கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திர சிகிசை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22)காலை ஒன்பது மணிக்கு  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மீள் குடியேற்றத்தின் பின்னர் வன்னிப் பெருநிலப் பரப்பில் அதிகளவினான மக்கள் கண்புரை நோய்க்கான சிகிச்சையினைப் பெற வசதியின்றி இருந்ததைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விசேட கண் சத்திர சிகிச்சை முகாம்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்து நடாத்திப் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பார்வையை வழங்கி வந்தன. இதற்கான விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இலங்கையின் பல பாகங்களிலிலும் இருந்து தொண்டு அடிப்படையில் வருகைதந்திருந்தனர்.
எனினும் தமது தனிப்பட்ட தொழில்சார் வணிக நலன்கள் கருதிச் செயற்படும் சிலரால் வழங்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகள் காரணமாக 2015ம் ஆண்டின் பின்னர் விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை முகாம்களை நடாத்துவதற்கு வருகை தர மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டு வந்தது.
இதன் விளைவாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்புரை நோய் சத்திர சிகிச்சைக்கு தொலைவில் அமைந்திருக்கும் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு அரச வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்களும் கண் சத்திர சிகிச்சைக்குப் பாவிக்கப்படும் பஞ்சு முதற்கொண்டு வில்லைகள் வரை தனியார் நிலையங்களில் வாங்கி வரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
அத்துடன் வடமாகாணத்தில் யாழப்பாணப் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் கடந்த சில வருடங்களாக விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்படாது போனமைக்கும் மேற்படி சிலரது வணிக நலன்கருதிய திட்டமிட்ட வேலைகளே காரணம் என சுகாதார திணைக்களத் தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன
இந் நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்களது அவலங்களைத் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி அழுத்தம் கொடுத்து வந்ததன் பலனாக விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் கிரிதரன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்தே இன்றைய தினம் புதிய விடுதி திறந்து வைக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது காணப்படும் தரவுகளின் பிரகாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கட்புரை நீக்கச் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகத் தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  சி. திருவாகரன், பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளளர் த. சத்தியமூர்த்தி மற்றும்  வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Share:

Author: theneeweb