வெறுப்பு அரசியலில் விளைந்த நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு!

நியூசிலாந்து தேசத்தில் கிரைஸ்டுசர்ச் நகரில் மார்ச் 15ம் தேதி அல்நூர் மற்றும் லின்வுட் ஆகிய இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. 5 இந்தியர்களும் இரண்டு இந்திய வம்சாவளியினரும் காணவில்லை என நியூசிலாந்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பயங்கரவாதிகள் பல சமயங்களில் துப்பாக்கிச் சூடு அல்லது குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் நியூசிலாந்து பயங்கரவாதச் செயல் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாத்துக்கு எதிரானது என அச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் சொல்லும் செயல்களும் தெளிவாக்குகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய சில பயங்கரவாதிகளின் செயல்களுக்கு அனைத்து முஸ்லிம்களும்தான் பொறுப்பு என வெறுப்பு மிகுந்த கருத்தாக்கத்தை சில அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து விதைத்து வருவதன் விளைவாக இத்தகைய வெள்ளை இன பயங்கரவாதிகள் உருவாகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை!
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை இந்தியாவில் அபினவ் பாரத் எனும் இந்துத்வா வெறி அமைப்பு பல குண்டு வெடிப்புகள் மூலம் நிரூபித்துள்ளது. இப்பொழுது நியூசிலாந்து பயங்கரவாதச் செயல் அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இதுவரை ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்நூர் மசூதியில் தாக்குதலில் ஈடுபட்ட பிரெண்டன் டாரென்ட் எனும் பயங்கரவாதி தனது தலையில் காணொலி புகைப்படக் கருவியை பொருத்திக் கொண்டுதான் சரமாரியாக சுட்டுள்ளான். சுடப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மீது மீண்டும் மீண்டும் சுடுவது பதிவாகியுள்ளது. இந்த செயலை உலகம் முழுதும் உடனடியாக காண வேண்டும் என்பதே இந்த பயங்கரவாதியின் நோக்கமாக இருந்துள்ளது. பிரெண்டன் டாரென்ட் இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்காக காரில் வந்த பொழுது ரெடொவன் கராட்சிக் எனும் போஸ்னியா தேசத்தை சேர்ந்தவனை புகழ்பாடும் பாடலை கேட்டபடியே வந்துள்ளான். இந்த ரெடொவன் போஸ்னியாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப் படுகொலை செய்ததற்காக சிறை தண்டனை பெற்றவன்.

வெள்ளை இன பயங்கரவாதியின் அறிக்கை
துப்பாக்கிச் சூடுக்கு சில மணி நேரங்களுக்கு முன் பிரெண்டன் டாரென்ட் 74 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளான். அதில் அவனது கருத்துகள்/ நோக்கங்கள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமானவை:
நான் ஒரு பாசிஸ்ட்! வெள்ளை இனவாதி!

உலகிலேயே தலை சிறந்த இனம் ஐரோப்பிய வெள்ளை இனம்தான்!
வெள்ளை இனத்தின் பரிசுத்த தன்மையை பாதுகாப்பது மிக அவசியம்!
வெள்ளை இனத்தவருக்கு மட்டுமே சொந்தமான ஐரோப்பா/ அமெரிக்கா/ நியூசிலாந்து ஆகிய தேசங்களில் மற்றவர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் குடியேற அனுமதிப்பது        ஏற்றுக்கொள்ள முடியாது.

இது தொடர்ந்தால் வெள்ளை இன ஐரோப்பியர்களைவிட முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.

இத்தகைய தாக்குதலுக்காக இரண்டு ஆண்டுகளாக திட்டமிடப்பட்டது.
சிலருக்கு பயிற்சி அளிக்கவே நான் நியூசிலாந்து வந்தேன். ஆனால் இங்கும் முஸ்லிம்கள் இருந்ததால் இங்கேயே இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டோம்.
நியூசிலாந்தை தேர்வு செய்ததற்கு காரணம் கடைக்கோடியில் உள்ள தேசத்தில் கூட வெள்ளை இனத்திற்கு ஆபத்து உள்ளது என்பதை நிரூபிக்க!
எனக்கு உத்வேகத்தை தருபவர்கள் நார்வேயை சேர்ந்த ஆண்ட்றஸ் பெல்விக் (2011ல் பல குழந்தைகள் உட்பட 77 பேரை சுட்டுக் கொன்றவன்) மற்றும் டைலான் ரூஃப் (2015ல் அமெரிக்கா தேவாலயத்தில் 9 கறுப்பினத்தவரை சுட்டுக்கொன்றவன்).

இப்படி ஏராளமான அதிதீவிர வெறித்தனமான கருத்துக்கள் இந்த அறிக்கையில் உள்ளன. இந்த பயங்கரவாதியிடம் நீதிபதி கொலைக்குற்றம் எனத் தெரிவித்த பொழுது ஒரு ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்தினான். இந்த கொலைகள் குறித்து அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை என்பது தெளிவு!

சுமார் 43 இலட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்தில் முஸ்லிம்கள் 1.1சதவீதம் மட்டுமே! எனினும் வெள்ளை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை நியூசிலாந்து மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக நின்று கண்டித்ததும் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கவை. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் “உயிரழந்தது மற்றவர்கள் அல்ல! அவர்கள் நியூசிலாந்து மக்கள்! அவர்கள் நாங்கள்! எங்களில் ஒருவர் அவர்கள்” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏராளமான தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு போதும் இந்திய பிரதமர் நியூசிலாந்து பிரதமர் போல ஆறுதல் வார்த்தைகளை கூறியது இல்லை. நியூசிலாந்து மக்களில் 99சதவீதம் பேர் தமது தேசத்திற்கு முஸ்லிம்களும் ஏனைய இனத்தவரும் வருவதை ஆதரிக்கின்றனர். அவர்களின் வருகையால் நியூசிலாந்து வளர்ச்சி பெறுகிறது என பதிவு செய்துள்ளனர். வெள்ளை இன பயங்கரவாத அமைப்புகள் மற்றும் நவீன நாசகர பாசிச அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் ஆல்ட் ரைட் (Alt Right), பிரான்சில் தேசிய முன்னணி, கிரீஸில் கோல்டன் டான் (Golden Dawn) அமெரிக்காவில் ஆரிய சகோதரத்துவம்(Aryan brotherhood)/ டீ பார்ட்டி/ தேசிய கூட்டணி (National Alliance) ஆகியவை இவற்றில் சில! இந்த பாசிச அமைப்புகள் பல அரசியல் தலைவர்களை முன்நிறுத்துகின்றன. இந்த அரசியல் தலைவர்கள் முதலாளித்துவ தேர்தல் முறையில் வெற்றி பெற்றால் இந்த அமைப்புகள் வன்முறையையும் வெறுப்பு அரசியலையும் புதிய நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அமெரிக்காவின் டிரம்ப்/ ஹங்கேரியின் விக்டர் ஓர்பன்/ பிரேசிலின் பொல்சானரோ ஆகிய தலைவர்கள் இதில் அடங்குவர்.  நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கமும் அதனை வழிநடத்தும் பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இல்லாமல் இந்த பட்டியல் நிறைவு பெறாது. துப்பாக்கிச் சூடு நடத்திய பிரெண்டன் டாரென்ட் தனது அறிக்கையில் முன்வைத்த பல கருத்துகள் சங்பரிவாரம் இந்தியாவில் முன்வைப்பவை எனில் மிகை அல்ல. சங்பரிவாரத்தின் வெறுப்பு அரசியல்தான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவ சிறுபான்மைமக்களிடையே ஆழமான அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. இவர்களின் மாபாதக செயல்கள் சீக்கிய மதத்தையும் விட்டுவைக்கவில்லை. சீக்கியம், பவுத்தம், சமணம் ஆகிய இந்திய மண்ணில் உருவான மதங்களை விழுங்கிட சங்பரிவாரம் திட்டமிடுகிறது. வெறுப்பு அரசியல் எத்தகைய பயங்கரத்தை விளைவிக்கும் என்பதை நியூசிலாந்து தாக்குதல் தெளிவாக்குகிறது. அதுவும் ஒரு பெரும்பான்மை சமூகம் மதவெறி அல்லது இனவெறி இதனை கையில் எடுத்தால் மிக மிக ஆபத்தான ஒன்றாக அமையும். இந்திய சமூகம் அத்தகைய பல ஆபத்துகளை அனுபவித்துள்ளது. இன்னும் எதிர் நோக்கியுள்ளது. மோடி அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது பா.ஜ.க.வையும் அதனை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் சங்பரிவாரம் உமிழும் வெறுப்பு அரசியலையும் பின்னுக்கு தள்ளுவது என்பதாகும். நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் அதனை மீண்டும் ஒருமுறை நமக்கு வலுவாக நினைவூட்டியுள்ளது.

தீக்கதிர்

Share:

Author: theneeweb