விடை தெரியாத போராட்டங்கள்

–          கருணாகரன் —

மக்களுடைய எழுச்சிப்போராட்டங்கள் எங்கும் நடக்கின்றன. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டம் கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. “கிழக்கு முடங்கியது” என்று இந்தச் செய்தியை அறிக்கையிட்டுள்ளன இணையத்தளங்கள். பத்திரிகைகளின் செய்தியும் ஏறக்குறைய இப்படித்தானிருக்கும். வடக்கிலும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக தனியார் போக்குவரத்துச் சேவை நடக்கவில்லை. பாடசாலைகளிலும் மாணவர் வருகை குறைந்துள்ளது. பல பாடசாலைகளுக்கு மாணவர்களே வரவில்லை.

இப்படி மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக நடக்கின்றன. ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டு மலையகத் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். நிலங்களை விடுவியுங்கள் என்று கேட்டு படையினர் ஆக்கிரமித்துள்ள காணிச் சொந்தக்காரர்கள் போராடுகின்றனர். புத்தர் சிலைகளை அத்துமீறி வைக்க வேண்டாம் என்று வடக்குக் கிழக்கில் உள்ள மக்கள் போராடுகிறார்கள். நீதியான ஆட்சியும் பொருளாதார முன்னேற்றமும் வேண்டும் என்று நாடெங்கும் தொழிலாளர்களும் சாதாரண மக்களும் போராடுகின்றனர். காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறிந்து சொல்லுங்கள் என அவர்களுடைய உறவுகள் போராடுகின்றன. நல்ல குடிநீர் வேண்டும் என்று குடிநீருக்காக அலைவோர் போராடுகிறார்கள்.

இப்படிப் பல நூறு போராட்டங்கள்.

இந்தப் போராட்டங்கள் எல்லாமே ஆட்சித்தரப்பினரை மையமாகக் கொண்டே நடக்கின்றன. அரசாங்கத்துக்கு அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுக்கவே நடக்கின்றன. அதன்மூலம் தமக்கான நீதியைக் கோருகின்றன. தீர்வைக் கோருகின்றன.

ஆனால் அரசாங்கமோ இதையெல்லாம் கண்டு கொள்வதாக இல்லை. அது இந்தப் போராட்டங்களுக்கு வேண்டிய இடத்தை மட்டும் அளித்துள்ளது. அதாவது எந்தப் போராட்டத்தையும் எவரும் நடத்தலாம். அதற்கான உரிமையும் சுதந்திரமும் உங்களுக்குண்டு என்ற மாதிரி அரசாங்கம் நடந்து கொள்கிறது. அவ்வளவுதான்.

இதன்மூலம் நாட்டில் தாராளமாக ஜனநாயகச் சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. மக்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தவும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தவும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட விளைகிறது.

இதற்குமேல் இந்தப் போராட்டங்களின் நியாயத்தையோ இந்தப் போராட்டங்களில் ஒலிக்கும் குரல்களையோ கவனத்தில் எடுத்துக் கொள்ள அது தயாரில்லை. அப்படிக் கவனத்தில் எடுக்க வேண்டுமானால் அதற்காகப் பல விடயங்களைச் செய்ய வேண்டும். அதற்கு அதிகாரத்திலிருந்து கீழிறங்கி வந்து வேலை செய்ய வேண்டும். நிதியை ஒதுக்கிச் சரியாகச் செலவழிக்க வேண்டும். அதற்கேற்ப நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அதற்கான கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். இப்படிச் செய்ய வேண்டிய காரியங்கள் பலவுண்டு.

இதையெல்லாம் செய்வதற்கு என்ன பிரச்சினை? ஏன் பஞ்சிப்படுகிறார்கள்? அரசு என்றால் மக்களைப் பாதுகாப்பதுடன் அவர்களுக்குரிய தேவைகளைச் சரியாகச் செய்வதுதானே! அதற்காகத்தானே அரசாங்கம்? அதற்காகத்தானே மக்களின் வரிப்பணத்தில் நிதியும் மக்களின் ஆணையின் மூலமாக அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது? என்று நீங்கள் அப்பாவித்தனமாகக் கேட்கலாம். என்னிடமும் இதே கேள்விகள் உண்டு.

ஆனால் இந்தக் கேள்விகளை வைத்துக்கொண்டு ஒரு மண்ணாங்கட்டியைக்கூட உடைக்க முடியாது.

கவேதான் மக்கள் போராட்டங்களின் மூலமாகத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இதை விட அவர்களுக்கு வேறு தெரிவுகளோ வழிகளோ இல்லை.

ஆனால் இங்கே கவலைக்குரிய வேடிக்கை என்னவென்றால், இதையெல்லாம் செய்ய வேண்டியவர்களைத் தெரிவு செய்வது இதே சனங்கள்தான். பிறகு தாம் தெரிவு செய்தவர்கள், தம்மால் ஆணை வழங்கியவர்கள் தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று வீதியில் நின்று குரலெழுப்புவதும் திட்டுவதும் இதே சனங்கள்தான்.

ஒரு சரியான ஜனநாயக நாட்டில் மக்களுடைய உணர்வுகளுக்கே முதலிடமிருக்கும். அதன்படியே கொள்கைகளும் நடைமுறைகளும் வகுக்கப்படுவது அவசியம். அதற்கமைவாகவே அவை நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே மக்களாட்சி.

மக்கள் எதை விரும்புகிறார்கள்? அவர்களுடைய தேவைகள் என்ன? அவர்களுடைய பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் எவ்வாறான அடிப்படைகளில் எதிர்பார்க்கிறார்கள்? தங்களுடைய வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்புகள் என்ன? அதன் கனவுகள் என்ன? என்பதையெல்லாம் கணக்கிட்டே அரசாங்கம் செயற்பட வேண்டும்.

அப்படி நடக்கவில்லை என்றால் அது மக்களுக்கு எதிரான ஆட்சியாகும். மக்களுக்கு எதிரான ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியே. அது மன்னராட்சிக்கு, சர்வாதிகாரத்துக்கு நிகரானது.

அப்படியென்றால் இலங்கை போன்ற நாடுகளில் நடப்பது என்ன வகையான ஆட்சி என்ற கேள்வி இப்பொழுது உங்களுக்குள் எழக்கூடும். அப்படியான கேள்வி எழுந்தால் நிச்சயமாக நீங்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்றே அர்த்தமாகும். இல்லையென்றால் உங்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. என்ன நடந்தாலும் அதற்கெல்லாம் தலையாட்டும் கோயில் பொம்மை நீங்கள். அவ்வளவுதான்.

இலங்கை போன்ற நாடுகளில் நடப்பதெல்லாம் மக்களுக்குப் பொருத்தமில்லாத ஆட்சிகளே. அதாவது மக்களுக்கு எதிரான அல்லது மாறான ஆட்சிகளே!

அதனால்தான் மக்கள் வேறு. அரசாங்கம் வேறு என இரண்டாக – எதிரெதிராகப் பிளவுபட்டு நிற்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தைத் தங்களுக்கு எதிரான சக்தியாக மக்கள் கருத வேண்டியுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக அவர்கள் போராட வேண்டியுள்ளது. அதைப்போல மக்களை எதிர்நிலையில் வைத்துப் பார்ப்பதால்தான் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகிக்கிறது. அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் நடைமுறைப்படுத்துகிறது. பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவை எல்லாம் பிற நாடுகளுக்காக இயற்றப்படுவதல்ல.

இதற்குக் காரணம், அரசாங்கத்துக்கிருக்கும் உள அச்சம். அதாவது பயம். இந்தப்பயத்தின் காரணமாகவே அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாதிரிச் சட்டங்களைப் போட்டுத்தன்னைப் பாதுகாக்க முற்படுகிறது. இந்தச் சட்டங்கள் என்பது அரசாங்கத்திற்கான தடுப்பரண்கள். காப்பரண்கள். கோட்டைச் சுவர்களாகும்.

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்பதைப்போல அரசாங்கத்தின் பக்கம் தவறுகள் இருந்தால் அதையிட்ட பயம் இருந்தே தீரும். அந்தப் பயத்தைத் தீர்ப்பதற்கு மக்கள் நேய அரசாக இருந்தால் மக்களுடைய உணர்வுகள், சிந்தனைகளுக்கு அமைய தன்னை நெகிழ்த்தி ஆட்சியை நடத்தும். மக்கள் விரோத அரசாக இருந்தால் இந்த மாதிரிச் சட்டங்கள், ஒடுக்குமுறைகள், அதற்கான கருவிகளான படைத்துறைகளைப் பயன்படுத்தி ஆட்சி புரியும்.

ஆனால், இதையிட்டெல்லாம் மக்கள் கவலைப்படுவதே இல்லை. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் கொதிநிலை அடையும்போது எதைப்பற்றியும் சிந்திக்காமல் போராடத் தொடங்குவார்கள். தாங்கள் உருவாக்கிய அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவார்கள். இதுதான் மனித இயல்பு. இதுதான் வரலாறு. இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை. இதுதான் நியதி.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் இலங்கைக் குடிமக்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கை நியாயமற்ற முறையில் கவனிக்கப்படாதிருத்தலைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக நடப்பது.

ஆகவே அரசாங்கம் கண்களைத் திறக்க வேண்டும். இதயத்தைத் திறக்க வேண்டும். நீதியின் கதவுகளைத்திறக்க வேண்டும். நியாயத்தின்படி நடக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.

அவர்கள் அதை தங்களின் ஜனநாயக உரிமைகளின்பாற்பட்டு, ஜனநாயக அடிப்படையில் கேட்கிறார்கள்.

இதை ஜனநாயக ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இல்லையெனில் இது மிகப் பெரிய ஜனநாயக மீறலாகும். பெருந்திரள் மக்களுடைய கூட்டுக் கோரிக்கையைப் புறக்கணிப்பது சரியானதாக அமையாது. அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

ஒரு மாண்புடைய அரசாங்கம் மக்களுடைய போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும். அந்தப் போராட்டத்தின் தாற்பரியத்தை, அதில் ஈடுபடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும். அதற்காக ஆர்வம் காட்டும். தான் காணத்தவறியதை தன்னுடைய மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என்று கருதி அந்த மக்களைப் பாராட்டும். அவர்களுடைய கோரிக்கைகளை நீதியின் அடிப்படையில் நிறைவேற்றும். சுருக்கிக் கூறின் மக்களை மதிக்கும்.

இந்த நம்பிக்கையோடுதான் மக்கள் போராடுகிறார்கள். தங்களை, தங்களுடைய நியாயத்தை, அதற்கான போராட்டத்தை அரசு கண்திறந்து பார்க்கும். மனம் திறந்து புரிந்து கொள்ளும் அவற்றுக்கான நீதியை வழங்கும். நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படித்தான் நம்புகிறார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கை எப்போதும் பொய்த்தே போகிறது.

ஏனென்றால் இங்கே மக்கள் ஆணையைப் பெறுகின்றவர்கள் உடனடியாகவே மக்களுக்கு வெகு தொலைவிற்குச் சென்று விடுகிறார்கள். தேர்தலை அவர்கள் அதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே அப்படி மக்களிடமிருந்து வெகு தொலைவிலிருப்போரை மக்களுடைய குரல்கள் எட்டாது. மக்களுடைய போராட்டங்கள் அவர்களுடைய கண்களுக்குத் தெரியாது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் மக்களுடைய போராட்டங்களில் உண்மையாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள்? மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள்? அப்படித் தீர்வுகளைக் கண்டிருந்தால் இப்படி மக்கள் தெருவில் நிற்பார்களா? ஆண்டுக்கணக்கில் தொடர்ச்சியாகப் போராடுவார்களா? அப்படிப் போராடுவது சட்டத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரானது என்றால் அதைச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தடுக்கலாமே! இதைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, எந்தவொரு அரசும் தயாரில்லை. எனவேதான் அரசுகள் எப்போதும் அதிகார மையங்கள் என்ற அடையாளத்தோடிருக்கின்றன என்று நாம் கூற வேண்டியுள்ளது. அரசின் மீதான எதிர்ப்பைத் தளர்த்தவே ஜனநாயக அடிப்படையில் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டலாம் என்ற தளர்வு. இது ஒரு வகையிலான கண்கட்டு வித்தையே.

இவ்வாறானதொரு சுழலுக்குள்தான் மக்கள் சிக்கியிருக்கின்றனர். இதற்குள்தான் விடைதெரியாத கேள்விகளோடு இந்தப் போராட்டங்கள் நிகழ்கின்றன. இந்தப் போராட்டங்களிற் பலவும் சுய திருப்திக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் நடத்துகின்றவையே. இதற்கப்பால் இவற்றுக்கான அரசியல் பெறுமதிகள் என்பது முயற்கொம்பே.

Share:

Author: theneeweb