உலகின் போலீஸ்காரராக அமெரிக்கா இனியும் செயல்படாது: டிரம்ப் திட்டவட்டம்

 

உலகின் போலீஸ்காரராக அமெரிக்கா இனியும் செயல்படாது என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி, இராக்கில் பணியாற்றி வரும் அமெரிக்க வீரர்களை அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.இராக் நாட்டுக்கு முன்னறிவிப்பின்றி அவர் திடீர் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.வீரர்களிடையே உரையாற்றிய பிறகு, செய்தியாளர்களிடம் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:உலகின் போலீஸ்காரராக அமெரிக்கா இனியும் தொடர்ந்து செயல்படாது.

 

அமெரிக்கா மீது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும். அவ்வாறு தாக்குதல் நிகழ்த்துபவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பின்விளைவுகளைச் சந்திப்பார்கள். இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு, இராக்கை ஒரு தளமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும். சிரியாவைப் பொருத்தவரை, அங்கு ஐ.எஸ்.ஸுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய முழு சுமையையும் அமெரிக்காவே சுமக்க வேண்டியதில்லை. எனவேதான், அங்கிருந்து அமெரிக்க வீரர்களை திரும்ப அழைக்க உத்தரவிட்டுள்ளேன்.

 

அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அந்தப் பணியில் சிரியா பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளும் பங்கெடுக்கும்.
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளேன் என்றார் அவர்.

 

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர்.அவர்களது அதிவேக முன்னேற்றத்தாலும், கொடூரமான போர் முறையாலும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ராணுவ பலம் அதிகரித்தது.

 

இந்த நிலையில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையிரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன. ஐ.எஸ்.ஸுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அதிரடியாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

 

அவரைத் தொடர்ந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான சர்வதேச கூட்டணியின் அமெரிக்கத் தூதர் பிரெட் மெக்கர்கும் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில், சிரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.அமெரிக்கா வெளியேறிய பிறகு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதையடுத்து, துருக்கியால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு குர்துப் படையினரின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது.

 

தங்கள் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடும் குர்துகளுக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணுவம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சூழலில், அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவ ஆதிக்கம் அதிகரித்தால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த அளவுக்கு அழிவைச் சந்தித்திருப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ள குர்துப் படையினர், துருக்கி ராணுவத்தால் வேட்டையாடப்படுவார்கள் எனவும், இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் மேலோங்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

 

இந்தச் சூழலில், இராக்கில் திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb