கிளிநொச்சியிலுள்ள உணவகத்தை உடனடியாக மூடுமாறு வட மாகாண ஆளுநர் உத்தரவு

கிளிநொச்சியிலுள்ள உணவகம் ஒன்றில் பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த உணவகத்தை உடனடியாக மூடுமாறு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் கடந்த 27 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புளு காணப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உணவகத்தை பரிசோதனை செய்யுமாறு வடமாகாண ஆளுநர், சுகாதார பரிசோதகர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில், குறித்த உணவகத்தின் மீது வழக்குத் தொடரபட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரணக்கு எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதிமன்றம் உணவகத்தை இரு நாட்களுக்கு மூடி சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டது.

எனினும், குறித்த உணவகம் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கிவந்தமை தொடர்பில் ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நேற்று இரவு கிளிநொச்சிக்கு வந்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உணவகத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb