வறட்சியால் 44 ஆயிரம் பேர் பாதிப்பு – நீர் மின் உற்பத்தியிலும் சிக்கல்

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி வானிலை காரணமாக 12 ஆயிரத்து 632 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை குருணாகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடமேல் மாகாணத்திலும் மன்னார், கம்பஹா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்த முறை பயிர் செய்கைகளுக்காக அதிக நீர் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மகாவலி கங்கையோடு உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

மகாவலி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இயன்றளவு மின்சார உற்பத்திக்கான நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நாளாந்தம் 2600 மெகாவோட் மின்சாரம் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றது.

அதில் 30 சதவீதமான மின்சார உற்பத்தி நீர் மின் உற்பத்தி ஊடாக இடம்பெறுகிறது.

எனினும் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாளாந்தம் 2260 மெகாவோட் மின்சார விநியோகத்தை மாத்திரமே வழங்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதன் காரணமாக மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இரவு நேரங்களில் மாணிக்கக்கல் அகழும் பணியில் ஈடுபடுவதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb