மனித உரிமைகள் ஆணையாளரது குற்றச்சாட்டுக்கு வடக்கு ஆளுனர் பதில்

மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலெட் உடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தமது பெயரில் வெளியாக்கப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் தாம் கவலையடைவதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனத் தலைமையிலான குழுவின் உறுப்பினராக ஜெனீவா சென்றிருந்த சுரேன் ராகவன், மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலெட்டை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுரேன் ராகவன், மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியதன் பின்னர், அவர் இதனை ஏற்றுக் கொண்டதாகவும், இந்த அறிக்கையை தயாரித்த தமது இரண்டு உதவியாளர்களை பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பணித்ததாகவும் சுரேன் ராகவன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கூற்றை மறுத்து உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்செலட், சுரேன் ராகன் கூறியதாக வெளியாக்கப்பட்ட இந்த தகவல் குறித்து அதிருப்தி அடைவதாக கூறினார்.

அத்துடன் தமது அறிக்கையில் எந்தக் குறைப்பாடும் இல்லை என்றும், தாம் அதனை முழுமையாக ஆராய்ந்து, இலங்கையில் நிலவும் தன்மையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலேயே தயாரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வடக்கு ஆளுனர், மனித உரிமைகள் ஆணையாளர் முன்னுதாரணமான பெண்மணி என்பதுடன், மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளும் சிறப்பானவர்கள் என்றும் தங்களுடன் அவர் ஒத்துழைத்து செயற்பட்டதுடன், தாங்களும் இலங்கையில் மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது பெயரை பிழையாக கோடிட்டு வெளியாக்கப்பட்ட செய்தி குறித்து அதிருப்தி அடைவதாகவும் வடமாகாண ஆளுனர் கூறியுள்ளார்.

ஆனால் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரது அறிக்கையில் எந்த குறிப்பகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

Share:

Author: theneeweb