யாழ். கொக்குவில் ரயில் நிலையப் பகுதியிலேயே போதைப்பொருள் விற்பனை : பொலிஸார்

யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளது என கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போதே பொலிஸார் இத் தகவலை மன்றில் தெரிவித்தனர்.

“கொக்குவில் ரயில் நிலையம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பின்புறம் அடங்கலான பகுதி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் அடங்குகின்றன.

அந்தப் பகுதியில்தான் ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சட்டவிரோத மதுபானமும் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்பாய் பொலிஸாரின் ஒற்றர் ஒருவர் அங்கு உள்ள ஒருவரிடம் ஹெரோயின் வாங்குவதற்காக அனுப்பப்பட்டார். அவர் கேட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் வந்த சந்தேகநபர், அதனை தண்டவாளத்தில் கல்லுக்கு கீழ் வைத்துவிட்டு பணத்துக்காகக் காத்திருந்த போது சந்தேகநபரை பொலிஸார் பிடிக்க முற்பட்டனர். அவர் தப்பி ஓடினார். எனினும் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர்” என்று கோப்பாய் பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

Share:

Author: theneeweb