கடும் வறட்சியால் தினமும் 4 மணிநேரம் மின்வெட்டு அமல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வறண்ட வானிலை காரணமாக திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் தினந்தோறும் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வார நாள்களில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் என தினமும் 4 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும். சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் மட்டும் மின்தடை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட பொது விடுமுறை நாள்களில் மின்வெட்டு இருக்காது.

நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் வறண்ட வானிலையால் நீர் மின்தேக்க அணைகளில் இருந்து மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, அணைகளில் உள்ள நீர் இருப்பு குடிநீர் தேவைக்கும், அத்தியாவசிய பாசனத் தேவைக்கு மட்டுமே உள்ளது.
தற்போதைய வறட்சியால், நீர் மின் அணைகளில் இருந்து மின்சார உற்பத்திக்கு சாத்தியமில்லை. நாட்டின், மின்சாரத் தேவையை நீர் மின் நிலையங்களே பூர்த்தி செய்து வரும் நிலையில், தற்போதைய வறட்சி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, 3 நாள்களுக்கு முன்பு மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் உள்ள பகுதிகளில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டது. அதன்படி, கொழும்பில் இருந்து 135 கி.மீ.க்கு அப்பால் உள்ள மெளஸகல்லே நீர்மின் அணைப்பகுதியில் 45 நிமிடங்கள் வரை செயற்கை மழை பெய்விக்கப்பட்டது.

வறட்சியை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் வாரத்துக்கு இரண்டு நாள்களுக்கு செயற்கை மழையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, இலங்கை மின்வாரிய மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb