ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் அன்று!

அன்றும் இன்றும் – அங்கம் 03

 

ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ்  அன்று!

 

 சூப்பர் ஸ்டார் ரஜனியின்   2.0 இன்று  !!

 

                                                                   ரஸஞானி

 

 

“ஏழு ரூபாய் சம்பாதித்தபோது கிடைத்த மகிழ்ச்சி ஏழு கோடி ரூபா வருமானத்தில் இல்லை “ என்று தனது பவளவிழாவில் ( 75 வயது) சொன்னவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ்நாட்டில் தேனீ மாவட்டத்தில் பண்ணைப்புரம் என்ற கிராமத்திலிருந்த இடதுசாரி சிந்தனையுள்ள இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது அண்ணன் பாவலர் வரதராஜன் கவிஞர். ஜெயகாந்தனின் நண்பர்.

 

மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்த இளையராஜா, சினிமாவிலும் சேர்ந்து இசையமைக்க விரும்பியபோது, 1969 இல் சென்னைக்குவந்தார். வந்ததும் அண்ணன் பாவலர் வரதராஜனின் நண்பர் ஜெயகாந்தனிடம், சென்னையில் புதுவாழ்க்கை தொடங்குவதற்கு ஆலோசனைகேட்டு,                           ” உங்களை நம்பித்தான் வந்திருக்கின்றேன்” எனச்சொன்னதும், வெகுண்டெழுந்த ஜெயகாந்தன், ” என்னை நம்பி ஏன் வந்தாய், சென்னை உனக்குச்சரிப்படாது. உடனே ஊருக்குத்திரும்பு” என்று விரட்டப்பார்த்தார்.

இளையராஜா
இளையராஜா

ஜெயகாந்தனும்  சிறிய வயதில் கடலூரிலிருந்து ரயில் டிக்கட் எடுக்காமல் சென்னை வந்து கஷ்டப்பட்டவர்தான். அந்தக்கஷ்டம் தனது தோழரின் தம்பிக்கு நேர்ந்துவிடக்கூடாது என்ற அக்கறைதான் அன்று ஜெயகாந்தனிடமிருந்தது.

 

ஆனால், இராசையா என்ற இயற்பெயர் கொண்டிருந்த இளையராஜா, தன்னம்பிக்கையுடன் சென்னையில்  வாழ்ந்து, அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். 1969 இல் சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு 1976 ஆம் ஆண்டுதான் அன்னக்கிளி படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் கிடைத்தது. இடையில் அந்த ஏழு வருடங்களும் அவர் சொந்தம் பந்தம் இல்லாத சென்னைப்பட்டினத்தில் எவ்வாறு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை ஊகித்து அறியமுடியும்.

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைஞானி என்ற பெயரையும் சம்பாதித்து, பல மொழிப்படங்களுக்கும் இசையமைத்து, இந்திய மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

 

அன்று ஜெயகாந்தன், ” திரும்பி ஊருக்குப்போ” என்று சொன்னதைக்கேட்டு அவர் திரும்பியிருந்தால், நாம் இன்று இளையராஜாவை அறிந்திருக்கமாட்டோம்.

 

தனது 75 வயது பிறந்த நாள் கொண்டாட்டத்தில்,  அவர் மனம்திறந்து உதிர்த்த வார்த்தைதான், “ஏழு ரூபாய் சம்பாதித்தபோது கிடைத்த மகிழ்ச்சி ஏழு கோடி ரூபா வருமானத்தில் இல்லை “

 

அன்று தனது 26 வயதில் தான் சம்பாதித்த ஏழு ரூபாவில் கிடைத்த மகிழ்ச்சி, இன்று இவ்வளவு புகழடைந்தும் விருதுகளும் பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமான இசைச்சக்கரவர்த்தியானதன் பின்னரும் –  இன்று தமது 75 வயதில் ஏழு கோடி சம்பாதித்தாலும் மகிழ்ச்சி இல்லை என்று மனம் திறக்கிறார்.

 

“எப்பொழுது கேட்டாலும் புத்தம்புது பூவைப்  போல இருப்பதே பாடல்.  அதுவே பாடலுக்கான தகுதியாகும்”  என்றும்  சேலத்தில் நடந்த தனது  75 ஆவது பிறந்த நாள் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா சொன்னார்.

 

இந்தப்பின்னணிகளிலிருந்து , அன்றும் – இன்றும் மூன்றாவது அங்கத்திற்குச் செல்வோம்.

 

தமிழ்த்திரைப்படங்களுக்கு 20 ஆம் நூற்றாண்டில் பாடல் எழுதியவர்களும் கவிஞர்கள்தான். இந்த 21  ஆம் நூற்றாண்டில்  அண்மையில்  வெளிவந்த 2.0 திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கும்  மதன் கார்க்கி யும் கவிஞர்தான்.  இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.

 

1944 ஆம்  ஆண்டு வெளிவந்த தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ்  படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதிய பாபநாசம் சிவன் அவர்களும் கவிஞர்தான். இவருக்கு முந்திய மகாகவி பாரதியாருக்கு  கடந்த டிசம்பர் மாதம்11 ஆம் திகதி 136 வயது  நிறைவடைந்தது.

 

பாரதியின்  காலத்தில் தமிழ்த்திரைப்படங்கள் இல்லை. ஆனால், அவரது கவிதைகள் பல திரையிசைப்பாடல்களாகிவிட்டன.

அவர் ஒரு சந்தக்கவிஞர். அவரது கவிதை வரிகளில் ஓசை நயமும் எளிமையான சொற்களும் பொதிந்திருக்கும். சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்க கருத்துக்கள் செறிந்திருக்கும்.

 

அதனால் ரசிகர்கள் அவரது கவிதைகள் திரைப்பட பாடல்களாக மாறியவேளையில்,  அவற்றில் லயித்து நெருங்கிவிட்டார்கள்.

இசையமைப்பாளர்கள் பலர் அவரது ஒரே பாடலுக்கு வெவ்வேறு இசைக்கோர்வைகளை அறிமுகப்படுத்தினர்.

 

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒலித்த அனைத்துப்பாடல்களும் பாரதியாரின் கவிதைகள்தான். இதற்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன்.

 

பாபநாசம் சிவன்,  கே. டி. சந்தானம்,   தஞ்சை ராமையா தாஸ் ,  கே. பி. காமாட்சி,  கொத்தமங்களம் சுப்பு,  கு.மா. பாலசுப்பிரமணியம்,  கு.ச.கிருஷ்ணமூர்த்தி , கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி, மருதகாசி, கா. மு.ஷெரீப்,  சுரதா,  வைரமுத்து, மேத்தா, புலமைப்பித்தன்  முதல், சமகால திரைப்படப் பாடலாசிரியர்களான பா. விஜய், பழனி பாரதி, ந. முத்துக்குமார்( இவர் அண்மையில் மறைந்துவிட்டார்) , தாமரை, தமிழச்சி தங்கபாண்டியன்,  சிநேகன், மதன் கார்க்கி என்று தலைமுறைகள் தொடருகின்றன.

 

கே. பி. காமாட்சி:  சிற்பி செதுகாத பொற்சிலையே”

 

கு.மா. பாலசுப்பிரமணியம்:  அமுதைப் பொழியும் நிலவே அருகில் வராததேனோ“,   –   “சித்திரம் பேசுதடி சிந்தை மயங்குதடி”

 

கு.ச.கிருஷ்ணமூர்த்தி : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது  ( இந்தப்பாடல் நடிகவேள் எம். ஆர். ராதாவின் வெற்றிப்படம் இரத்தக்கண்ணீரில் வருகிறது. )

 

கண்ணதாசன் :  கலங்காதிரு மனமே தொடங்கி, கண்ணே கலை மானே வரையில்  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட   பாடல்கள் எழுதியவர்.

1944 –  1981 ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட காலத்தில்  கொடிகட்டிப்பறந்த கண்ணதாசனின் சொல்லாட்சிக்கு சான்றாக அமையும் திரைப்படப் பாடல்கள் ஏராளம். சங்ககால தமிழ் இலக்கியத்தின் கற்பனைச் செறிவும் சொல்லாட்சியும் பாமரனைச் சென்றடையும் வகையில் திரைப்படப் பாடல்களில் புகுதியவர் கண்ணதாசன்.

இவருடை அச்சம் என்பது மடமையடா எனத் தொடங்கும் மன்னாதி மன்னன் பாடலும் கவிதைதான் .  கதாநாயன் எம்.ஜீ.ஆர் . குதிரையில் வரும்போது டி. எம். சவுந்தரராஜன் (மன்னாதிமன்னன்) பாடும் பாடல்.

 

கவிஞர் மருதகாசி எழுதிய   “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற பாடல். நீலமலைத்திருடன் படத்தில் நடிகர் ரஞ்சன் குதிரையில் வரும்போது டி.எம். சவுந்திரராஜன் பாடுவார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:  “கவிதைகளும் பாடல்களும் இலக்கியமாக இருந்தால் மட்டும்போதும்.  அவை மக்களுக்கு நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாக அமையவேண்டும்”  என்ற கருத்தின் வழிவந்தவர்.  சமுதாய உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடைமை, சீர்திருத்தம் போன்ற உயரிய நெறிகளை தனது கவிதைகளிலும் திரைப்படப்பாடல்களிலும் புகுத்தியவர்.

” தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான். ”  என்று மக்கள் திலகம் எம். ஜி. ஆர். சொன்னார்.  பகுத்தறிவுக்கொள்கையை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் பரப்பினார். அது எம். ஜி.ஆரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.  நாடோடி மன்னன் பாடல் ஒன்று அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அதில் வரும் “தூங்காதே தம்பி தூங்காதே”  பல நல்ல கருத்துக்களை மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் விதைத்து.

 

கவிஞர் வாலி:  1958 ஆம் ஆண்டு “அழகர் மலைக் கள்ளன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். இத்திரைப்படத்தில் வாலியின் முதல் பாடலை ‘பி. சுசிலா’ பாடியிருப்பார். பின்னர், தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார்.

 

இவர்தான், “மாதவிப் பொன்மயிலால் தோகை விரித்தால் “       ( இருமலர்கள்)  என்ற இலக்கிய நயம் மிக்க பாடலையும் எழுதினார். இவர்தான் முக்காலா முக்காபலா”  (காதலன்)  என்ற குத்துப்பாடலும்  இயற்றினார். “தனக்கே அதன் அர்த்தம் தெரியாது, பொருள் இல்லாதபோது பொருளுள்ள பாடல்கள் பல எழுதினேன். பொருள் வந்தபோது, பொருளற்ற பாடல்கள் புனைந்தேன்” என்றவர்தான் வாலி.

 

ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 10 இலட்சம் ரூபாய் வசூலித்து அன்று சாதனை படைத்தது!

 

1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.

 

இந்தப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றன. அவற்றுள் இன்றுவரையில்

 

மன்மத லீலையை வென்றாருண்டோ – அன்னையும் தந்தையும் தானே பாரில் – கிருஷ்ணா முகுந்தா முராரே முதலான பாடல்களை மூத்த தலைமுறையினர் இன்றும் கேட்டு ரசிக்கின்றனர். இந்தப்பாடல்களை எழுதியவர்:  பாபநாசம் சிவன்.

 

 ஜெமினி வாசன் தயாரித்த படம்தான் வஞ்சிக்கோட்டை வாலிபன். அதில் இரண்டு பெரிய நட்சத்திரங்களான நாட்டியப்பேரொளி பத்மினியும் வைஜயந்தி மாலாவும் ஆடும் நடனம் முக்கியமானது.  கண்ணும் கண்ணும் கலந்து எனத்தொடங்கும் அந்த பாடல்வரிகளை கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தார். இவரது கதைதான் தில்லானா மோகனாம்பாள்.

 

கண்ணும் கண்ணும் கலந்து பாடலை இதுவரையில் இரண்டு கோடி  ரசிகர்கள் கேட்டு ரசித்துள்ளதாக அறியப்படுகிறது.

 

1967 இல் ஏ.பி. நாகராஜனின் தயாரிப்பு கதை, வசனம் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் திருவருட்செல்வர். இதில்  தொடக்கத்தில் வரும் மன்னவன் வந்தானடி பாடல் புகழ்பெற்றது. கவியரசு கண்ணதாசன் அந்தப்பாடலை இயற்றினார் திரை இசைத்திலகம் கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இந்தப்பாடலின் முதல் அடிகளாக ஐந்து பல்லவிகளை கவியரசர் எழுதியிருப்பார். இறுதி பல்லவியுடன் பி. சுசீலா மன்னவன் வந்தானடி எனப்பாடவும், மன்னராக தோன்றும் நடிகர் திலகம் கம்பீரமாக ஒரு நடை நடந்துவருவார்.

 

இந்தப்பாடாலை பாடுவதற்கு தான் நீண்ட பயிற்சி எடுத்துக்கொண்டதாக  பி. சுசீலா சொல்லியிருக்கிறார். இந்தப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு அபிநயம் தொடர்பான சித்திரிப்பில் நேர்ந்த சிக்கல்களினால்,  பல தடவைகள்  மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டதாகவும்,  நடு இரவு வரையில் படப்பிடிப்பு நடந்ததாகவும் பத்மினி சொல்லியிருக்கிறார்.

 

இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கின்றோம்.

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  உலகெங்கும் திரைக்கு வந்துள்ள சங்கரின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜினி கந்த் – எமி ஜெக்சன் நடிப்பில் வந்துள்ள 2. 0 ( ரூ பொய்ன்ட் சீரோ) திரைப்படத்தின் தொடக்கவிழா 2015 டிசம்பரில்தான் நடந்தது. சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பிலிருந்த இந்த படத்தின் செலவு 600 கோடி என மதிப்பிடப்படுகிறது.

 

3டீ கெமராவினால் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் வரும்   ” எந்திரலோகத்து சுந்தரியே ” பாடலை இதுவரையில் ஐந்து மில்லியன் ரசிகர்கள் கேட்டுள்ளதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

 

இந்தப்பாடலை 1980 இல் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்த மகன்  மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.

 

இந்தப்பாடலை கடந்த சில வாரங்களுக்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்தப்பாடல் மக்கள் மனதில் நிற்கும் என்ற கேள்வியும் இருக்கிறது.

 

அன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாடல்களான மன்மதலீலை, யாரடி நீ மோகினி,   மன்னவன் வந்தானடி ஆகிய தலைப்புகளில் பின்னாளில் திரைப்படங்களும் வந்துவிட்டன.  இனிவரும் காலத்தில் எந்திரலோகத்து சுந்தரியே என்ற பெயரில் ஒரு படமும் வெளியாகலாம். காத்திருந்து பார்ப்போம்!

 

1944 ஆம் ஆண்டு வெளிவந்த ஹரிதாஸ் அந்த ஆண்டு தீபாவளியன்றுதான் ரிலிஸானது. தொடர்ந்து ஒரே தியேட்டரில் 133 வாரங்கள் ஓடியது. அதாவது மூன்று தீபாவளிகளை கண்டது. சூப்பர் ஸடாரின் 2.0 எத்தனை வாரங்கள் ஓடும்?!  இதில் வரும்  எந்திரலோகத்து சுந்தரியே எவ்வளவு காலத்திற்கு ரசிகர்களின் செவிகளில் ரீங்காரிக்கும்…?

 

இசைஞானி இளையராஜா சொல்கிறார்: “எப்பொழுது கேட்டாலும் புத்தம்புது பூவைப்  போல இருப்பதே பாடல்.  அதுவே பாடலுக்கான தகுதியாகும்”

 

இது அன்றும் பொருந்தும் இன்றும் பொருந்தும்!

 

( நன்றி: அரங்கம் – இலங்கை இதழ்)

—0—

Share:

Author: theneeweb