வேலியே பயிரை மேயலாமா?

 

–          கருணாகரன்   —

 

கிளிநொச்சியில் நடக்கின்ற அதிசயமான நடவடிக்கைகள் சிலவேளை சிரிப்பை உண்டாக்கும். அந்தளவுக்குக் கோமாளித்தனமானவை. இதெல்லாம் சிலவேளை எரிச்சலை ஏற்படுத்தும். ஏனிப்படிச் சின்னத்தனமாக (மதிப்புக் கேடாக) நடந்து கொள்கிறார்கள் என்று. சிலவேளை கோபத்தை உண்டாக்கும். அவ்வளவுக்கு மக்களை அடி முட்டாளாக்குகிறார்களா? என.

உங்களுக்குக் கூட இந்த உணர்வுகள் ஏற்படலாம்.

பாருங்கள், சில வாரங்களுக்கு முன்பு கிளிநொச்சி நகரில் ஏற்கனவே திறக்கப்பட்ட பூங்காவை மறுபடியும் திறந்து வைத்தார்கள். இரண்டுக்கும் பெரிய விழாக்கள், செலவுகள், விளம்பரப்படுத்தல்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுச் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நோயாளர் காவு வண்டிகளை (அம்புலன்ஸை) திரும்பவும் வழங்கி வைத்தார்கள்.

எல்லாமே அரசியலுக்கான காட்சிப்படுத்தல்கள். (விளம்பரப்படுத்தல்கள்).

இந்த “வங்குரோத்து அரசியலை”ப்பற்றிச் சில வாரங்களுக்கு முன்பு இதே பத்தியில் எழுதியிருந்தேன். ஊடகங்களிலும் இதைப்பற்றிய செய்திகள் வந்திருந்தன. சனங்களும் இந்தச் செயல்களையிட்டு முகம் சுழித்திருந்தனர். சனங்கள் மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சலிப்பையும் தலைகுனிவையும் சொல்லி வருத்தப்பட்டிருந்தனர்.

ஆனாலும் திருத்தமோ மாற்றங்களோ நிகழவில்லை.

யார் என்ன சொன்னாலும் நாங்கள் இப்படித்தானிருப்போம் என்பதைப்போல மறுபடியும் அதே விதமான செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு அண்மையாகவும் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவும் சில வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன. சனப் புழக்கம் அதிகமுள்ள பிரதேசம் இருளில் இருக்கிறது. அதற்கு ஒளியூட்டப்பட வேண்டும் என்று பலரும் விடுத்திருந்த நீண்டகாலக் கோரிக்கைக்குப் பிறகே இந்த சூரிய ஒளியிலான (Solar) மின்விளக்குகள் அந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்தன.

இப்பொழுது என்ன நடந்திருக்கிறது என்றால், அந்த மின்விளக்குகள் திடீரெனக் காணாமல் போய் விட்டன. அவற்றை அங்கிருந்து பிடுங்கி எடுத்துக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் பொருத்தியிருக்கிறது கரைச்சிப்பிரதேச சபை.  இதனால் இந்த இடங்கள் மறுபடியும் இருளில் மூழ்குகின்றன.

புதிதாகப் பொருத்தப்பட்ட இடம் ஒன்றும் பொது இடமோ சனப்புழக்கம் அதிகமுள்ள பிரதேசமோ அல்ல. அது படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள் உள்ள பிரதேசமாகும். அங்கே உள்ள காணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு  முன்பு தீர்மானிக்கப்பட்டவாறு செஞ்சோலைச் சிறார் இல்லத்தில் தங்கிப் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இப்பொழுது அந்தக் காணிகளில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு புதிய மின்னிணைப்புகளைச் செய்வதே முறை. அதுதான் நிரந்தரமானதும் கூட. அது அவசியமானது. இதற்குரிய ஏற்பாட்டினை மின்சார சபையின் மூலமாகவே செய்ய வேண்டும். மின்னிணைப்பை மட்டுமல்ல, காணிகளைத் துப்புரவு செய்வதற்கான உதவி, குடிநீருக்கான ஏற்பாடு, வீட்டுத்திட்டம் போன்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அதற்கு முன்பு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

இதற்கென மீள் குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உரிய ஏற்பாடுகளும் நிதி ஒதுக்கீடுகளும் உண்டு. இதைச் சரியாகச் செயற்படுத்துவதே செய்ய வேண்டியது. இதற்குரிய நிர்வாகப் பொறிமுறையும் உள்ளது. இவற்றைக் கண்காணித்து முறைப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளுடைய பணியாகும்.

இதற்கும் கூட ஏற்பாடுகள் உண்டு.

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என. இதற்கு அதிகாரமும் நிதி ஒதுக்கீடும் ஆளணியும் மக்களுடைய வரிப்பணத்தில் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதையெல்லாம் விட்டு விட்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்விளக்குகளை அங்கிருந்து எழுந்தமானமாக அப்புறப்படுத்தி, இன்னொரு இடத்தில் நிர்மாணிப்பது எந்த வகையிலும் சரியானதல்ல. இது நிர்வாகச் செலவீனம் மட்டுமல்ல, சரியான அபிவிருத்திக்கு எதிரான முட்டாள்தனமான நடவடிக்கையாகும்.

இவ்வாறு செய்யும்போது தேவையற்ற செலவீனம் உண்டாகிறது. முதலில் ஒரு நிர்மாணச் செலவு. பிறகு அங்கிருந்து அதை அகற்றுவதற்கு இன்னொரு செலவு. பின்னர் புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கு வேறொரு செலவு.

மட்டுமல்ல, முன்பு நிர்மாணித்தபோது ஒரு அபிவிருத்திக் காட்சி (படம் காட்டுதல்). பின்னர் இன்னொரு இடத்தில் (அதே பொருட்களைக் கொண்டுபோய்) அதைப் பொருத்தும்போது இன்னொரு அபிவிருத்திக் காட்சி. (இன்னொரு படம் காட்டுதல்)

வெளியே இருந்து பார்க்கின்றவர்களுக்கு இரண்டு இடங்களிலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தோன்றும். ஆனால்,  உண்மையில் அப்படியானதல்ல. ஒரு இடத்தை இருளாக்கியே இன்னொரு இடத்துக்கு ஒளியூட்டப்படுகிறது. அந்த இடம் இன்னும் எத்தனை நாளில் இருளாக்கப்படுமென்று தெரியாது. ஆனால், நிச்சயமாக அதற்கு வாய்ப்புண்டு.

இந்த மாதிரி ஒரே பொருட்களை வைத்துப் பல  இடங்களில் அபிவிருத்தி (வளப்பகிர்வும் சேவையும்) செய்யப்படுவதாகக் காட்டப்படுவது எந்தக் கணக்கில் அடங்கும்?

சிலவேளை இது ஒரு நடமாடும் சேவை என்று சொல்லிக் கணக்கு விடக்கூடும். ஆனால், இது அப்படி நடமாடும் சேவையே அல்ல.

சந்தேகமேயில்லை. வாக்கு வங்கி அரசியலுக்கான முயற்சியே.

தை எந்த நிர்வாக ஒழுங்கின்கீழ் – எத்தகைய நிர்வாக முறைமையின் கீழ் செய்கிறது – அனுமதிக்கிறது கரைச்சிப் பிரதேச சபை? இதனையிட்டு வடமாகாண உள்ளுராட்சித்திணைக்களம் எத்தகைய அவதானத்தைக் கொண்டுள்ளது? இதையெல்லாம் எப்படி நாம் புரிந்து கொள்வது?

உண்மையில் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து அகற்றியிருக்க வேண்டியதில்லை. பதிலாக மின்சார சபையின் மூலம் அங்கே குடியேறுவோருக்கான துரித மின்னிணைப்பை வழங்குவதே. அது அவர்களுக்குப் பல வழிகளிலும் பயனுடையதாக இருக்கும். அந்த மின்னிணைப்பில் வீதிக்கான விளக்குகளையும் பொருத்தலாம்.

அதேவேளை ஏற்கனவே இருந்த இடத்தை இருளாக்க வேண்டியதுமில்லை. இதையெல்லாம் கேட்பது யார்?

இப்படித்தான் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.

2017 இல் கிளிநொச்சியிலிருந்து இரண்டு மாணவிகள் றோல் போல் (Roll Ball) விளையாட்டுக்குத் தெரிவாகி பங்களாதேசுக்குப் பயணமாகிவிருந்தனர். அவர்களுடைய பயணச் செலவுக்காக அவர்கள் பலரிடத்திலும் உதவிகளைக் கோரியிருந்தனர்.

அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் 100 டொலர் பணத்தை மாணவிகளுக்கு வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினைத் தொடர்பு கொண்டு குறித்த மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய வீதம் வழங்குமாறு பணித்திருந்தார்.

சங்கத்தின் முறையியல்படி அப்படிப் பணத்தினை வழங்க முடியாது என சங்க நிர்வாகம் தெரிவித்தது. அப்படிப் பணத்தினை வழங்குவதாக இருந்தால் அதனை ஒரு ஊழியரின் அல்லது அங்கத்தவரின் பெயரில் கடனாகப் பதிவு செய்தே வழங்க முடியும் என சங்க நிர்வாகம் கூறியது.

“என்ன செய்தாவது நீங்கள் அந்தப் பணத்தை வழங்குங்கள். அதை மீளளிப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்கிறேன் என சிறிதரன் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் சங்கம் பணத்தினை வழங்கியது. அந்தப் பணத்தினை குறித்த மாணவிகளுக்கு வழங்கி வைத்தார் சிறிதரன். மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பணத்தினை வழங்கினார் என்று ஊடகங்களிலும் செய்திகள் வந்திருந்தன. மாணவிகளும் மகிழ்ச்சியோடு தங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், அந்தப் பணம் பாராளுமன்ற உறுப்பினரால் சங்கத்துக்கோ குறித்த பெயரில் கடனாகப் பெற்று வழங்கியவருக்கோ மீளச் செலுத்தப்படவில்லை. குறித்த உறுப்பினர் அந்தக் கடனைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இதைப்போல இன்னொரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

துவும் முன்பு சொன்னதைப்போல றோல் போல் விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளுக்கான ஊக்குவிப்புக்கான பணம் வழங்கலேயாகும்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய றோல்போல் போட்டியில் இலங்கை அணியில் போட்டியிடுவதற்கு கிளிநொச்சியிலிருந்து இரண்டு மாணவிகள் பங்கு பற்றினர்.

இவர்களுடைய பயணச் செலவுக்காக உதவி கோரப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு மாணவிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதமாக  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிப்பிள்ளை இந்த நிதியை பொது நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார். இந்த நிதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சார்பில் வழங்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களிலும் அவ்வாறே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இந்தத் தகவல் தவறு என்று மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி கிளிநொச்சி மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து மாணவிகளுக்காக வழங்கப்பட்டது. அதுவே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றன மாவட்டச் செயலகத் தகவல்கள்.

அப்படியென்றால் எது உண்மை? இரண்டு இடங்களிலும் இதற்கான கணக்கு வைப்பு வைக்கப்படுமா? அப்படியென்றால் அது மோசடியாகுமே. ஒரே நிதி இரண்டு தரப்பினால் செலவழிக்கப்படுவதாகக் காட்டப்படுவது சரியான வழிமுறையா?

இப்படியெல்லாம் தவறுகள் நடக்க வேண்டிய அவசியமென்ன? அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி நகைச்சுவையாகக் கடந்து போய் விட முடியாது.

இது நிர்வாக ஒழுங்குமுறையோடு சம்மந்தப்பட்ட விசயம். திணைக்களங்களோடு தொடர்புடைய சங்கதி. நிதி மற்றும் கணக்குகள் சம்மந்தமானவை. மக்களின் முன்பு நிகழ்கின்றவை. முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை போன்றவற்றினால் செயற்படுத்தப்படுகின்றவை.

ஆகவே இங்கேயெல்லாம் தவறுகளே நடக்கக்கூடாது. நடக்கின்ற தவறுகளையும் களைவதே நடக்க வேண்டியது. தவறுகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தவும் தட்டிக் கேட்கவும் வேண்டிய தரப்புகள் இப்படித் தவறுகளைச் செய்யலாமா?

வேலியே பயிரை மேயலாமா?

இதெல்லாம் சுயநலம் தலை விரித்ததால் வந்த வினையன்றி வேறென்ன?

00

Share:

Author: theneeweb