120 கோடி ரூபா ஹெரோயினுடன் சிக்கிய ஈரானியர்கள்

120 கோடி ரூபாவிற்கும் அதிகப்பெறுமதிக் கொண்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் நாட்டவர்களையும் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தெற்கு கடற்பரப்பில் படகு ஒன்றில் குறித்தப் போதைப்பொருட்களை அவர்கள் கடத்திவந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 29ம் திகதி வரையில் அவர்களை தடுப்பில் வைத்து விசாரிப்பதற்கு காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதேநேரம் அவர்கள் யாருக்கும் ஆங்கில மொழி தெரியாது என்பதால், கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியது.

கடற்படையினரின் துணையுடன், விசேட அதிரடிப்படையினரும், காவற்துறை போதைப் பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து தெற்கு கடற்பரப்பில் வைத்து 100 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Share:

Author: theneeweb