மாற்றுச் சக்திகள் தயாரா?

–    கருணாகரன்

இலங்கை அரசியல் அரங்கிலும் ஊடகப் பரப்பிலும் தேர்தல் பற்றிய உரையாடல்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புண்டு. சிலவேளை மூன்றாவது தேர்தலுக்கான சாத்தியங்களுமிருக்கின்றன.

முதலில் வரப்போவது ஜனாதிபதித்தேர்தலே எனப் பலரும் கணிக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரியே போட்டியாளர்களைப் பற்றிய விவரங்களும் பேசப்படுகின்றன. பெரும்பாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை மையப்படுத்திய உரையாடல்களே அதிகமாக நடக்கின்றன. (கோத்தபாய ராஜபக்ஸவை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பவில்லை என்றொரு கதையும் உண்டு). கோத்தபாய ராஜபக்ஸவுடன் மைத்திரிபால சிறிசேன, கருஜெயசூரிய ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இதைவிட சிவாஜிலிங்கம் போன்ற அதிரடிச் சிங்கங்களும் எதிர்பாராமல் களத்தில் குதிக்கலாம்.

ஆனால், இதற்கு முன்பாக மாகாணசபைத் தேர்தல் வந்தாலும் வரலாம். இப்பொழுதே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணசபைகள் கலைக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டன. அதற்கான தேர்தலே முதலில் வரவேண்டியது. அதுவே ஜனநாயக ரீதியில் சரியானது. ஆனால், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை. தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பென்று சொன்னாலும் அது இன்னும் அப்படியான நிலையில் தொழிற்படவில்லை. அடுத்த சில மாதங்களுக்குள் தேர்தல் நடக்கவில்லை என்றால் பதவி துறப்பேன் என்று பிரகடனம் செய்திருந்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர். அப்படியிருந்தும் தேர்தல் நடக்கவில்லை. ஏனெனில் இலங்கையில் தேர்தல் என்பது அதிகாரத்திலிருக்கும் தரப்பின் லாபநட்டக்கணக்கின்படியே நடத்தப்படும் ஒன்றாகும். ஆகவேதான் முதலில்  ஜனாதிபதித்தேர்தலை நடத்தலாம் என்ற கணக்குப்போடப்படுகிறது.

அப்படி ஜனாதிபதித்தேர்தல் வருமாக இருந்தால் அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் உடன் நிகழலாம். ஏனெனில் வெற்றியடையும் தரப்பு தனக்குரிய சாதக, பாதகங்களைப் பார்த்து பாராளுமன்றத் தேர்தலை நடத்த முற்படும்.

இலங்கைத்தீவில் ஜனநாயக மரபுப்படியோ மாண்பின்படியோ அரசியல் நிகழ்ச்சி நிரல் நிகழ்வதில்லை. முற்று முழுதான வரம்பு மீறிய சூதாட்டத்தின் மூலமே அரசியல் நடவடிக்கைகள் அமைவதுண்டு.

இந்த வகையில் ஒவ்வொரு தரப்பும் உற்சாகமாகக் கலந்து கொள்ளும் இந்தச் சூதாட்டத்துக்காக எப்படியோ தேர்தல் என்ற ஜனநாயக மாயையின் முன்னே மக்கள் நிறுத்தப்படத்தான் போகிறார்கள். அப்படி நிறுத்தப்படவுள்ள மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அப்பொழுது எத்தகைய தீர்மானங்களை எடுக்கப்போகிறார்கள்? எவ்வாறான தெரிவுகளைச் செய்யப்போகிறார்கள்? என்பதே இங்கே பேசப்பட வேண்டியதாகிறது.

இலங்கைச் சூழலில் இப்பொழுதிருக்கும் பெருங்கட்சிகள் எதுவும் எதிர்கால அரசியலுக்குத் தகுதியானவை இல்லை என்பது மிகச் சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரியும். ஐ.தே.கவும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சரி, அல்லது இதிலிருந்து விடுபட்ட அல்லது பிரிந்து நிற்கும் பொதுஜனபரமுன என்ற மொட்டுக் கட்சியும் சரி நம்பிக்கையளிக்கக் கூடிய எந்த நற்குறிகளையும் கொண்டிருப்பவையல்ல.

இலங்கையின் எழுபதாண்டுகாலமாகச் சீரழிவு அரசியலை இந்த மூன்று அணிகளில் உள்ளவர்களுமே தலைமை தாங்கி நடத்தியவர்கள். இப்பொழுதும் இதே குறைபாட்டரசியலை மாறாகக் கொள்கையோடு வழிநடத்திக் கொண்டிருப்பவர்களும் இவர்களே. தொடர்ந்தும் எதிர்கால அரசியலையும் தமது பிடிக்குள் வைத்துக் கொண்டு, நாட்டைச் சீரிழிக்கத் துடிப்பவர்களும் இவர்களே.

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகான போதும் பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் நெருக்கடியிலும் மீள முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது நாடு. யுத்தம் முடிந்த கையோடு உடனடியாகச் செய்திருக்க வேண்டிய பணிகளில் பத்தில் ஒன்றைக் கூடச் செய்ய வக்கற்ற நிலையிலேயே இந்த மூன்று அணியில் உள்ள தலைவர்களும் இருந்தனர். இருக்கின்றனர் என்பதை எல்லோரும் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ள வேண்டும். மக்களும்தான்.

ஏன் இங்கே மக்களையும் இதில் இணைக்க வேண்டியுள்ளது என்றால், இந்த மூன்று அணிகளையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது மக்களே. அதைப்போல தமிழ்த்தரப்பில் தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பை ஆதரிப்பதும் மக்களே. ஆகவே இந்தத் தரப்புகளின் அரசியல் தவறுகளுக்கு (அனுமதியளிப்பதன் மூலம்) மக்களும் பொறுப்பாளிகளே.

உள்நாட்டில் மக்களின் நிலை மோசமாகியுள்ளது. இதனால் அரசியல் தலைமைகளின் மீதான நம்பிக்கை மிக மோசமாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. அரசியல் தீர்வு, நிலைமாறுகாலகட்டத்துக்கான நீதி, பொருளாதார முன்னேற்றம், சமத்துவ சகவாழ்வு எதிலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.

இதனால் மிகக் கசப்பான மனதுடனேயே மக்கள் இருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இந்த மக்கள் விரோத, தேசவிரோதச் சக்திகளுக்கே ஆதவளிக்கப்போகிறார்கள்.  பதிலாக மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய, மாற்றங்களை நிகழ்த்த வல்ல எந்தச் சக்தியும் மக்களுடைய நம்பிக்கை வானத்தில் தென்படவில்லை. அது சிங்களத்தரப்பிலும்தான். தமிழ், முஸ்லிம் சமூகங்களிடத்திலும்தான்.

பெருங்கட்சிகள் நாறிக் கிடக்கின்றன என்றால் அதற்கு மாற்றாகத் தம்மைக் கட்டமைக்கக் கூடிய திராணியோடு எந்தத் தரப்பும் இன்றில்லை. இருக்கின்ற எந்தத்  தரப்பும் மக்களிடம் செல்வாக்கைப் பெற்றவை அல்ல. ஆகவே ஒருங்கிணைந்த அணிப்படுத்தலின் மூலமே மாற்றுச் சக்தி என்ற எண்ணக்கருவை மக்களின் மனதில் பதியமுடியும். அவ்வாறான ஒருங்கிணைவே பெருங்கட்சிகளை எதிர்கொள்வதற்கும் வாய்ப்பாகும். (இதைக்குறித்து தனியாக எழுத வேண்டும்) ஆனால், இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு ஒரு மாற்று அணியாகத் திரளக்கூடிய ஏதுநிலைகள் உதிரிக்கட்சிகளிடம் காணப்படவில்லை. (நிச்சயமாக இவை உதிரிக்கட்சிகள்தான்) இவற்றின் குணாம்சமோ புதிரானதாகவும் எதிர்மறையானதாகவுமே உள்ளது. இதுதான் நமது  மிகப் பெரிய அவலம். இதுவே இந்தச் சமூகங்களின் துயர் விதியாகும். உண்மையில் மாற்றுச் சக்திகள் எப்போதும் நெகிழ்ச்சியும் புத்திக்கூர்மையும் யதார்த்தமானவையுமாக இருக்கும். ஆனால், இங்கே இதைக்காணவில்லை.

அதுவும் பெரும்கட்சிகளின் மீது நம்பிக்கையீனமும் அதிருப்தியும் ஏற்பட்டிருக்கும் இந்த அபூர்வத் தருணத்தை வாய்ப்பாகக் கொண்டு மேலெழக்கூடிய அளவுக்கு எந்தத் தரப்பிடமும் வல்லமையைக் காணவில்லை.

இந்தப் பலவீனமான நிலையைத்தான் பெருங்கட்சிகள் தமக்கான வாய்ப்பாகக் கொள்கின்றன.

இப்பொழுது ஒரு தேர்தல் வந்தால், குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால், நிச்சயமாகத் தமிழ்த்தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களுக்குக் குறையாமல் பெறக்கூடிய சூழலே – நிலையே உண்டு.

இதே வாய்ப்புத்தான் முஸ்லிம் காங்கிரசுக்கும் மலையகக் கட்சிகளுக்கும் ஐ.தே.க, சு.க, மொட்டுக்கட்சி என எல்லாவற்றுக்கும்.

ஜெயலலிதா சொல்வதைப்போல மைனாரிட்டிப் பார்ட்டியாகவே ஜே.வி.பி போன்ற ஏனைய கட்சிகள் எல்லாம்  காலத்தை ஓட்ட வேண்டியதுதான். அதைப்போல இடதுசாரிகள் (சிங்கள) தமக்கு வாய்ப்பான இடங்களில் ஒட்டிக் கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டியதே. பாருங்கள் இடதுசாரிகள் என்று எழுதும்போதே அடைப்புக்குறிக்குள் சிங்கள – தமிழ் என்று வேறுபடுத்தல்களைச்செய்ய வேண்டியிருக்கிறது என்பதை.

உண்மையில் இடதுசாரிகள் என்றால் அவர்கள் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்த நிலையில் இருக்க வேண்டியவர்கள். ஆனால், இங்கே அப்படியா உள்ளது நிலைமை?மாற்றுக்களை உருவாக்கக் கூடிய களச் சூழல் தானாகக் கனிந்துள்ளது. அதைக் கையாளத் தெரியாமல், தமக்கிடையிலான பலவீனங்களை மிகைப்படுத்திக் கூறுபட்டு நிற்கின்றன மாற்றுச் சக்திகள். இவை சிதறுண்ட நிலையிலேயே உள்ளன. இவ்வாறு சிதைவுண்டிருப்பது தமக்கு எந்த வகையிலும் நன்மையைத் தரப்போவதில்லை. மக்களுக்கும் நன்மைகள் கிட்டாது. பதிலாக மேலும் தீமைகளே நிகழும் என்றெல்லாம் தெரிந்து கொண்டே தமக்கிடையில் ஒருங்கிணையவோ மாற்று அரசியற் சிந்தனையை வலுப்படுத்தி ஒரு செயற்றிட்டமாக அதை முன்னெடுக்கவோ இந்தச் சக்திகள் தயாரில்லை.

மேலும் தாம் இப்படிப் பிளவுண்டும் சிதைவுண்டும் இருப்பதன் மூலமாக இந்தப் பெருங்கட்சிகளே வெற்றியைப்பெறும். மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான சூழலே அதன் மூலம் நிகழும் என்று தெரிந்து கொண்டும் இவை பிளவுண்டிருக்கின்றன என்றால், இதற்கான முழுப்பொறுப்பும் இவர்களைத்தானே சாரும்.

அதாவது தெரிந்து கொண்டும் தெரியாததைப்போலிருப்பது. தவறுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அறிந்திருந்தும் அறியாதவர்களாக இருப்பது பெருங்குற்றம்.

இதற்கான காரணங்கள் ஒன்றும் பெரியதல்ல. தமக்கிடையிலிருக்கும் போட்டிகளும் குறுகிய மனப்பாங்கும் ஆளுமைக்குறைபாடுகளுமே இவர்களைப் போட்டு உலுப்புகின்றன. இவை இப்படியே இருப்பதன் மூலம் மேலும் மேலும் பலவீனப்படுமே தவிர பலமடையக் கூடிய சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகால அரசியல் வரலாறும் சமகால நிலவரமும் இதைத் துலக்கமாகச் சொல்கின்றன.

மிஞ்சி மிஞ்சிப்போனால் அடுத்து  வரவுள்ள தேர்தலுடன் இதில் சில கட்சிகள் தேர்தல் என்ற பேச்சை எடுப்பதற்கே லாயக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.

வரலாற்றில் தமக்கான இடம் என்னவென்று தெரியாமல் இருப்பதென்பதை விடச் சீரழிவு வேறில்லை. மக்கள் விரோதச் சக்திகள், தவறான அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் தலைவர்கள் என்று வெளியே பார்த்துக் கடுங்கோபத்துடன் கைகளை நீட்டுவதனால் பயனேதுமில்லை. அதைவிடத் தாம் என்ன செய்ய வேண்டும்? தம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதே இன்றைய தேவையாகும்.

ஏனெனில் நாடு ஏராளமான நெருக்கடிகளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது. சுய உற்பத்தித்திறனை மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். தேசிய வளங்களை பிற நாடுகள் அபகரிக்கின்றன. இளைய தலைமுறையினரின் மனதில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மைகளே அதிகரித்திருக்கின்றன. வன்முறைகளும் போதைப்பொருட்கடத்தலும் ஊழலும் நிர்வாக முறைகேடுகளும் பெருகியுள்ளன. கடன் சுமை ஏறிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் நல்லறிகுறிகளே இல்லை.

இந்த நிலையில் முழு இலங்கை தழுவிய அளவிலும் மாற்றம் தேவை. சமூக அடிப்படையிலும் மாற்றம் தேவை. ஆகவே தாமதமில்லாமல் புத்தாக்கச் சக்திகள் மேற்கிளம்ப வேண்டும்.

மாற்றங்களை நிகழ்த்தவல்ல கருநிலைகளை உருவாக்க வேண்டும். அப்படியான திறனுடைய எந்தச் சக்தியும் விளைய முடியாத நாடா இலங்கை?

இல்லையே!

இலங்கையின் கடந்த கால வரலாற்றை நோக்கினால், எப்பொழுதும் போராடும் உணர்வுள்ள, மாற்றங்களை விரும்புகின்ற மனநிலையுடைய மக்களே இருந்துள்ளனர் என்பது தெரியும். எதிர்ப்புக் குரலை எழுப்புவதற்குப் பின்னிற்காக மக்கள் இலங்கையர்கள். போராடும் உணர்வுள்ளவர்களே இந்த நாட்டின் சனங்கள்.

இதன் வெளிப்பாடே, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த பெரும் புரட்சிக்கான முன்னெடுப்புகளும் போராட்டங்களுமாகும்.

ஆனால் அந்தப் போராட்டங்களை அரசாங்கமும் வெளிச்சக்திகளும் அமுக்கி விட்டன. அல்லது அழித்து விட்டன. ஆனாலும் பிரச்சினை உள்ளவரை அதற்கான தீர்வுக்கான குரல்கள் ஒலிப்பது தவிர்க்கவியலாதது. தேவைகள் உள்ளவரையில் அதை நிறைவேற்றவேண்டும் என்று கேட்கும் குரல்கள் எழுந்தே தீரும். போராட்டங்களும் எதிர்ப்பும் தோன்றும்.

யுத்தம் முடிந்தாலும் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக தொடர்ந்து நடத்திவரும் எண்ணற்ற போராட்டங்களின் மூலம் சொல்லும் சேதி என்ன? நாம் போராடியே தீருவோம் என்பதுதானே!

பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பொறிமுறைகளை உருவாக்காமல் அவற்றுக்கு அதிகாரத்தின் மூலம் பதிலளிக்க முற்பட்டால் அது தீய – விபரீத விளைவுகளையே உண்டாக்கும் என்பது உலக அனுபவம். இலங்கையின் அனுபவமும் அதுதான்.

இப்பொழுது இரண்டு தரப்பினரின் கைகளிலும் பொறுப்புகள் நிறைய உள்ளன. அதிகாரத்தில் இருக்கும் பெருங்கட்சிகளுக்கும் பொறுப்புண்டு. அதற்கு வெளியே உள்ள மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய தரப்புகளுக்கும் பொறுப்புண்டு. இதில் கூடிய பொறுப்பென்பது முற்போக்கான மாற்றுத் தரப்பினருக்கானதே. அதாவது மாற்றாளர்களுக்கே.

அவர்கள் தயாரா?

Share:

Author: theneeweb