மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் – ஜனாதிபதியின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தடயவியல் கணக்காய்வு விசாரணைகளை விரைந்து மேற்கொள்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தடயவியல் கணக்காய்வு விசாரணைகளை விரைந்து மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வருவதற்கு சர்வதேச நிறுவனம் ஒன்றின் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தடயவியல் கணக்காய்வு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கியும் தனது இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தியது.

இதற்கமைய குறித்த தடயவியல் கணக்காய்வு விசாரணைகளுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பதற்கு சர்வதேச நிறுவனத்தின் உதவியை நாடுவதற்கும், விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை விரைந்து மேற்கொள்வதோடு குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை விரைந்து தனக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb