உயிர்களை உரமாக்கி இரத்தக் கண்ணீர் வடித்து உருவாக்கி வளர்த்த மாகாண சபைகள்: நிலைத்திருந்து நிமிர்ந்து செழிக்குமா – இல்லை இங்குள்ள அரசியலில் கருகி காணாமற் போகுமா?

அண்ணாமலை. வரதராஜா பெருமாள் —–

இன்றைய நவீன ஜனநாயக உலகில் மத்தியிலிருந்து கீழ் நோக்கிய அதிகாரப் பகிர்வானது சட்டத்தின் ஆட்சிக்கான நான்காவது மிக அவசியமான தூண் என ஆகியுள்ளது. அதிலும் பல் தேசிய இனங்களைக் கொண்ட நாட்டுக்கு மாகாணங்களுக்கும், கிராம மட்டங்களிலும் சட்டவாக்க அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரங்களும் பகிரப்படுவது மிக அவசியமானதாகும். இலங்கையில் மாகாண சபை அமைப்பு முறையானது இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வுக்கு வேண்டிய ஓர் ஆட்சிக் கட்டமைப்பாகவே உருவானது.

இப்போது இலங்கையின் தென்பகுதியிலும் அது தவிர்க்கப்பட முடியாத அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரையில் மாகாணசபை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் – காத்திரமான வினைத்திறனுடையதாக செயற்படுத்த வேண்டும். ஆனால் நடப்பதென்ன?
தமிழ் தேசியவாத சுலோகங்களை முழங்கி அரசியல் செய்வோர் மாகாண அதிகாரக் கதிரைகளைத் தமதாக்கிக் கொள்ளவும், அந்தப் பதவிகளின் வழியாக தமது சுய நலன்களைப் பெருக்கிக் கொள்ளவும், அந்த அந்தஸ்தின் மூலம் கிடைக்கின்ற சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்கவுமே மாகாணசபைகளை பயன்படுத்துகிறார்கள். மாகாணசபைகளின் அதிகாரங்களைக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்கு அவசியமான கடமைகளை மேற்கொள்ளாமல், அவற்றை தங்களின் பொழுது போக்குக்கான உரையாடல் மற்றும் பட்டிமன்ற மண்டபங்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

சிங்களப் பேரினவாதிகளோ, சர்வதேச சமூகங்களை சாந்தப்படுத்துவதற்கும் – “எவிடம் எவிடம்”“புளியடி புளியடி” என கண்ணை கட்டி திரும்ப முடியாத இடத்தில் கொண்டு போய் விடுகின்ற சிறுவர்களின் விளையாட்டைப் போன்று – மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை திசைமாற்றி, மடை மாற்றி கொண்டு சென்று மாகாண சபைகளை வெறும் கண்காட்சி மண்டபங்களாக விட்டு வைத்திருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு இந்த மாகாண சபை அமைப்பு முறை பயனற்றது என்றோ, பயன்படுத்த முடியாத ஒன்று என்றோ கூற முடியாது. சங்கடங்களும் சவால்களும் உள்ளன என்பது தெரிந்ததே. மாகாண சபையை தொடர்ந்து மேலும் ஆக்கபூர்வமான பலங்களைப் பெறுகின்ற நிலைமைகளையும்;, அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன்களில் காத்திரமான முன்னேற்றங்கள் ஏற்படுத்துவதையும் மாகாண சபைகளின் காத்திரமான நடைமுறைகளின் மூலமாக சாத்தியமாக்க முடியும். அதற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தெளிவான தீரக்கமான செயற்பாடுகளும் அவசியமாகும்.

ஆனால், இங்கே நடப்பவையென்ன? பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுபவர்களும், பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுபவர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிர் முகமாக செயற்படுவது போல காட்டிக்கொண்டாலும், இவ்விருபகுதியினரும் மாகாண சபைகளை பயனற்றவைகளாக – அர்த்தமற்றவைகளாக ஆக்குவதில் ஒருங்கிணைந்தே செயற்படுகின்றனர்.

சிங்கள பேரினவாதம் வெளிப்படையான பேய்

மத்திய அரசாங்க அதிகாரத்தில் இருப்போர்; அவ்வப்போது அரசியற் தீர்வின் மீது அக்கறை கொண்டவர்கள் என காட்டிக் கொள்வதற்காக “பாராளுமன்றக் கமிட்டி”,“சர்வ கட்சி மாநாடு”,“அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு”, அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழு” என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடகங்களை அடுத்தடுத்து அரங்கேற்றி வந்துள்ளனர். பிரேமதாசா தொடக்கம் சந்திரிகா மற்றும் ராஜபக்~hக்கள் உட்பட ரணில் விக்கிரமசிங்கா வரை இதுவே நடந்து வந்துள்ளது. வாய்ப்புக்கள் வசமாக அமையுமிடத்து மாகாண சபை முறையை இல்லாதொழித்து விட எந்தவொரு சிங்கள பேரினவாத அரசியல் வாதியும் தயங்க மாட்டார் என்பதையே இலங்கையின் இதுவரையான அரசியல் வரலாறு தெரிவித்து வருகிறது.

உள்ளிருந்தே கொல்லும் கிருமிகள்

விக்னேஸ்வரன் தலையிலான தமிழ்த் தேசக் கூட்டணியினர்; மாகாண சபையின் பதவிகளில் இருந்து கொண்டு அதனால் கிடைத்த பதவி சுகபோகங்களை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டனர் – கேட்டும் பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த மாகாணசபையை தமிழ் மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயற்படுத்தினார்களா என்ற கேள்விக்கு “இல்லை” என்பதே அனைவரதும் பதில் – அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பணங்களை கொழும்புக்கு திரும்பிப் போக விட்டனர்: தமிழர்களுக்கு எதுவம் கிடைத்துவிடக் கூடாது என்ற இலக்குடன் மத்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தடையாகவே இருந்தனர்: மாகாண சபைக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பெறுவதற்கான எந்த நடவடிக்கையையம் மேற்கொள்ளவில்லை. மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்தபோது அதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளாது, அவற்றை மௌனமாக அங்கீகரிப்பவர்களாகவே செயற்பட்டுள்ளனர்.

இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (த.தே.கூக்காரர்கள்) தமிழ் மக்களை உசுப்பேத்தி அமோகமான வாக்குகளைப் பெற்று 5 ஆண்டுகள் நிறைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் சாதித்தவை என்ன? லஞ்ச ஊழலும், நிதி மோசடிகளும், அதிகார து~;பிரயோகங்களும், உள்வீட்டு சண்டைகளுமே! நம்பிய தமிழ் மக்களோ ஏமாற்றப்பட்டார்கள் – அரசியல் அனாதைகளாக நடுத் தெருவில் கைவிடப்பட்டார்கள்.
ததேகூக்காரர்களின் ஆதரவிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இதுவரை தொங்குகிறது. சம்பந்தர் ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் அரசியற் தீர்வு வரும் என தெரிந்தே பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எதுவும் நடக்காது – ஐக்கிய தேசியக் கட்சி எதுவும் செய்யாது என்று தெளிவாகத் தெரிந்தும் “ பாராளுமன்ற இடைக்கால அறிக்கை”,“ பாராளுமன்ற நிறைவேற்றுக் குழு அறிக்கை” எனும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களைக் காட்டி இதோ ஒற்றையாட்சிக்குள் சம~;டி தயார் என கூச்சநாச்சமெதுவுமின்றி தமிழரசுக் காரர்கள் சுத்துமாத்து பண்ணி வருகின்றனர்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

புதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் ஒருபுறமிருக்க, இருக்கின்ற மாகாண சபைகள் முடிந்த அளவு சுயாட்சி உடையவையாகவும், நிதி வளங்கள் கொண்டவையாகவும் செயற்படுவதற்கு வேண்டிய சட்டரீயான ஏற்பாடுகளை சாதாரண சட்டங்கள் மூலமாகவும் நிர்வாக சுற்றறிக்கைகள் மூலமாகவும் ; சாத்தியமாக்கியிருக்கலாம்: மேலும், இருக்கும் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள அடிப்படையான குறைபாடுகளை ஒரு மிகக் குறைந்தபட்சமான அரசியல் யாப்பு திருத்தம் மூலம் நீக்குவதற்கு முயற்சித்திருக்கலாம். அதற்காக எதனையும் செய்யாத ததேகூக்காரர்கள் தங்களுக்குப் பிடிக்காத விக்னேஸ்வரனை முடக்கும் இலக்குடன் செயற்பட்டு மாகாண சபையை சட்டரீதியாகவும், நடைமுறைகள் ரீதியாகவும் பல்வேறு வகைகளில் பலயீனப்படுத்திவிட்டார்கள்;: மாகாண சபை தொடர்பாக பல பிழையான முன்மாதிரிகளை உருவாக்கி விட்டுள்ளார்கள்.

அடுத்த தேர்தலில் ததேகூக்காரர்கள் மாகாண சபை அதிகாரத்தைக் கைப்பற்றினாலும,; இவர்கள் எப்படி விக்னேஸ்வரனுக்கு எதிராக ஐதேக காரர்களைப் பயன்படுத்தினார்களோ அதையே முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்த முறை ராஜபகஷ~hக்கள் இவர்களுக்கு எதிராக செயற்படப் போகிறார்கள்.

ஆக மொத்தத்தில் விக்னேஸ்வரன் கூட்டத்தினரும், ததேகூக்காரர்களும் மாகாண சபை தொடர்பான தமிழ் மக்களின் அபிலாஷைகளே நிர்மூலமாக்குவதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! கண்ணீராற் காத்தோம்!
மாகாண சபை அமைப்பு முறை இலங்கையில் நடைமுறைக்கு வந்து 31 ஆண்டுகளாகி விட்டது. 1930களிலிருந்து தமிழர்கள் எழுப்பி வந்த உரிமைக் குரல்களுக்கும், பின்னர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக் கணக்கில் உயிர்த் தியாகங்களைக் கொடுத்து போராடியும் அடைந்த ஒரேயொரு பேறு இன்றிருக்கும் மாகாண சபை முறை மட்டுமே. 1990 தொடக்கம் 2009 வரை தமிழீழக் கனவுகளோடு தமிழ் மக்கள் கொடுத்த லட்சக் கணக்கான உயிர்த் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டன.

பல அவமானங்களைத் தாங்கிய படியும் பல்லாயிரக் கணக்கான உயிர்த் தியாகங்களைக் கொடுத்தும் சாதிக்கப்பட்ட மாகாண சபை முறை இப்போது தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஓர் ஆட்சி நிறுவனமாக சிங்கள பேரினவாத சக்திகளால் மட்டுமல்ல பிரதானமான தமிழ்க் கட்சிகளாலும் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பிரேமதாசாக்களும், ராஜபக் ß~hக்களும், விக்கிரமசிங்காக்களும், சம்பந்தர்களும், விக்னேஸ்வரர்களும் கூட்டாளிகளே.

“இரண்டு பட்ட இலங்கையில் தனிநாடு” என்ற இலட்சியம் இப்Nபுhது காலாவதியாகிப் போய்விட்டது. “ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஷ்டி”,“ஒரு நாடு இரு தேசம் என்ற வகையில் இணைப்பாட்சி”,“மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி” போன்ற சுலோகங்கள் கவர்ச்சிகரமானவை. ஆனால் அவை எதுவும் நிலவும் நடைமுறைகளோடு தொடர்பு பட்டவையாக இல்லை. மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக சுயாதீனமாக செயற்படக்கூடிய அரசியற் கட்டமைப்புகளையும், தெளிவான செயற்படு முறைமைகளையும், திட்டவட்டமான அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபை முறையை உருவாக்குவதற்கான உருப்படியான நடைமுறைகளை தமிழர் மத்தியில் உள்ள கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தமிழர் கட்சிகள் அவ்வாறான அக்கறையுடன் செயற்படுவதில்லை என்பதே உண்மையாகும்.

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் தங்களை வானமேறி வைகுண்டம் கூட்டிப் போவார்கள் என தொடர்ந்தும் ஏமாறும் போக்கையே தமிழ் மக்கள் தமது அரசியலில் கடைப்பிடித்து வருகின்றனர. அது மாறுவதற்கோ அல்லது அதனை மாற்றுவதற்கோ உள்ள சாத்தியங்களைக் காண முடியவில்லை.

தாகமுள்ளவர்களே தண்ணீரைத் தேடுவர்;

எமது வடக்கு கிழக்கு பிரதேசங்கள்; முன்னேற வேண்டும் – அபிவிருத்திக்கான பன்முக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்: எமது பிள்ளைகளின் கல்வி; வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புக்களில் உரிய மாற்றங்கள் நிகழ வேண்டும், எமது பகுதிகளில் தரமான வைத்திய வாய்ப்புகளும் சுகாதார வசதிகளும் இலகுவில் கிடைக்க வேண்டும்: தொழில்கள் பெருக வேண்டும், எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வேண்டும்: எமது அடிப்படையான குடியியற் தேவைகளை எமக்கு அண்மையாக உள்ள அரச நிறுவனங்களிலிருந்து இலகுவாக – கௌரவமாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்: எமது சமூக கட்டமைப்புகள் முற்போக்கான அம்சங்களை உள்வாங்கி முன்னேற வேண்டும்: இங்கு அச்சமில்லாத சூழலும், அமைதியும் சகோதரத்துவமும் நிலவுகின்ற வாழ்க்கையும் நிலை பெற வேண்டும்;: எமது நலன்கள் தொடர்பான அக்கறையும் பொறுப்பும் கொண்ட தலைவர்கள் அதிகாரம் உடையவர்களாக எமக்கு அண்மையில் அமர்ந்து செயலாற்ற வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் – தேவைகள் கொண்ட கீழ்மட்ட – அடிமட்ட மக்களுக்கு மாகாண சபைகள் அவசியமாக உள்ளன.
ஆனால்,வடக்கு கிழக்கில் பணக்காரர்களாக மற்றும் வசதிகளோடு உள்ள மேட்டுக் குடியினரைப் பொறுத்த வரையில் அவர்களின் தேவைகளுக்கு மாகாண சபைகளைத்தான் அவர்கள் நம்பியிருக்க வேண்டுமென்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் உளளுர்ரிலுள்ள அதிகார பீடங்களின் கதவுகளை எந்நேரமும் திறந்து தமக்கு வேண்டியனவற்றை பெற்றுக் கொள்ளும் வல்லமையுடையவர்கள்: கொழும்பில் அவர்கள் எவரது பின்கதவுகளுக்கு உள்ளாலும் புகுந்து தங்களுக்கு தனிப்பட்டரீதியில் ஆகவேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ளும் ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு மாகாண சபைகளின் இருப்பும் வினைத்திறன் கொண்ட செயற்பாடுகளும் அவசியமானவையல்ல – அது தொடர்பாக அவர்கள் வெவ்வேறு அரங்கங்களில் உதட்டளவில் பேசிக் கொண்டாலும், அதன் மீது அவர்களுக்கு உணர்வுபூர்வமான அக்கறையில்லை என்பதையே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் காட்டுகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை வம்சாவழித் தமிழர்களிற் பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையிலும், இலங்கை வாழ் தமிழ் புத்திஜீPவிகளைப் பொறுத்த வரையிலும் இங்கு வடக்கு கிழக்கிலுள்ள மாகாண சபைகளின் அதிகாரக் கதிரைகளில் தமிழரசு வாதிகள் உட்காருவதா அல்லது தமிழ்த் தேச வாதிகள் உட்காருவதா என்பதுக்கு அப்பால் மாகாண சபைகள் தொடர்பாக காத்திரமான புரிதலோ அல்லது ஈடுபாடோ கொண்டிருக்கிறார்கள் என்றில்லை.

இருக்கின்ற மாகாண சபைகள் வல்லமையானவையோ – அற்றவையோ அவை எமக்கு உரியவை: எமது சமூக பொருளாதார நலன்களுக்கு அவசியமானவை: எனவே அவற்றை நாமே பலப்படுத்த வேண்டும் – நாமே வளப்படுத்த வேண்டும்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றார் சான்றோர்: இதுவும் இல்லையென்றால் இனி எதுவுமில்லை என்பவையெல்லாம் உண்மைகளே. ஆனால், அவ்வாறான அக்கறை கொண்டோர் எவராயினும் இங்கு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அப்படி யாராவது இருந்தாலும் அவர்களால் மாகாண சபைகளின் அதிகாரங்களை கொஞ்சமும் நெருங்க முடியாது என்னும் நிலையே தமிழர்களின் அரசியலாக உள்ளது.

வடக்கு கிழக்கில் மாகாண சபை முறையை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கும், அதனைப் பாதுகாத்து நிலைபெற வைப்பதற்கும் உயிரிழப்புகளைக் கொடுத்து தியாகங்கள் செய்தவர்களும், உழைத்து களைத்தவர்களும் இன்றைய நிலை கண்டு கவலை கொள்ளலாம், ஆத்திரப்படலாம், விரக்தியடையலாம்,ஆனால், அவர்களுக்கு இன்றைய அரசியலில் முக்கியத்துவம் எதுவும் கிடையாது.

இந்நிலையில், இருக்கின்ற மாகாணசபை முறையின் எதிர்காலம் பற்றி பல கேள்விகள் தோற்றம் பெறுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

Share:

Author: theneeweb