சிறைப்பிடிக்கப்பட்ட ஹெரோயின் கப்பல் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்கள்

120 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தென்கடல்பரப்பில் சிறைப்பிடிக்கப்பட்ட ஈரானிய கப்பல், டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ், இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையின், உயர் அதிகாரி ஒருவர் இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

காவல்துறை விசேட அதிரடிப்படையினர், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் மேற்கொண்ட கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.

இதன்போது குறித்த கப்பலில் இருந்த 9 ஈரான் நாட்டுப் பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கப்பல் சிறைப்பிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், 500 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் சந்தேகத்துக்குரியவர்களினால் கடலில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் பயணித்த குறித்த ஈரான் கப்பலானது பாகிஸ்தானிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb