ஜெயமோகன்: சர்ச்சைகளும் விமர்சனப்பண்புகளும்

          கருணாகரன்    —

“எங்கட எழுத்தாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலம் பிறந்திருக்கு. இனி எப்பிடியும் ஒரு ஐயாயிரம் பிரதிகளாவது விற்கும். வீட்டில கட்டவிழ்க்காமலே இருக்கிற புத்தகக் கட்டெல்லாம் போய்ச் சேரப்போகுது. எங்கட ஆக்களிட்ட இந்தளவுக்கு வாசிப்பும் இலக்கிய நேசிப்பும் இருக்கும் எண்டு நான் கனவிலும் நினைச்சதில்லை. ஸ்ப்பா…! கவலைப் படவே தேவையில்லை.” என்று சொல்லிக்கொண்டு வந்தார், நவம்.

என்ன, ஏது என்று தடுமாறினேன்.

யாழ்ப்பாண நூலக எரிப்பைப்பற்றி எல்லோரும் ஆண்டுகளாக அழுது புலம்பிப் பிலாக்கணம் வைப்பதைப் பார்த்து விட்டு, புத்தகத்துக்கும் வாசிப்புக்கும் ஏதாவது செய்யலாம் என்று பதிப்பு முயற்சில் ஈடுபட்டோம்.

வீட்டில் இரண்டு அறைகளில் தூசியோடு தூங்கிக் கொண்டிருக்கும் புத்தகங்களை விற்க முடியாமல் வருசக்கணக்கில் மாய்ந்து கொண்டிருக்கிறேன். புத்தகங்களை அனுப்பும்படி கேட்போரில் சிலரும் வாங்கிக் கொண்டு போகிறவர்களில் பலரும் காசு கொடுப்பதற்கு மறந்து விடுகிறார்கள். அல்லது இலவசப் பிரதிகளையே வாங்க விரும்புகிறார்கள். வெளியீட்டு நிகழ்வுகள், அறிமுக நிகழ்வுகளில் எப்படியும் எட்டுப் பத்துப் புத்தகங்கள் காணாமல் போய்விடுகின்றன. அல்லது “தரலாம் காசு“ கணக்கில் வரவே வராத பாக்கியில் வைக்கப்படுகிறது.பெரிய நம்பிக்கையோடும் கனவோடும் பதிப்பகம் தொடங்கிப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. நண்பர்களின் புத்தகங்களைத்தான் இன்னும் அச்சிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் அவர்களுடைய பணத்தில். போட்ட முதலையே எடுக்க முடியாத அளவுக்கு விற்பனை மந்தம். காசைச் செலவழித்தவர்களுக்கு அதைப்பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இப்படி “இலவச இலக்கிய முதலைகள்” வாழ்கிற சூழலில், ஐயாயிரம் பிரதிகளுக்குச் சிறகு முளைக்கப்போகிறது என்றால்…!

என்ன செய்வது என்றே தெரியாமல் திணறிக்கொண்டிருப்பவன் முன்னால் இப்பிடியொரு தேவவாக்கினை ஒருவர் வந்து அருள்கிறார் என்றால்… சந்தோசமும் அதிர்ச்சியும் ஏற்படத்தானே செய்யும்!

“எங்கே இந்த அதிசயம் நடக்குது? அப்படியென்ன திடீரெனக் காற்று மாறியிருக்கு?” என்று கேட்டேன்.

“லுசுப் பயலே!” என்று விளிக்காத குறையாக என்னை முறைத்துப் பார்த்தார் நவம்.

“ஊரில உலகத்தில நடக்கிற ஒண்டும் தெரியாத ஆளாக இருக்கிறியள். இப்பிடியிருந்தால் எப்பிடிப் பதிப்பகத்தை வெற்றிகரமாக நடத்திறது?” என்று கோபித்தார்.

என்னுடைய அப்பாவித்தனத்தைக் கண்டு அவருக்கு எரிச்சல் வந்தது.

“சுத்தி வளைத்துப் பேசி ரத்தத்தைச் சூடாக்காமல் நேரடியாக விசயத்தைச் சொல்லுங்கோ” என்று கடிந்தேன்.

ஜெயமோகன்

“ரண்டு கிழமையாக நாகர்கோயில்மீது ஒரு பெரிய போரே நடக்குது. உலகமெங்குமிருந்து ஈழத்தமிழர்கள் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் ஒரு எழுத்தாளர்தானே. இதில பங்கேற்காமல் மதில் மேல குந்தியிருந்து கொண்டு வேடிக்கை பாக்கிறியளா? அல்லது கள்ள மௌனத்தில கண்ணை மூடிக்கொண்டிருக்கிறியளா?” என்று கேட்டார் நவம்.

இப்போதுதான் எனக்கு விசயமே விளங்கியது.

நிகழ்வொன்றில் ஜெயமோகன் ஆற்றிய உரையொன்று யூ ரியூப்பில் பரவிப் பற்ற வைத்த நெருப்பைப் பற்றித்தான் பேசுகிறார், நவம் என்று.

ஜெயமோகன் மீதான காய்ச்சலின் விளைவு.

மற்றும்படி ஈழ இலக்கியம் பற்றிய கரிசனையினால் நம்மவர்களிடம் ஏற்பட்ட ஆர்வமோ ஈடுபாடோ இதில்லை என்பேன். அப்படி மெய்யாகவே இலக்கியத்தின் மீது ஆர்வமும் மதிப்பும் இருக்குமானால் ஜெயமோகன் சொன்னதையும் விட பல மடங்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஊர்கள் தோறும் நகரம் தோறும் உருவாகியிருப்பார்கள். ஈழத்தில் ஒவ்வொரு புத்தகமும் குறைந்தது பத்தாயிரம் பதினைந்தாயிரம் பிரதிகள் என்று விலைபோகும். புத்தக வெளியீடுகளும் பதிப்பகங்களும் பெருகியிருக்கும். எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மதிப்புறு வாழ்க்கைச் சிறப்பு ஏற்பட்டிருக்கும்.

அப்படியே புக்கர் விருது, நோபல் பரிசு வரையில் அவர்கள் நகர்ந்திருக்கவும் கூடும். ஈழத்தமிழ்ப்படைப்பாளிகளில் ஒரு பத்துப் பேராவது உலகப் பெரு விருதுகளைப் பெற்றிருப்பார்கள்.

அப்படியெல்லாம் நடக்கவே இல்லையே.

ஆனால் நவம் சொல்வதைப்போல பல படையணிகள் முகநூலிலும் சில இணையத்தளங்களிலும் ஜெயமோகனுக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கின்றன, போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. இதில் ஒரு சிலரைத் தவிர, மற்ற எல்லோரும் ஒரே மாதிரியே செயற்படுகிறார்கள்.

“தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்” என்ற கோணத்தில் ஜெயமோகனை எதிர்க்கின்றனர், தாக்குகின்றனர் இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் (?).

தலித்தியவாதிகளோ “இந்துத்துவத்தின் ஆதரவாளராக ஜெயமோகன் செயற்படுகிறார்” என்று சாடுகிறார்கள்.

“ஜெயமோகன் ஒரு ஆபத்தான இடதுசாரிய எதிர்ப்பாளர்” என்று தாக்குகிறார்கள். இடதுசாரிகள்.

“தமிழீழத்துக்கும் தமிழீழப்போராட்டத்துக்கும் எதிரான ஆளாகவே ஜெயமோகனின் கருத்துகள் எப்போதுமிருக்கின்றன. இலங்கையில் இந்திய அமைதிப்படை தவறே இழைக்கவில்லை என்று சொன்னதிலிருந்தே அவர் உண்மைகளுக்கு எதிரான பக்கத்திலிருக்கிறார். அப்படியானவர் எப்படி ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய எழுத்துகளையும் கொண்டாடுவார் அல்லது விமர்சிப்பார்?” என்று கேட்கிறார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நாற்பது ஆண்டுகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இயக்கமொன்றின் பிரதிநிதி.

“தங்களையும் தங்களுடைய எழுத்துகளையும் பொருட்டாகக் கருதாமல் கைவிட்டிருக்கிறார், கருத்துரைக்கிறார் ஜெயமோகன். அவருடைய இலக்கிய மதிப்பீடு உள்நோக்கமுடையது. தவறானது” என்று ஆவேசப்படுகிறார்கள் பெரும்பாலான இலக்கியப்படைப்பாளிகள்.

இப்படியே ஜெயமோகனை எதிர்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உள்ளன. அல்லது இப்படியான காரணங்களை அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பலரும் தங்களுடைய கருத்துகளை உரிய முறையில் தருக்கபூர்வமாக நிறுவி ஜெயமோகனை எதிர்க்கவில்லை. ஜெயமோகன் முன்வைத்த, முன்வைத்து வரும் கருத்துகளுக்கான மறுப்புகளையும் விளக்கங்களையும் அதற்கான விரிவான தகவல்களோடும் ஆதாரங்களோடும் நிறுவவில்லை. பதிலாக எழுந்தமானமாக ஒற்றையில் விழித்து, வசைகளை இறைத்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இது ஜெயமோகனுக்கான பதிலாக அமையாது. மட்டுமல்ல, இது விவாதம் ஒன்றுக்குரிய பண்போ முறையியலோ அல்ல. இதெல்லாம் அறிவொழுக்கத்துக்கு ஒரு போதுமே உதவாது.

இலக்கியம், அரசியல்,  தத்துவம் போன்ற விசயங்களில் சர்ச்சைகள் உருவாகினால் அல்லது விவாதங்களை நடத்த வேண்டுமானால் அதற்குரிய அடிப்படையில், அதற்கான பண்புடன் அவற்றில் ஈடுபடுவதே முறை. அப்பொழுதுதான் அவற்றில் ஈடுபடுவோரும் அவற்றை அவதானிப்போரும் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாகும். அதுவே பயனுடையது. அதற்கே வரலாற்றுப் பெறுமதியுண்டு. இந்த அடிப்படைகள் எதுவுமே பேணப்படாமல் வெறும் கூச்சலாக, இரைச்சலாகவே ஜெயமோகன் மீதான எதிர்ப்புள்ளது. ஆகவேதான் எல்லோருடைய எதிர்ப்புகளும் வெடிக்காத பட்டாசுக் கணக்கில் செல்லுபடியற்றுள்ளன. இது பலவீனத்தின் கூறாகும்.

ஈழ இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசிய இலக்கியத்தைப்பற்றியும் அங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றியும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவருடைய விமர்சனமும் மதிப்பீடும் கறாரானவை. அது அவருடைய நிலைப்பாடும் ரசனை சார்ந்ததுமாகும். அவருடைய தெரிவுகள் அவருடைய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையிலானவை. அவருடைய இலக்கியக் கோட்பாடு அவருடைய அழகியல் ரசனை, அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலானது. அவருடைய அரசியல் இந்திய அடையாளம் குறித்தது. அவருடைய இந்திய அடையாளம் இந்திய மரபைச் சார்ந்தது. அந்த மரபில் உட்பொதிந்திருக்கும் அகமும் புறமும் இணைந்தது. இதை ஆழ உணரும்போது உண்டாகும் நெகிழ்வும் பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டது. இதன் மறுபுறம் அந்திய எதிர்ப்பை உள்ளோட்டமாகக் கொண்டிருக்கிறது.

இந்திய மரபிலிருந்தே அவர் தன்னைக் கண்டெடுத்து வெளிப்படுத்துகிறார். ஆனால் அவருடைய அளவுகோல்கள் முற்றுமுழுதாக அந்த மரபை மட்டும் அளப்பனவல்ல.

இந்திய மரபாக ஜெயமோகன் கருதுவது இந்தியத் தத்துவம், இந்திய அறிவியல், இந்திய மதங்கள், இந்தியச் சமூகங்களின் பண்பாடு மற்றும் அவற்றின் வரலாறு, இதுவரையான இந்தியச் சமூகங்களின் வாழ்க்கைச் சுவடுகள் போன்றவற்றை. அதாவது இந்திய மையத்தை.

ஆகவே அவர் அவற்றின் வழியாக அல்லது அவற்றின் நிலை நின்றே அவருடைய மையச் சிந்தனை உள்ளது. தன்னை ஒரு இந்தியனாக உணர்ந்து கொண்டே பேச விளைகிறார். அதிலிருந்தே அவர் உலக மானுட நிலையைக் காண்கிறார். உலக இலக்கியம் குறித்த ஜெயமோகனுடைய புரிதல் கூட அப்படியானதே. இது பல சந்தர்ப்பங்களிலும் தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. டால்ஸ்டாயைப் பற்றிய புரிதானது, டால்ஸ்டாய் முதலில் ஒரு ரஷ்யராக இருக்கிறார். அடுத்து அவர் ஒரு கிறிஸ்தவராக உணர்வது என்பது. இந்த இரண்டும் கலந்து உருவாக்கிய தரிசனப் பெறுமானங்களே டால்ஸ்டாயின் எழுத்துகள். ஆனால் அவை ஒரு போதும் பைபிளின் போதனைகளல்ல. அதேமாதிரி ரஷ்ய அரசியலுமல்ல. டால்ஸ்டாயின் எழுத்துகள் அத்தனையிலும் இந்த இரண்டும் மையச் சரடாக ஓடிக்கொண்டேயிருக்கும்.

இது டால்ஸ்டாய்க்கு மட்டுமானதல்ல, உலகின் குறிப்பிடத்தக்க, புகழ் மிக்க அத்தனை எழுத்தாளர்களுக்கும் அடிப்படையானது. பொருந்தக் கூடியது. இப்படி ஒவ்வொரு எழுத்தாளரும் தனது வாழ்கள அனுபவம், வரலாற்றறிவு, அதனால் உண்டாகும் தரிசனம், தேடல்கள் போன்றவற்றின் வழியேதான் தங்களுடைய எழுத்துகளை முன்வைக்கிறார்கள்.

டால்ஸ்டாய்

ஜெயமோகனுடைய எழுத்துகளும் ஏறக்குறைய இந்தப் பண்பின் அடிப்படையிலானவையே. அவருடைய முக்கியமான நாவலான விஸ்ணுபுரத்திலிருந்து தற்பொழுது அவர் எழுதிக் கொண்டிருக்கும் வெண்முரசுவரை இதை நாம் காண முடியும்.

ஜெயமோகனுடைய படைப்புகளைக் குறித்து சர்ச்சைகள் எழுவது வழமை. பின்தொடரும் நிழலின் குரல் வந்தபோது அதிர்வேற்பட்டது. இடதுசாரிய அரசியலைப் பற்றிய விமர்சனங்களையும் நிராகரிப்பையும் செய்கிறது அந்த நாவல் என்ற வகையில். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு தொடர்பு பட்டதாக – அதையொட்டிய இடதுசாரிய அரசியலின் சரிவை உள்ளோட்டமாகக் கொண்ட நாவல் என்று அதற்கு இடதுசாரிகளின் எதிர்ப்பும் விமர்சனமும் இருந்தது. தவிர, விஷ்ணுபுரத்திற்கும் அதிகளவு விமர்சனங்கள் எழுந்தன. வெள்ளையானை, உலோகம் பற்றியும் விவாதங்கள் நிகழ்ந்தன. இப்பொழுது அவர் எழுதிக் கொண்டிருக்கும் வெண்முரசு இந்துத்துவத்தை மீள்நிலைப்படுத்தும் முயற்சி என்ற கோணத்தில் விவாதிப்போரும் உண்டு. காடு, ரப்பர், ஏழாம் உலகம் போன்றவற்றுக்குப் பல மதிப்புரைகள் எழுதப்பட்டன.

ஆனாலும் ஜெயமோகனுடைய படைப்புகளை விட அவரின் விமர்சனங்களும் உரைகளும் நேர்காணல்களும் எப்போதும் சர்ச்சைகளை உருவாக்குவன. இது இலங்கை எழுத்துகள், எழுத்தாளர்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதில்லை. மலேசிய, சிங்கப்பூர் எழுத்துகள், எழுத்தாளர்களைப் பற்றியதுமாகும். ஏன் தமிழக அரசியல், இலக்கிய, அறிவியல் மற்றும் வரலாறு பற்றியெல்லாம் அவர் வெளிப்படுத்தி வரும் கருத்துகள் சர்ச்சைகளை உண்டாக்குவனவாக உள்ளன. தமிழகத்தில் எஸ்.வி.ராஜதுரை, அ.மாக்ஸ் தொடக்கம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என தமிழ்ப்பரப்பில் எழுத்தில் செயற்படுவோர் அனைவரின் மீதும் ஜெயமோகனுடைய அபிப்பிராயக் கணைகளும் விமர்சனப் பாணங்களும்  பாய்கின்றன.

இலக்கியத்திலும் இலக்கிய விமர்சனத்திலும் இவை ஒன்றும் புதியதல்ல. எழுத்தும் விமர்சனமும் பன்முகத்தன்மை உடையன. ஆளாளுக்கும் ஆளுமைகளுக்கு ஆளுமைகள் என்றும் வேறுபடுவது. அந்தளவுக்கு ஆதரவும் முரண்களும் இருப்பது வழமை.

மு .தளையசிங்கம்

இலங்கையில் குறிப்பிடக்கூடிய ஒரே எழுத்தாளர், புதிய சிந்தனாவாதி என்ற அடிப்படையில் மு.தளையசிங்கத்தையே முன்னிலைப்படுத்தினார் சுந்தர ராமசாமி. இதற்கு அ.யேசுராசவும் பூரணி இதழைச்சேர்ந்தவர்களும் பத்மநாப ஐயரும் பின்னணியாக இருந்தனர். அப்பொழுது இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தை முன்னிலைப்படுத்திப் பேசும் போக்கு வலுப்பெற்றிருந்தது. அது மு.த, வ.அ.இராசரத்தினம், எஸ்.பொ, மஹாகவி போன்றோரைக் கண்டுகொள்ளத் தவறியது. அல்லது புறக்கணித்தது என்ற நிலையில் மாற்றுப் பார்வையொன்றை வலியுறுத்திய “அலை” சார்ந்தவர்களின் தொடர்புக்கூடாக மு.தவை கண்டடைகிறார் சு.ரா. தான் கண்டறிந்த மு.தவைப்பற்றி சு.ரா வியந்து எழுதினார். அதே அளவுக்கு அப்பொழுது இலங்கையில் கொண்டாடப்பட்ட முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளைப் பற்றி சு.ரா பேசவே இல்லை. அவரைப் பொறுத்தவரை முற்போக்கு இலக்கிய இயக்கமும் அதில் பங்களித்தவர்களின் எழுத்துகளும் சு.ராவுக்குப் பொருட்படுத்தத்தக்கதாக இருக்கவில்லை. இது ஒருவகையில் புறக்கணிப்போ நிராகரிப்போதான். இதையிட்டு முற்போக்கு இலக்கிய இயக்கத்தினர் தமது எதிர்ப்பையும் முகச்சுழிப்பையும் வெளிப்படுத்தினர்.

அ.மாக்ஸ் டானியலைக் கொண்டாடினார். தமிழில் தலித் இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது அதனுடைய தந்தை என்றே அவரைத் தமிழ் நாட்டில் கூறுவதுண்டு. டானியலின் மரணத்தின்போது அவருக்குச் செலுத்தப்பட்ட மரியாதைகூட இந்த அடிப்படையிலானதுதான். தஞ்சாவூரில் உள்ள டானியலின் கல்லறையைப் பற்றி அண்மையில் யாரோ எழுதியிருந்தபோதும் டானியலுக்கு அப்படியானதொரு மதிப்பு மிக்க பாத்திரத்தை வழங்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு இந்தத் தரப்பினரிடம் டானியலுக்குப் பெருமதிப்புண்டு. ஆனால் இன்னொரு சாரார் டானியலைக் கண்டு கொள்ளவேயில்லை. அவர்களுக்கு டானியல் ஒன்றும் முக்கியமான எழுத்தாளரில்லை. இதனுடைய பொருள் என்ன? புறக்கணிப்பு அல்லது இலக்கியப் போதாமைதானே! பிறகு சோபாசக்தி எழுத வந்தபோது அவரை வாழ்த்தி வரவேற்றார் அ.மாக்ஸ். அவருக்கு மு.தவோ சேரனோ, புதுவை இரத்தினதுரையோ கவனத்திற்குரியவர்களில்லை.

“விடியல்” தரப்பினருக்கு தமிழ்த்தேசிய இலக்கியம் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகப்பட்டது. அதற்காக அவர்கள் சு.வில்வரத்தினத்தை, மலரவனை, முல்லை யேசுதாசனை, மலைமகளை எல்லாம் முன்னிலைப்படுத்தினர். அவர்களுடைய படைப்புகளைத் தொகுத்து மீள் வெளியீடு செய்தனர்.

1960 தொடக்கம் 80 களின் இறுதி வரையில் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இடதுசாரிய எழுத்தாளர்களிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் பெரிய மதிப்பிருந்தது. செ. கணேசலிங்கன். டொமினிக் ஜீவா, இளங்கீரன், முருகபூபதி, செ.யோகநாதன், காவலூர் ராஜதுரை, அ.ந. கந்தசாமி எனப் பலர் தமிழ்நாட்டில் அறியப்பட்டிருந்தனர். முற்போக்கு முகாமைச்சேர்ந்த விமர்சகர்கள் கா. சிவத்தம்பி, க. கைலாசபதி இருவரும் தமிழ்நாட்டில் ஒரு சாராரினால் பெரிதும் மதிக்கப்பட்டனர்.

எஸ்.வி.ராஜதுரை, க்ரியா ராமகிருஸ்ணன், தமிழினி வசந்தகுமார், தமிழவன், பாண்டிச்சேரி எம். கண்ணன், வைகறை, பாமரன், ஏ.எஸ். பன்னீர்ச்செல்வம், சி.மோகன், பெங்களுர் ராமசாமி, ராஜன்குறை, எம். டி.முத்துக்குமாரசாமி, அசோகமித்திரன், ராம்ஜி சுவாமிநாதன், வெங்கட் சாமிநாதன், சுஜாதா, மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஸ்ணன், அ.ராமசாமி எனப் பலர் ஈழ இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் கூடுதலான கவனத்தை அளித்திருக்கின்றனர். ஆனால் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்புடைய எழுத்துகளையும் எழுத்தாளர்களையுமே முதன்மைப்படுத்தினார்கள்.

அசோகமித்திரனுக்குச் சாந்தனைப் பிடித்தது. க்ரியா ராமகிருஷ்ணனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள் முக்கியமானவையாகத் தோன்றின. தமிழினி வசந்தகுமாருக்கு சயந்தன் விருப்பத்துக்குரிய எழுத்தாளர். க்ரியா, அன்னம், காவ்யா, விடியல், காலச்சுவடு, உயிர்மை, எதிர், கயல்கவின், அடையாளம், கருப்புப்பிரதிகள், அணங்கு, வயல், தாமரைச்செல்வி, தமிழினி, சவுத் ஏசியன் புக்ஸ் என்று பல பதிப்பகங்கள் ஈழ எழுத்தாளர்கள் பலருடைய புத்தகங்களை வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தைந்து வரையான ஈழ எழுத்தாளர்களின் புத்தகங்கள் தமிழ்நாட்டில் வெளியாகின்றன. சென்னைப் புத்தகக் காட்சியில் மட்டும் ஏறக்குறைய இருபது புத்தகங்களுக்குக் குறையாமல் வெளியிடப்படுகின்றன. சேரன், தேவகாந்தன், அ.இரவி, நடேசன், தமிழ் உதயா, தீபச்செல்வன், பா.அ.ஜெயகரன், ரிஷான் ஷெரிப், ஸர்மிலா ஸெய்யித், நிவேதிதா, நிருபா, சுமதி ரூபன் என இந்த ஆண்டும் இருபது பேருக்கும் அதிகமானவர்களின் புத்தகங்கள் வெளியாகின.

மட்டுமல்ல, ஈழ எழுத்தாளர்களைக் குறித்துப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  பேசியிருக்கிறார்கள். தங்களுடைய முழுமையான ஆதரவையும் அங்கீகாரத்தையும் கூடக் கொடுத்தனர். பலருக்கு ஈழ இலக்கியம் குறித்த குழப்பங்கள், மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் அதற்காக அவர்கள் யாரையும் மதிப்பிறக்கம் செய்கின்ற மாதிரி நடந்து கொண்டதில்லை. ஈழத்திலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்ற எந்த ஈழ எழுத்தாளரும் எதன் நிமித்தமும் ஒதுக்கப்படவில்லை. எதிர்த்து வெளியேற்றப்படவோ செயற்படாது முடக்கப்படவோ இல்லை. அவர்கள் எங்காவது பேச வேண்டாம். எந்தக் கூட்டத்திலாவது கலந்து கொள்ளக்கூடாது என்று யாரும் எதிர்ப்புக் காட்டவில்லை. அதாவது வன்முறை எண்ணம் அங்கே தலை தூக்கவில்லை.

ஜெயகாந்தனுக்கு ஈழப்போராட்டம் பற்றிய மாற்று அபிப்பிராயம் இருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளை, அவர்களுடைய செயற்பாடுகளை அவர் முற்றாகவே நிராகரித்தார். புலிகளைப் பகிரங்கமாக விமர்சித்தார். எதிர்த்தார்.  இந்திய அரசின் நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தல்களையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொண்டார். ஆனால், அதற்காக அவர் ஈழப்படைப்பாளிகளை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. எதிர்த்ததில்லை.

ப. திருநாவுக்கரசு, சுபகுணராஜன், பா.செயப்பிரகாசம், புகழேந்தி போன்றவர்கள் புலிகளை முழுமையாக ஆதரித்தனர். புலிகள் சார்பான எழுத்துகளுக்கும் கலை வெளிப்பாடுகளுக்கும் முழுமையான அங்கீகாரம் வழங்குகிறார்கள். அவர்களும் புலிகளுக்கு எதிராக எழுதுவோருக்குக் கண்டனக்கூட்டங்கள் நடத்துமளவுக்குச் செல்லவில்லை. தமக்குப் பிடிக்காது என்பதற்காக தெருவில் இறங்கிக் கூச்சலிடவில்லை. நாகரீக எல்லையை யாரும் தாண்டவில்லை.

இப்படி பரஸ்பர உறவும் புரிதலும் ஈழத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் நிலவியது வரலாறு. இது தனியே எழுத்து மற்றும் இலக்கியம், பதிப்புச் சூழலில் மட்டும்தான் என்றில்லை. ஈழ மற்றும் புகலிட எழுத்தாளர்களுக்குத் தனது மடியைத் தமிழகம் எப்போதும் தந்திருக்கிறது. சி.வை தாமோதரம்பிள்ளை தொடக்கம் காசி ஆனந்தன், எஸ்.பொ, செ.யோகநாதன், செ.கணேசலிங்கன், காவலர் ராஜதுரை, பாலுமகேந்திரா, சோமிதரன், பிரமிள், அகரமுதல்வன், தேவகாந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை, கோவிந்தன், தமிழ்நதி, த.அகிலன், ஓவியர் லங்கா, ஆ.தங்கவேலாயுதம் எனப் பலருக்கு. எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு மட்டுமின்றி ஈழப்போராளிகளுக்கும் தனது மடியைத் தந்தது தமிழகம். ஈழத்தில் செயற்பட்ட முப்பத்தியிரண்டு இயக்கமும் தமிழ்நாட்டைத் தளமாகப் பயன்படுத்தியதுண்டு. ஈழப்போராளிகளுக்கு தமிழகப்படைப்பாளிகளும் மக்களும் அரசியலாளர்களும் பெருமதிப்புத் தந்து அன்போடு நடந்ததை நாம் நினைவிற் கொள்வது அவசியம். ஈழப்போராளிகள் மட்டுமல்ல இலங்கை அரசினாலும் போராளி இயக்கங்களின் அச்சுறுத்தலினாலும் வெளியேறிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்மந்தன், வீ.ஆனந்தசங்கரி போன்ற அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பையும் தந்து அவர்களைப் பராமரித்ததும் தமிழ்நாடே. அதைப்போல இயக்க முரண்பாடுகளால் ஈழத்தை விட்டு வெளியேறிய போராளிகள் தஞ்சமடைந்ததும் தமிழ்நாட்டில்தான். இன்னும் சற்று விரிவாகச் சொன்னால் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் போகமுடியாதவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலேயே தங்கள் காரியங்களைப் பார்த்தனர். தமிழில் எதிர்ப்பிலக்கியம் என்ற அடிப்படையிலான எழுத்துகளுக்குரிய களத்தைத் தந்திருந்ததும் தமிழ்நாடே. இப்படியெல்லாம் எல்லாவகையிலும் பேரதரவு தந்து அரவணைத்த தமிழ்நாட்டைக்குறித்து நல்மனப்பதிவுகளை ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தியது குறைவு. பதிலாக எதற்கெடுத்தாலும் தமிழகத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதும் குற்றம் குறை காண்பதுமே ஈழத்தமிழர்களுடைய வழக்கமாக உள்ளது.

இப்போது உருவாகியிருக்கும் ஜெயமோகனுடனான சர்ச்சை மட்டுமல்ல, இதற்கு முன்பும் பல சர்ச்சைகள் நடந்துள்ளன. ஈழ அரசியல், ஈழ இலக்கியம், ஈழ எழுத்தாளர்கள் பற்றி மெல்லிய விமர்சனமொன்றைத் தமிழ் நாட்டிலிருந்து எவராவது வைத்தால் போதும். உடனே சிலிர்த்துக் கொண்டு போருக்குக் கிளம்பி விடுகின்ற ஒரு போக்கு ஈழச்சூழலில் தொடர்ந்தும் நீடிக்கிறது. பதிலாக அந்த விமர்சனத்தின் அடிப்படை என்ன? அதில் உள்ள நியாயப்பாடு என்ன? அது தவறான விமர்சனமாக இருந்தால் அதை எதிர்கொள்வது எப்படி? அதற்கு எந்த அடிப்படையில் எத்தகைய தர்க்க நியாயங்களை முன்வைத்துப் பதிலளிப்பது என்பதைக் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தாலும் அதற்குள்ளும் ஒரு பகைமை உணர்வு மேலோங்கியிருக்கும். இது நமது தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.

ஜெயமோகன் தெரிவித்த கருத்துகளிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும்  தவறுண்டு என்பதை அவரே பின்னர் உணர்ந்திருக்கக்கூடும். அல்லது அதை நாம் அவருக்கு சொல்லும் முறையினால் உணர்த்தியிருக்கலாம். இலக்கியத்தினதும் விமர்சனத்தினதும் பண்பும் பணியும் அதுதான். அது கூச்சலிட்டு எதையும் நிறுவ முயற்சிப்பதில்லை. பகைமை கொண்டு எதிர்ப்பதல்ல. அப்படிக் கூச்சலை அது பலமான ஆயுதம் என்று நம்பினால் அது பலவீனத்தின் வெளிப்பாடேயாகும். முட்டாள்தனத்தின் அடையாளமே.

எண்ணற்ற அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் நாமும் பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில் முன்வைத்திருக்கிறோம். அதில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததுண். அவை யாராலும் கவனத்திற் கொள்ளப்படாமல் கடந்து போய் விட்டதால் தப்பித்திருக்கிறோம். அவ்வளவுதான்.

சோபாசக்தி,

சரி பிழைகளுக்கு அப்பால் ஈழ எழுத்துகளைப் பற்றியும் ஈழ அரசியலைப்பற்றியும் தமிழ்நாட்டினர்தான் அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். பல ஆளுமைகளை இனங்கண்டு கொண்டாடியிருக்கிறார்கள். பாரதிக்குப்பிறகு தமிழ்க்கவியில் பேராளுமையாக பிரமிளை உணர்ந்ததும் அதைக் கொண்டாடி வருவதும் தமிழ்நாடுதான். பிரமிளை இலங்கையில் எவரும் அந்தளவுக்கு உணர்ந்ததும் இல்லை. கொண்டாடியதும் இல்லை.  இதற்கு அவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்ததால் அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று சப்பை நியாயங்களைச் சொல்ல முற்படலாம். அப்படியென்றால், அவர்கள் எப்படி ஈழப்படைப்பாளிகளைப் பற்றி அவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள்? சோபாசக்தி, குணா கவியழகன், தமிழ்நதி எனப் பலரையும் அதிகமாக அறிந்திருப்பதும் ஈழத்தையும் விட தமிழ்நாட்டில்தான். இவர்களுடைய எழுத்துகளுக்குக் கூடுதலான மதிப்பளித்திருப்பதும் தமிழ்நாட்டில்தான். அண்மையில் கூட தமிழ்நதிக்கு விகடன் விருது கிடைத்திருந்தது. விகடன் விருது ஒன்றும் பெரிய புக்கர் விருது இல்லைத்தான். ஆனால் பொதுக்கவனிப்பை உண்டாக்கவல்லது. இப்பொழுது புதிதாக எழுத வந்திருக்கும் சாதனாவை இனங்கண்டு சாரு நிவேதிதா சாதனாவின் கதைகளுக்கு முன்னுரை எழுதுகிறார், அவருடைய புத்தகத்தைப் பதிக்கிறார் என்றால்…!

இந்தளவுக்கு தமிழ் நாட்டினரின் எழுத்துகளை விமர்சிப்பதற்கோ குறிப்பிட்டு எழுதுவதற்கோ ஈழத்தில் எவரும் முயற்சிப்பதில்லை. அல்லது குறைவு. தமிழக எழுத்தாளர்களுடைய எழுத்துகளைப் பதிக்க முன்வருவதுமில்லை. இயக்குநர் மகேந்திரன் கிளிநொச்சியில் தங்கியிருந்த காலத்தில் நடிப்பு என்பது, திரைக்கதை என்பது என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார். அதனால் அவற்றை பதிப்பித்தேன். இந்த மாதிரி அபூர்வமான நிகழ்வுகளைத் தவிர வேறு யாருடைய எழுத்துகளும் பதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  சிவத்தம்பி, கைலாசபதி, சிவசேகரம் போன்றவர்கள் அங்கங்கே சில குறிப்புகளை எழுதியுள்ளனரே தவிர, குறிப்பிட்டுக் கவனம் செலுத்தி எந்தப் படைப்பைப் பற்றியும் படைப்பாளியைப் பற்றியும் கனதியான விமர்சனங்களை எழுதியதில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி அவர்களுக்காக இங்கிருந்து அல்லது புலம்பெயர் நாடுகளில் இருந்து கம்பு தூக்குவது வேறு.

ஜெயமோகனுக்குத் தமிழ் நாட்டில் ஆதரவும் உண்டு. எதிர்ப்பும் உண்டு. அது தனியே ஜெயமோகனுக்கு மட்டுமல்ல, வேறு ஆட்களுக்கும் உண்டே. ஜெயமோகனை தமிழ்நாட்டில் எதிர்ப்போருடன் அணி சேர்ந்து நாமும் எதிர்க்க வேண்டியதில்லை. அதைப்போல யாருடனும் சேர்ந்து கொண்டு நாம் ஆதரிக்கவும் வேண்டியதில்லை. யாரையும் எவருக்காகவோ எதிர்க்கவோ ஆதரிக்கவோ வேண்டாம். அது அவர்களுடைய பிரச்சினை. நாம் நம்முடைய பிரச்சினைகளைக் குறித்து, நமது எழுத்துகளைக் குறித்து முதலில் சரியான முறையில் சிந்தித்துப் பெறுமானங்களை உருவாக்க வேணும். அதுவே அவசியமானது. கூடவே பிற பிராந்திய எழுத்துகளின் மீதான கவனத்தையும் கொள்ளலாம். அது தமிழ் மொழி என்ற விரிந்த எல்லையின்பாற்பட்ட செயற்பாட்டுக்குரியது. ஆனால் அது கூட அவசியமா என்ற கேள்விகளும் உண்டு. ஏனெனில் ஒரு கட்டத்தில் எல்லைகளைக் கடந்தது இலக்கியம். அது காலாதீதமானது.

1958, 1977, 1983 களில் தென்னிலங்கையில் நடந்த வன்முறையினால் பாதுகாப்புத்தேடி ஆயிரக்கணக்கானோர் வடக்கு நோக்கி வந்தனர். அதைப்போல 1983 க்குப் பிறகு லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டுக்குப் பாதுகாப்புத் தேடிப்போனது வரலாறு. அப்படிச் சென்றவர்களை தமிழ் நாடு வரவேற்றது. உபசரித்தது. ஆதரவளித்தது. சிரமங்களின் மத்தியில் வாழ்ந்தாலும் இன்னும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகத்தில் உள்ளனர். அப்படி ஆதரவளித்த தமிழ்நாட்டுக்கு ஈழத்தவர்கள் செய்த நன்மை என்ன என்று கேட்டால் உடனடியாக எவரும் எந்தப் பதிலையும் சொல்ல முடியாது. அந்தளவுக்குத்தான் நம்மவர்களின் பண்பும் பங்களிப்புகளும் உள்ளன. இதைப்போலத்தான் ஈழப் போராட்டத்தையும் விடுதலை இயக்கங்களையும் ஆதரித்ததற்குப் பதிலாக துப்பாக்கிக் குண்டுகளையும் கொலைக்கலைச்சாரத்தையும் அறிமுகப்படுத்தித் தொலைத்தவர்கள் நாம். இது ஜெயமோகன் பற்றிய சர்ச்சை. அவர் சொன்ன கருத்துகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் என்ன இப்படிச் சுற்றி வளைத்து எதையோவெல்லாம் சொல்கிறீர்களே என்று யாரும் சினக்கலாம். நம்மிடம் உள்ள பொதுக்குறைபாடே உடனடியாக எல்லாவற்றைக் குறித்தும்  பதற்றங்களை உருவாக்குகிறது. அதன் வெளிப்பாடே ஜெயமோகன் விடயத்திலும் நடந்தது. நடந்து கொண்டிருப்பது. இதற்கு முன்பும் நடந்தவையும் இப்படியானதே.

ஆகவே நாம் நம்மைக்குறித்து எவர் எத்தகைய விமர்சனத்தையும் எத்தகைய குற்றச் சாட்டையும் முன்வைத்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் முறையினால் எங்கள் மாண்பைக் காட்டுவோம். எங்கள் தர்க்கங்களின் மூலம் அவர்களை மேவிச் செல்வோம். அல்லது பெருந்தன்மையுடன் நமது குறைபாடுகளை ஏற்றுக்கொள்வோம். உண்மையை உணர்ந்து கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் அழகுதானே.

அந்த அழகுக்கு எதுவும் ஈடில்லை.

Share:

Author: theneeweb