. நாட்டின் எஞ்சியுள்ள 28% வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளது

வனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கத்தைப் போன்றே அனைத்து பிரஜைகளும் பொறுப்புடையவர்களாவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்படும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (21) முற்பகல் திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.

நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15 ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டின் எஞ்சியுள்ள 28% வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் இடம்பெற்ற எல்ரீரீஈ பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டதாகவும் யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32% வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48000 ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன், இதில் வருடம் ஒன்றுக்கு 15,000 ஹெக்டெயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறிய பாடசாலை பிள்ளைகளை விழாக்கள், நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றச் செய்யும்போது அவர்கள் அசெளகரியங்களுக்குள்ளாவது பற்றியும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பாடசாலை பிள்ளைகளை பங்குபற்ற செய்ய வேண்டிய விழாக்கள், நிகழ்ச்சித்திட்டங்களுக்காக அப்பிள்ளைகளை பங்குபற்றச் செய்கின்றபோது 08ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் அல்லது உயர் தரம் கற்கும் பிள்ளைகள் தவிர ஏனைய சிறு பிள்ளைகளை பங்குபற்ற செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் திம்புலாகல வெஹெரகல மகா வித்தியாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை அப்பாடசாலை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

பாடசாலையில் உள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி, புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்ததை தொடர்ந்து அதனைப் பார்வையிட்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக சிறந்ததோர் சூழலை ஏற்படுத்திக்கொடுத்து அனைத்து வகுப்பறைகளையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சர்வதேச வன பாதுகாப்பு தின நிகழ்விலும் கலந்துகொண்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 07 பாடசாலைகளுக்கு புத்தக பொதிகளை வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டப்ளியு.ஏ.சீ.வேரகொட ஆகியோரும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திம்புலாகலை காசியப்ப வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டிடம் இன்று முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதன்போது பாடசாலை அதிபர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் பாடசாலையின் பிரதான மண்டபம், விளையாட்டு மைதானம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக 25 இலட்ச ரூபா நிதியினை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

வலய பாடசாலைகளின் நூலகங்களுக்கு நூல்களை வழங்குதல், திம்புலாகலை பிரதேசத்தில் உள்ள 07 குடும்பங்களுக்கு வீட்டு உறுதியை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றன.

Share:

Author: theneeweb