பிரெக்ஸிட் விவகாரம்: தெரசா மே பதவி விலக நெருக்கடி

பிரெக்ஸிட் விவகாரத்தில் நெருக்கடி முற்றி வருவதால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக கோரி அவரது கட்சியினரே போர்க்கொடி உயர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரிட்டன் ஊடக தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய நாடுகளுடனான உறவு குறித்து தெரசா மே ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

தெரசா மேக்கு அதிக அழுத்தம் தரும் நடவடிக்கையில் அவரது கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.அரசியல் ரீதியில் தெரசா மேவின் நிலைப்பாடு பலவீனமாகக் காணப்படுவதால் அவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்;  பிரெக்ஸிட் நடைமுறைகளை கையாள்வதிலிருந்து அவர் விலக வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே வலியுறுத்த தொடங்கியுள்ளனர் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த தகவல்களை கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த  எம்.பி. டேவிட் லிடிங்டன் முற்றிலும் மறுத்துள்ளதுடன், பிரெக்ஸிட்டைப் பொருத்தவரை 100 சதவீதம் பிரதமருக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb