யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

யாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில். நடைபெற்ற கம்பன் விழாவுக்கு செல்லக் கூடாது எனவும் , மீறி சென்றால் கொலை செய்யப்படுவீர் என எச்சரித்து , அரசியல்வாதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் மோத வேண்டாம் எனவும் எச்சரித்து கடந்த 15 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதல்வரின் மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு புதைகுழி ஒன்றின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு தயார் செய்யுமாறு தகவல் அனுப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பிலும் தொலைபேசி ஊடான அச்சுறுத்தல் தொடர்பிலும், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை , யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி கேபிள் கம்பங்களை கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்கும் நிறுவனம் நாட்டி இருந்தன. அவற்றை மாநகர சபை ஊழியர்கள் மூலம் நாம் அகற்றி இருந்தோம். அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த கம்பங்களை அகற்றியமையால் அந்த நிறுவனத்தார் மாத்திரமே தனக்கு எதிரிகளாக உள்ளனர் என விசாரணைகளின் போது முதல்வர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb