தடைசெய்யும் வகையிலேயே மேற்படி செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தகையோரை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு உரிய நியதிகளும் இதிலுள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க சகல அரச நிறுவனங்களிலும் இது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார்.

2016 ஆம் ஆண்டு பிரிட்டனில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஊழல் மோசடிகளை ஒழிக்கும் திட்டத்தை இலக்காகக் கொண்டு தேசிய செயற்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழியளித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதியின் வழிகாட்டலில் மேற்படி தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜுலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் ஊழல் மோசடி எதிர்ப்பு விசேட மாநாட்டின் போது நாடு முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் இலஞ்ச ஊழல் ஒழிக்கப்பட்டு முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது அது தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb