பிரெக்ஸிட் தொடர்பான 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வி

பிரெக்ஸிட் தொடர்பான 8 யோசனைகளை முன்வைத்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவில்லாமல் நிராகரிக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:பிரெக்ஸிட் விவகாரத்தில் அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், அந்த நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை நீக்கும் வகையில் அதுதொடர்பான மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து அந்த நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை கைப்பற்றியது.
பிரெக்ஸிட் தொடர்பான பல்வேறு தீர்வுகளை அலசி ஆராய்ந்து, அதில் சிறந்ததைத் தேர்வு செய்வதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பிரெக்ஸிட் குறித்த 16 யோசனைகளை அவைத் தலைவர் ஜான் பெர்கோவிடம் எம்.பி.க்கள் புதன்கிழமை முன்வைத்தனர்.
அவற்றில் 8 யோசனைகளைத் தேர்வு செய்த ஜான் பெர்கோ, அவற்றை நாடாளுமன்றத்தில் மசோதாக்களாக அறிமுகப்படுத்தினார்.
எந்த சிறப்பு ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது, பிரெக்ஸிட்டுப் பிறகும் ஐரோப்பிய யூனியனுடன் சந்தையைப் பகிர்ந்து கொண்டு தற்போதுள்ள வர்த்தக உறவைத் தொடர்வது, பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை பொதுவாக்கெடுப்புக்கு விடுவது, ஒப்பம் இல்லாமலே யூனியனிலிருந்து பிரிய நேர்ந்தால் பிரெக்ஸிட் முடிவைக் கைவிடுவது உள்ளிட்ட அந்த 8  மசோதாக்களுக்கும் எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்த யோசனைகளில், பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் வர்த்தக உறவைத் தொடர்வதற்குதான் குறிப்பிட்டத்த அளவு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதுகுறித்த மசோதாவுக்கு ஆதரவாக 264 எம்.பி.க்களும், எதிராக 272 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

Share:

Author: theneeweb