நெடுநல்வாடை -விமர்சனம்

By – ஜி. அசோக்

தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய வெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா!

வைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம் ஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி விடுகிறது. கிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர், விவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல்… வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம் காட்டும் விதத்தில் கவர்கிறது செல்வக்கண்ணனின் இயக்கம்.

nedunelvadaiந்தையால் கைவிடப்பட்ட பேரன் இளங்கோவை, பாசமுமும் நேசமுமாக வளர்க்கிறார் தாத்தா பூ ராமு. தாய், தங்கையுடன் தாத்தா வீட்டில் வளரும் இளங்கோவுக்கு, தாய் மாமன் மைம் கோபி எதிரி. தன் உயிர் இருக்கும் போதே பேரனை ஆளாக்கிவிட வேண்டும் என்பது தாத்தாவின் கனவு, லட்சியம் எல்லாம். வாழ்க்கை ஓட்டத்தில்  இளங்கோவின் மனதை களவாடுகிறார் அஞ்சலி நாயர். ஆனால் சில பல காரணங்களால்  இளங்கோ – அஞ்சலி நாயர் காதலுக்கு முட்டுக் கட்டை இடுகிறார் பூராமு. இடையில் அஞ்சலி நாயரின் வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப, காதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிறது கதை.

பூ ராமுவுக்கு இது வாழ்நாள் வாய்ப்பாக அமைந்த திரைப் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளித் தாத்தாவாக அபாரமாக உழைத்திருக்கிறார். தாத்தாவை அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.
வாழ்க்கை இழந்து வரும் மகளின் கண்ணீரைத் துடைப்பது தொடங்கி, அவளும் என் ரத்தம்தான்… என மகனிடம் மல்லுக்கு நிற்பது வரை ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

அத்தனை அலட்சியமான உடல் மொழி. ஒவ்வொரு வசன உச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார்.  பேரனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மௌனமாக இருப்பதாகட்டும் பொம்பள புள்ளைய தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்… என்று ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும், துயரமும் அலைக்கழிக்கும் ஆண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் பூ ராமு. வாழ்த்துகள் தாத்தா!
முன் தொங்கும் இலக்கு. தாத்தாவின் வார்த்தைகளை மீற முடியாத தவிப்பு எனத் தனது நடிப்பால், அறிமுகமா! என்று ஆச்சரியப்படுத்துகிறார் இளங்கோ. தேங்கித் தேங்கிப்  பயணிக்கும் நீராவி என்ஜின் பாசஞ்சர் திரைக்கதைக்கு அவ்வப்போது கரி அள்ளிப் வெப்பத்தை அதிகரிப்பது மாதிரி, திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி ஆச்சரியப்படுத்துகிறது. இதுவரை வந்த எந்தப் படத்திலும் இந்தளவுக்கு இல்லை என்று சொல்லுமளவுக்கு வட்டார மொழி பளிச்சிடுகிறது.

ஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி அஞ்சலி நாயர். வாழ்நாள் பூரா ஒரு பொண்ண நினைச்சிக்கிட்டு ஒரு ஆம்பளையால வாழ முடியும்.. ஆனா ஒரு பொம்பளைக்கு அப்படி இல்ல…. என கலங்குகிற இடம் செமத்தியான வெட்டு.

தாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு எங்கெங்கும் நிரம்பிக் கிடப்பது கதையின் சிறந்த பலம். உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்வதாக வசனங்கள். அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா… இருந்து என்னடா செய்ய… ஊரு பய கொடுக்க வுடுவானா… ஏன்…?
பொம்பள பிள்ளையில்ல… அதுதான்… என வாழ்க்கை மணக்கும் வசனங்கள்.

காதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள், கரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின் பார்வையில் நின்று பதிவு செய்கிறது வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு. அதுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கிழவனின் கண்ணீரோ.. தரையில் ஓடுது நதியாக… நதியோடிய தடமெல்லாம்.. குடும்பம் வளருது பயிராக… போன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது வைரமுத்துவின் பேனா!
வரிகளுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசை.

குறிப்பிட்ட நான்கு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும், சமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும் பரபரப்பில்லாத திரைக்கதையும்தான் நெடுநல்வாடையின் வறட்சி முகம்.
தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே. ஆனாலும்… இது தாய்ப் பால்!

 

Share:

Author: theneeweb