இப்போது ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் எது தெரியுமா?

இப்போது ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் எது தெரியுமா? புலி வருது! புலி வருது!! என்ற கதையாக இருந்த புரளி கடைசியில் உண்மையனது தான்.

ஆம்! கடந்த 17-ஆம் தேதி, ஜெர்மனியின் டாய்ஷ்ச பேங்க் (Deutsche Bank) மற்றும் காமெர்ஸ் பேங்க் (Commerz bank) இரண்டும் இணைவதாக அறிவித்தன. எனவே அவை இரண்டும் ஒருங்கிணைந்த வங்கியாகும் போது, இவற்றின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2 ட்ரில்லியன் டாலர்! அதாவது Long scale அளவில்  2-ஐ அடுத்து 18 சைபர் இணைந்தது. என்ன! எண்ணும்போதே தலை சுற்றுகிறதா! ஆனாலும், ஐரோப்பாவில் இந்த வங்கிச் சேவைக்கு 3-வது இடம் தான். முதல் இடத்தில், பிரிட்டனில் உள்ள HSBC ஹோல்டிங்ஸ் வங்கியும், இரண்டாவது இடத்தில் பிரான்சின் BNP பரிபாஸ் வங்கியும் உள்ளன.

2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, டாய்ஷ்ச பேங்க் ஊழியர்களின் எண்ணிக்கை 91,700. இதன் மொத்த வருமானம் 25,316 பில்லியன் யூரோ (1 யூரோ = 77.8 ரூபாய்), இயக்க வருமானம் (வரி மற்றும் வட்டி பிடிமானத்திற்கு முன்) 1,330 பில்லியன் யூரோ. அதுவே, காமெர்ஸ்பேங்க் ஊழியர்கள் 49,174 மற்றும் இயக்க வருமானம் 1,245 பில்லியன் யூரோ ஆகும்.

ஜெர்மனியின் நிதி ஆண்டு ஜனவரி தொடங்கி  டிசம்பரில் முடியும். அந்த வகையில்  கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டு முடிவுகளை பொறுத்தவரையில், டாய்ஷ்ச வங்கி 409 மில்லியன் யூரோ நிகர இழப்பை சந்தித்தது. அதற்கு மாறாக, காமெர்ஸ்பேங்க் 2.1 பில்லியன் யூரோ வருவாயில் 113 மில்லியன் யூரோ லாபம் ஈட்டியது.

இந்நிலையில், இரண்டு வங்கிகளும் தங்கள் இணைப்பை அறிவித்த உடன், “இது இரண்டு வங்கிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டாய்ஷ்ச வங்கியின் தொழிற்சங்கம் மற்றும் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினருமாகிய திரு.ஸ்டீபன் ஸ்சுகால்ஸ்கி கூறினார்.

ஆனால், டாய்ஷ்ச பேங்க் தலைமை நிர்வாகி திரு. கிறிஸ்டியான் ஸீவிங் கூறும் போது, “ஜெர்மானிய மற்றும் ஐரோப்பிய வங்கியியல் துறையில் எங்களின் ஒருங்கிணைப்பு என்பது ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. ஒரு வலுவான மூலதன சந்தையாக இது உருபெறும்” என்று குறிப்பிடடார்.

செலவீனங்கள் குறைதல், இரண்டு வங்கி கிளைகள் இருக்கும் இடத்தில் ஒன்றை மூடுதல் போன்றவற்றின் மூலம் வருமானம் கூடும் என்று ஒரு கருத்து நிலவினாலும், 30,000 பேர் வரை வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும் என்ற செய்தியும் உலா வருகிறது.

நான், ஐந்து வருடங்கள் (2001 முதல் 2005 வரை) பிராங்க்பார்ட்-ல் உள்ள காமெர்ஸ் வங்கியில் பணி புரிந்தேன். டாய்ஷ்ச வங்கியில் ஏறத்தாழ ஒரு வருட பணி! இரண்டுமே, வேலையைப் பொறுத்தவரையில் ஊழியர்களின் எண்ணங்களுக்கும் செயல் வடிவத்திற்கும் ஊக்கம் கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை! இரண்டு பணியாட்கள் ஒரு துறையில் பணிபுரிகிறார்கள் என்றால் ஒருவருக்கு 75% அவரின் வேலையும், 25% அடுத்தவரின் வேலையும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இது எதற்காக என்றால், ஒருவர் விடுமுறையில் சென்றாலும் மற்றவர் அவரின் வேலையை மேற்பார்வை செய்ய முடியும்.

30 வருடங்களுக்கு முன், கணிணி வந்த புதிதில் , நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று பலர் அச்சமடைந்த காலம் உண்டு. ஆனால், இன்று அதன் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்புகள்! அது போலவே, இந்த வங்கி இணைப்பின் மூலமும் வேலை இழப்பு என்ற எதிர்மறை பேச்சு விலகி, சிக்கல்கள் எல்லாம் சரியாகி, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி ‘ஒன்றிணைந்த வங்கி’ வெற்றிப்பாதையில் நடை பயில வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!

Share:

Author: theneeweb