படிக்கப் போகாதே பாழாய்ப் போவாய்… வேலைக்குப் போகாதே வீடியோவாய் வருவாய்….

இனி உனக்கு செல்போன் இல்லை. வெளியூரில் வேலை செய்ய அனுமதி இல்லை.கல்லூரிக்கு தனியாக செல்ல தேவையில்லை.தனியாகத் தான் போக வேண்டும் என்றால் வீட்டிலேயே

இரு.முக்கியமாக கணினி தொடர்பான எந்த ஒரு தொடர்பும் உனக்கு இனி இருக்கக் கூடாது. ஆண் நண்பர்கள் தொடர்பை உடனே நிறுத்தி விடு. வீட்டிலேயே இரு. விளக்கமாத்தைப் பிடி. வெங்காயத்தை உரி.இதுவே பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பின் பெண் குழந்தைகளுக்கும்,மாணவிகளுக்கும் கொடுக்கப்படும் அறிவுரை. இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணிற்கு மட்டும் வந்த இந்த தைரியத்தின் விளைவு இவ்வாறு கொடுக்கப்படும் அறிவுரைகள். அந்த தைரியத்தின் ஊன்றுகோல் எது? பார்ப்போம்….

பள்ளிப்பருவ தோழனாக தன்னோடு நெருங்கிப் பழகியவன் சபரி ராஜன். பல வருடங்களாக தனக்கு தெரிந்த நண்பர்களில் ஒருவன். முதலில் இங்கு கவனிக்கப்பட வேண்டியது இதுவே. இரண்டு நாட்களுக்கு முன் பழகி மூன்றாவது நாள் அவள் அவனோடு செல்லவில்லை. பல வருடங்களாக தெரிந்தவன், நண்பன் என்ற ஒரு நம்பிக்கையில் ஒருநாள் அவன் வெளியே செல்ல அழைத்தபோது எதார்த்தமாக சென்றார் பாதிக்கப்பட்ட பெண்.செல்லும் வழியிலேயே மூன்று ஆண்களை கண்டு சற்று பீதி அடைந்து இருக்கிறாள்.அவர்களின் தகாத நடவடிக்கையாலும் மேலங்கி(ஷால்) இல்லாமல் அவளை அவர்கள் வீடியோ எடுத்த காரணத்தாலும் அவள் வழியிலேயே இறங்கி வீட்டிற்கு சென்று விடுகிறாள். அந்த வீடியோவால் தன்னை அவர்கள் அச்சுறுத்திய போதும் சிறிதும் துவளாமல் தைரியமாக வீட்டில் சொல்லி காவல் நிலையத்தில் அண்ணன் துணையுடன் புகார் அளித்தார். இவரது இச்செயலின் காரணமாக அந்த ஆண் நபர்களால் பாதிக்கப்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் கண்டுணரப்பட்டு அவர்கள் எவ்வளவு பெரிய காமக் கொடூரர்கள் என்பது வெளிக்கொணரப்பட்டது.இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் குற்றவாளிகளில் ஒருவர் பொள்ளாச்சியில் அந்தஸ்துள்ள அரசியல்வாதியின் நெருங்கிய உறவு என்ற காரணத்தாலும் ஆளுங்கட்சியின் முழு உறுதுணையோடு இது அரங்கேறியது ஏழு வருடங்கள் இக் கொடூரச் சம்பவம் இதுவரை வெளிவராமல் இருந்ததே ஆகும்.

மேற்குறிப்பிட்ட இத்தனை அவலங்களும் ஒரே ஒரு பெண்ணின் தைரியத்தால் இந்த அரசியல் சூழலில் வெளிக்கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாதர் சங்கம் இந்திய மாணவர் சங்கமும் ஜனநாயக வாலிபர் சங்கமும் இந்நாள் வரையிலும் இதற்காக போராடி வழக்கை நியாயமாக நடத்த அனைத்து தளங்களிலும் களத்தில் நிற்கிறது.

இக்கொடூரம் மக்களிடையே வேறு மாதிரியான ஒரு பிம்பத்தை தொடர்ந்து பரப்பி வருகிறது “VICTIM SHAMING”(விக்டிம் ஷேமிங்) என சொல்லப்பட்டு வரும் “பாதிக்கப்பட்டவர்களே அந்த பாதிப்பிற்கு முழு காரணம்” என கூறப்படுவது. உதாரணமாக இந்த சம்பவத்தில் பெண்கள் பெற்றோரை நம்பவில்லை.தெரியாதவர் பின் ஓடினார்கள்.இதுவே அனைத்திற்கும் காரணம் என்பதாகும்.
உண்மையில் இந்த நவீனயுகத்தில் ஆண் நண்பர்கள் ஒரு பெண்ணுக்கு இருப்பது மிகச் சாதாரணமானது.அப்படி இருப்பினும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் பெண்களின் வளர்ப்பு சூழ்நிலை மிகவும் கட்டுக்கோப்பானது என்பது இயல்பானது.அப்படி இருந்தும் ஒரு மாணவி ஒருவரோடு எதார்த்தமாக வெளியே செல்லும் அளவிற்கு அனுமதி அளித்து இருக்கிறார் என்றால் அவன் எந்த அளவிற்கு அவளுக்கு நம்பகமானவராக தன்னை பிம்பப்படுத்திருப்பான் என்பதை இங்கு யாரும் ஏன் யோசிக்கவில்லை? அவ்வாறு சென்றும் தனக்கு நேர்ந்த கொடுமையை அவள் பெற்றோரை நம்பியதால் மட்டுமே அவன் மீண்டும் அழைத்து செல்லாமல் தைரியமாக வீட்டில் கூறி இருக்கிறாள் என்பதை ஏன் யாரும் கவனிக்கவில்லை?இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டான பேச்சு ஏன் யாருக்கும் தோன்றவில்லை?
“ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன? இங்கு இது இருவருக்கும் பொதுவானதாக அல்லவா பார்க்கப்பட வேண்டும்?” என்ற தோழர் வாசுகியின் கருத்து இங்கு கவனிக்கப்பட வேண்டியது.அந்த ஒழுக்கம் பெண்களின் மீது மட்டுமே எப்போதும் ஒட்டுமொத்தமாக திணிக்கப்படுவதால் ஆண் எவ்வாறு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்கிற எண்ணம் பொதுவாக எப்போதும் மேல் எழும்பி நிற்கிறது.எனவேதான் தவறுகள் ஆண் சார்ந்து இருப்பினும் எப்போதும் பெண்களின் ஒழுக்கம் சார்ந்து மட்டுமே அத்தவறை விமர்சிப்பது இங்கு மிக சாதாரணமானதாக ஆகிவிட்டது.
இனி செல்போன் உபயோகிக்காதே! வேலைக்கு வெளியூருக்கு செல்லாதே!! மேற்படிப்பு வேண்டாம்!!!என பெண்களுக்கு அறிவுரை வழங்குபவர்களே என்றேனும் ஒருநாள் உங்கள் ஆண்மகனின் செல்போனிலும் கணினியிலும் என்னதான் இருக்கிறது என்று ஒரு நாளாவது கேட்டு இருக்கிறீர்களா? அல்லது பார்த்திருப்பீர்களா? ஆண்பிள்ளைகளை சந்தேகித்து அவர்களை சோதனை இடுவதில் பெண் பிள்ளைகளை சிறு துளியேனும் நம்புவதிலும் உங்களுக்கு என்ன தயக்கம்?

பெரியார் தன் வாழ்வை அர்ப்பணித்து பெண்களை சமையலறையிலிருந்து வெளியே கொண்டு வந்து இந்த நவீன யுகத்திலும் அவர்கள் அவர்களை மீண்டும் அங்கேயே இதுபோன்ற கண்ணோட்டத்தால் அடைக்க முற்படுவது எவ்விதத்தில் தகும்?
“பெல்டால் அடிக்காதீங்க அண்ணா! லெகின்ஸை நானே கழற்றிடறேன்!!”என்று கதறிய அவள் இங்கு குற்றவாளியாகவும், அவளை ஒரு சதைப் பிண்டமாக மட்டுமே பார்த்து சூறையாடிய காமக் கொடூரர்கள் சாதாரண மனிதர்களாக நம்மால் இங்கே பார்க்கப்பட்டு வருகிறது.அப்போது அவரின் பெற்றோரை என்னவென்று சொல்வது?

இங்கு பெண்கள் யாரும் முட்டாள்களோ அல்லது பார்த்தவுடன் நம்பிவிடும் மூளை இல்லாதவர்களே இல்லை.பொத்தம் பொதுவாக இது ஆண்மகனின் சுபாவம்.இப்படித்தான் அவர்கள் இருப்பார்கள் என்ற சொற்றொடர் இங்கு ஒட்டுமொத்த பெண்ணியத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏன் இவர்கள் யாரும் இங்கு உணரவில்லை? உங்கள் சுபாவமே இதுதான் என்றால் இங்கு ஏன் பெண்கள் மட்டும் சந்தேகப்படுகிறார்கள்? எதற்காக அவளை நடத்தையை குறை கூறி அவளின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் அழிக்க நினைக்கிறார்கள்?

டெல்லி மாணவி நிர்பயாவில் துவங்கி இந்நிகழ்வு வரை இந்த கண்ணோட்டமே பெரும்பாலோனோர் மத்தியில் உலவி வருகிறது.இதற்கு தீர்வுதான் என்ன? பெற்றோர் பெண் குழந்தைகள் மீது வைக்கும் நம்பிக்கையும் தனக்கு பெற்றோர் கொடுத்த சுதந்திரம் வீண் இல்லை என்று அவர்கள் குழந்தைகள் உணரும் தருணத்திலும் தான் உள்ளது வளர்ப்பு என்ற நெறிமுறை. இங்கு எந்த பெண்ணும் பெற்றோரை நம்பாமல் இல்லை.அதே சமயம் அந்த ஒரு காரணத்தால் மட்டும் அவர்கள் சுதந்திரம் பறி போவதை அவள் அனுமதிக்கவும் இல்லை.

எனவே இதற்கான சரியான தீர்வு தான் என்ன? இப்படிப்பட்ட சம்பவங்களை தடுக்க பெண்கள் கட்டுப்பாட்டை மட்டும் உறுதிப்படுத்துவதை தாண்டி நம்மிடம் உள்ள மாற்று தீர்வுகள் எவை? இதனை உன்னிப்பாக தீர்வுகாணும் நோக்கோடு ஆராய்ந்தால் மட்டுமே பாலியல் கல்வியும் ஆண் பெண் சமத்துவ புரிதலை உறுதிப்படுத்தும் எண்ணமும் மேலெழும்பும்.சமூக வலைதளங்களில் தவறாக ஒவ்வொரு மாணவரும் இதைப் பற்றி புரிந்து கொள்வதை நிறுத்தி விட்டு பள்ளி வகுப்பறைகளில் அதை நாம் சரியாக அவர்களுக்கு புரிய வைப்பதை ஆரம்பித்தாலே எதிர் பாலினத்தின் மீதான பார்வையை நம்மால் மாற்ற முடியும். ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவரும் கடைபிடிக்கப் படவேண்டியதாகும். எப்போதும் அது பெண்ணை சுற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு உடைக்கப்படவேண்டும். மேலும் அரசாலும் இது போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.பெண்களை வெளியே அனுப்புவதில் உள்ள தயக்கத்தை உடைத்து விட்டு தற்காப்புகளால் அவர்களை காத்துக் கொள்ள வழிவகை செய்து அவர்களின் சுதந்திரத்தை முற்போக்கான நடவடிக்கைகளால் உறுதிப்படுத்திட வேண்டும்.

இங்கு பெண் சுதந்திரம் என்பது ஆடைகளிலும் அவர்கள் நடத்தைகளிலும் ஆண்கள் செய்யும் தவறுகளை மட்டும் பெண்கள் நிகழ்த்த முற்படுவார்கள் எனவும் பெரும்பாலானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.ஆனால் இங்கு பல பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் வீட்டிற்குள் நுழைவதும் அவர்கள் பட்டப்படிப்பு முடிப்பதும் அவர்களுக்கு தோன்றும் காலம் வரையிலும் வேலைக்கு செல்வதும் தனக்கு பிடித்த துணையை தானே தேர்ந்தெடுத்து வாழ்வதுமே இங்கு குதிரை கொம்பாய் உள்ளது.ஆனால் இதனை ஆண்கள் மிக சர்வ சாதாரணமாக செய்து விட முடியும். இதில் எங்கு பெண்கள் மற்ற சுதந்திரத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது?

பழிச்சொற்கள் எங்களுக்கு புதிதல்ல.ஆனால் அதை நாங்கள் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கும் காலமும் அல்ல இது.முடிந்தால் தைரியப்படுத்தி எங்களை முன்னெழுப்புங்கள்.இல்லையேல் தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள்.
நாங்கள் முன்னேறுவோம்!!
வீறு பெறுவோம்!!!

-எஸ்.காவியா

எஸ்எப்ஐ மாநில செயற்குழு

Share:

Author: theneeweb