கடும் நிபந்தனைகளுடன் பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பு: ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடுவை இந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இன்னும் ஒரு வாரத்துக்குள் ஏற்க வேண்டும்; அல்லது மே 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்பதற்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் சம்மதிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு அந்த அமைப்பு கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பிரிட்டன் பூர்த்தி செய்யாவிட்டால், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமலேயே தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டு முறை நிராகரித்துள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்குள் அந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெறுவது பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே நேரம், ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்றால் அது அந்த அமைப்புடன் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கான ஒப்புதலாக அமையும்; அது, பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான பொதுவாக்கெடுப்பு முடிவுக்கு எதிரானதாக அமைந்துவிடும்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றாமல் போனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான எந்த சிறப்பு ஒப்பந்தமும் இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிய நேரிடும்.

அவ்வாறு பிரிந்தால், இதுவரை ஐரோப்பிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் பிரிட்டன் தொழில்துறை கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

இந்தச் சூழல், பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேவுக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், பிரச்னைகள் இல்லாமல் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவது, எம்.பி.க்களின் கையில்தான் உள்ளது என்பதை தற்போதைய சூழல் எடுத்துக் காட்டுவதாக தெரசா மே தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பொதுமக்கள் தீர்ப்பு  வழங்கி 3 ஆண்டுகள் கழித்து, அந்த யூனியனின் தேர்தலில் பங்கேற்பதற்கு 12-ஆம் தேதிக்குள் சம்மதிப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இந்த மாதம் 29-ஆம் தேதிக்கு பதிலாக மே மாதம் 22-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும், தேர்தலில் பங்கெடுப்பதற்கு பிரிட்டன் சம்மதிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதிதான் உண்மையான காலக்கெடு என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த மாதம் 29-யில் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் நாடாளுமன்றம் இருமுறை நிராகரித்தது.

மேலும், ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை. அதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கான மார்ச் 29 காலக்கெடுவை நீடிப்பது குறித்து ஐரோப்பிய யூனியனின் பிற 27 உறுப்பு நாடுகளுடன் தெரசா மே தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே, 2 கடுமையான நிபந்தனைகளுடன் காலக்கெடுவை மே 22-ஆம் தேதிக்கு ஐரோப்பிய யூனியன் நீட்டித்துள்ளது.

Share:

Author: theneeweb