வரலாற்று நிகழ்வுகளோடு இணைந்த கதைகளைச் சொல்லும் முருகபூபதியின் மூன்று நூல்கள்

வரலாற்றிலும் சமூக வெளியிலும் மறப்பதையும் மறுப்பதையும் பேசுகிறது !

                                                                                               கருணாகரன் —-

 

முருகபூபதி எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் கவனித்துப் பேச வேண்டியவை. ஒன்று, சொல்ல மறந்த கதைகள்( தமிழ்நாடு மலைகள் பதிப்பகம்)   இரண்டாவது சொல்ல வேண்டிய கதைகள்          ( யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடு )  மூன்றாவது, சொல்லத் தவறிய கதைகள் ( கிளிநொச்சி மகிழ் வெளியீடு)

மூன்றும் புனைவற்றவை. வரலாற்று மனிதர்கள், வரலாற்று நிகழ்வுகள், வரலாற்று முக்கியத்துவத்தோடிணைந்த பிரச்சினைகள், அவற்றின் நிகழிடங்கள், நிகழும் காலம் பற்றியவை. ஆகவே இவை ஒரு வகையில் அதற்கான அரசியல், அதற்கான சமூகவியல் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் கொண்டவை.

இதன் மறுபக்கம் – இந்த மூன்றும் ஏதோ காரணங்களால் விடுபட்டவையாக அல்லது (உள்நோக்குடன்) விடப்பட்டவையாக இருக்கும் சங்கதிகளைப் பற்றிப்பேசுகின்றன என்பதாகும். அந்த வகையில்தான் இவை கவனத்திற்குரிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அல்லது கவனத்தைக்கோருகின்றன.

வரலாற்றிலும் சமூக வெளியிலும் மறப்பதையும் மறுப்பதையும் பேசுவது முக்கியமானதொரு செயல். அது உரிமையோடும் சுதந்திரத்தோடும் மதிப்போடும் மாண்புடனும் சம்மந்தப்பட்டது. அதேவேளை அது இலகுவானதல்ல. பல சந்தர்ப்பங்களிலும் இவை, இவற்றைப் பேச முற்படுவதென்பது பொது ஓட்டத்துக்கு ஏற்புடையதாக, உவப்பாக இருப்பதில்லை.

பொதுவோட்டத்தில் நீந்திக்கொண்டிருக்கும் மனமானது சிலவற்றை மறந்து விடுகிறது. சிலவற்றை நினைவில் கொள்கிறது. சில நினைவுகள் மீள மீள நினைவு கூரப்படுகின்றன. சில திட்டமிட்டே மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. இது ஒரு வகையில் மறைத்தலுக்குச் சமம். இந்த மறைத்தலானது மறுத்தலாகவே அமையும். இந்த மறுத்தல் வன்முறைக்குரியது. அதிகார நிலைப்பட்டது. ஆனால், இதை அவ்வாறு நேரடியாகப் புரிந்து கொள்வது கடினம்.

இலேசாக – இயல்பாக மறப்பதைப்போல, மறந்து விடப்படுவதைப்போல விடப்படுவதால் இதனுள்ளிருக்கும் உள்நோக்கத்தையும் அதற்கான அரசியலையும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ தற்செயலானது அது என்றே உணர வைக்கப்படுவது. ஆனால், அப்படியானதல்ல, அது.

இவ்வாறுதான் மறுப்பதும் அதற்கான அரசியலும். முற்றிலும் அதிகாரமும் வன்முறையும் சார்ந்தது. இந்த வன்முறை இரத்தம் சிந்தாதது. சிந்தனையில் இருளை நிரப்பியது. அதிகாரத்தைக் கட்டமைத்தது. உளவியலில் வன்மத்தைக் கொண்டது.

தற்கெல்லாம் அடிப்படையானவை அரசியல் மற்றும் சமூகக் காரணங்களே.

இதே அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளே சொல்லத் தவறும் கதைகளுக்கும் உண்டு. சொல்லத் தவறியவை என்பது ஏதோ சாதாரணமாக விடுபட்டவை என்பதல்ல. அவை அவ்வாறு விடப்படுவதற்கான காரணங்களின் நிமித்தமானவை. ஆகவேதான் “சொல்லத் தவறியவை” என்பதற்குப் பின்னால் இருப்பது ஒரு பெரிய அரசியல், உளவியல், சமூகவியல் வலைப்பின்னலாகும் என நாம் கவனித்துப் பேச வேண்டியுள்ளது.

வரலாறு முழுவதிலும் இவ்வாறான “சொல்லத் தவறிய கதைகள்” ஏராளம் உள்ளன. அவை திட்டமிடப்பட்டே தவற விடப்படுகின்றன. தவிர்க்கப்படுகின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் அதிகார  மையப்பட்டது. அது அநீதியின் பாற்பட்டது. கொடுமையானது.

வரலாற்றிலும் சமூக வெளியிலும் எது ஒன்று மறக்கடிக்கப்படுகிறதோ, மறக்க விடப்படுகிறதோ அல்லது தவற விடப்படுகிறதோ அல்லது தவிர்க்கப்படுகிறதோ அதற்குப்பின்னால் நலன்களும் அதற்கான தரப்புகளின் செயற்பாடுகளும் உள்ளன. இது சமூக அரசியல் ஆய்வுகளினதும் அவதானிப்புகளினதும் வெளிப்பாடாகும்.

ஆனால், இவற்றிலிருந்து சற்று வேறுபட்டது சொல்லப்பட வேண்டிய கதைகள்என்பது.

“சொல்லப்பட வேண்டிய கதைகள்” எனும்போது அதனுடைய  தொனியே தன்னெழுச்சியை உட்சாரமாகக் கொள்வதாகவும் அது ஒரு பிரகடனமாகவும் உள்ளதை நாம் உணரமுடியும். இது ஒரு வகையில் விழிப்பு நிலையிலானது. நிச்சயமாகச் சொல்லப்பட வேண்டியவை, சொல்லப்பட்டே தீர வேண்டியவை என்ற முனைப்பென்பது எதன்பொருட்டும் மறக்கப்படுவதற்கோ மறக்கடிக்கப்படுவதற்கோ மறுப்பதற்கோ இடமளிக்க முடியாது என்ற வலியுறுத்தலைத் தமக்குள் பிரகடனப்படுத்துகின்றன.

இது வலியதொரு செயல். வலியதொரு உணர்நிலை. அவ்வாறெனில் புதிய நிலை. இந்தப் புதிய நிலையானது விடுதலைக்கான தூண்டலே. தன்னிடத்தைப் பெறுவதற்கான முனைப்பு. தன்னைத் தவிர்க்கவே முடியாது என்றெல்லாம் வியாக்கியானம் கொள்கின்றவை. உண்மையும் அதுதான்.

எந்தக் காரணத்தைக்கொண்டும் சொல்லாமல் விடவே முடியாத கதைகள் என்பதால் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய கதைகளாக தமது இடத்தைப் பெறுகின்றன.

இவ்வாறான அடிப்படைகளில் அமைந்திருக்கும் சங்கதிகளை முருகபூபதி தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இதை நாம் வரவேற்க வேண்டும்.

முருகபூபதி நீண்டகாலமாக ஊடகத்துறையில் இயங்கி வருகின்றவர். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகாலமாக!  ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணமான காலப்பகுதியல்ல. ஐம்பது ஆண்டுகளில் அரசியல், சமூகவியல், பொருளாதாரம், கருத்துநிலை, உளவியல், பண்பாடு, அறிவுத்துறை, மன நிலை எனப் பலவும் மாற்றத்துக்குட்படக்கூடிய காலப்பகுதியாகும். ஊடகத்துறையில் செயற்படும் ஒருவரால் இந்த அரை நூற்றாண்டுகால மாற்றங்களை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஐம்பது ஆண்டுகாலத்துக்கு முன்பு அவர் ஊடகத்துறையில் நுழையும்போதிருந்த நிலைமைக்கும் சூழலுக்கும் இப்போதுள்ள சூழலுக்கும் நிலைமைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவரால் இலகுவில் உணர முடியும்.

ஆகவே அவ்வாறே சமூக வெளியில் உள்ள அத்தனையிலும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் நோக்குகளும் மாறுதலுக்குள்ளாகியிருக்கும்.

முருகபூபதி இந்த மாற்றங்களை உள்வாங்கி, அவற்றின் வழியே பயணித்துச் சென்ற பாதையை இந்த மூன்று புத்தகங்களிலும் அடையாளம் காட்டிச் செல்கிறார். ஊடகவியலாளராகச் செயற்பட்டதன் காரணமாக பொதுப்பரப்பில் விரிந்த தளத்தில் உலாவிச் செயற்படக்கூடிய வாய்ப்பு பூபதிக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை,  வாய்ப்பாக வைத்துக்கொண்டு வரலாற்றில் முன்னகர முற்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்துள்ளவை மறந்தவையும் மறக்கடிக்கப்பட்டவையுமாகும். கூடவே சொல்லப்படவேண்டியவையும்.

இவை இன்றைய உலக ஒழுங்கில் முதல் நிலைக்குரியவை. மறந்ததையும் மறுக்கப்பட்டதையும் தவிர்க்கப்பட்டதையும் சொல்லப்பட முடியாததையும் பேசுவதே இன்றைய உலக ஒழுங்காகும். இது பல முனைகளிலும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய உலகம். இந்தப் புதிய உலகில் தினமும் ஆயிரமாயிரம் கதவுகள் திறக்கப்படுகின்றன. தினமும் புதிய புதிய கதவுகள் திறக்கப்படுவதால்தான் இது புதிய உலகமாக உள்ளது.

வரலாற்றைப் பின்னோக்கித் தமது காலடி நிழலில் வைத்திருக்கும் சக்திகளின் பீடங்கள் தகர்ந்து வருகின்றன. பூபதியின் செயற்பாடும் இந்தக் கதவு திறத்தல்தான்.

எழுத்தாளராகவும் பயணியாகவும் முற்போக்கு இயக்கத்தில் செயற்படுகின்றவராகவும் ஊடகவிலாளராகவும் இருப்பதால் பூபதிக்கு பல சாத்தியங்கள் கிட்டுகின்றன. எதையும் பேசுவதற்கான – எழுதுவதற்கான அறிதலும் அனுபவங்களும் மொழியும் தொடர்புகளும் சாத்தியமாகிறது. இந்தச் சாத்தியங்களின் பெறுபேறுகளே இந்த மூன்று புத்தங்களுமாகும்.

 

சொல்ல மறந்த கதைகள் இரண்டு ஆண்டுகளின் முன்பு வெளியாகியிருந்தது. சொல்ல வேண்டிய கதைகளுக்கும் சொல்லத் தவறிய கதைகளுக்கும்  கடந்த வாரங்களில் பாரிஸ், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் வெளியீடும் அறிமுகங்களும் இடம்பெற்றன.

ஒவ்வொரு இடங்களிலும் இந்தப் புத்தகங்களைப் பற்றி உரையாற்றியவர்கள் கூறியதன் சாரம், ஏறக்குறைய ஒன்றே. அது “பூபதி சொல்லாத சேதிகளைச் சொல்கிறார். சொல்லத் தவறியவற்றைத் தேடிச் சொல்கிறார். சொல்லக்கூடாது என்பதை சொல்லியே தீருவேன் என்று சொல்கிறார். ” அதாவது ஒரு ஊடகவியலாளன் வரலாற்றுக்கும் சமூகத்துக்கும் சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உண்மையாளனாக இருக்கிறார். இதையே இந்த எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. முருகபூபதி சொல்ல முற்படுவதெல்லாம் தான் நீதியின் பக்கம் நிற்பதே என்பதாகும்.

–0–

 

Share:

Author: theneeweb