பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் கூட்டாக அறிக்கை!

மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக கிட்டத்தட்ட நூறு திரைக்கலைஞர்கள், ஜனநாயகத்தைக் காப்போம் (Save Democracy) என்கிற அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளார்கள். தமிழ் இயக்குநர்கள் வெற்றிமாறன், லீனா மணிமேகலை, மலையாள இயக்குநர் ஆஷிக் அபு உள்ளிட்ட கலைஞர்கள் கூட்டாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நம நாடு சோதனையான காலக்கட்டத்தைச் சந்தித்துள்ளது. கலாசாரரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் வெவ்வேறாக இருந்தாலும் நாம் எப்போதும் இணைந்தே இருக்கிறோம். இந்த அற்புதமான நாட்டின் குடிமகனாக உள்ளதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சரியாகத் தேர்வு செய்யாவிட்டால் சர்வாதிகாரம் நம்மைத் தாக்கத் தயாராக உள்ளது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நிலைமை மாறிவிட்டது. மோசமாக. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். கூட்டுக்கொலை, பசுப் பாதுகாப்பு வன்முறை மூலம் நாட்டைப் பிரிக்கிறார்கள். இணையம் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் வெறுப்புப் பிரசாரத்தைப் பரப்புகிறார்கள். நாட்டுப்பற்றுதான் அவர்களுடைய துருப்புச் சீட்டு. தனி மனிதரோ ஒரு நிறுவனமோ எதிர்த்துக் கேள்வி கேட்டால் தேச வெறுப்பாளர் என முத்திரை குத்தப்படுகிறார். நாட்டுப்பற்றைக் கொண்டுதான் வாக்கு வங்கியை அதிகரிக்கிறார்கள். எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் சிறந்த எழுத்தாளர்களும் ஊடகர்களும் தங்கள் வாழ்வை இழந்துள்ளதை நாம் மறக்கக்கூடாது.

விவசாயிகள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். தவறான பொருளாதரக் கொள்கைகளால் ஏற்பட்ட சேதங்கள், வெற்றிகரமான திட்டங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. புள்ளிவிவரங்களையும் வரலாற்றையும் மாற்றுவது அவர்களுக்குப் பிடித்தமான பணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாபெரும் பிழையாக அமையும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் சவப்பெட்டிக்குக் கடைசி ஆணி அடித்தது போலாகிவிடும்.

பாஜக ஆட்சி மீண்டும் வருவதை அனைவரும் தடுக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பை மதிக்கும், நம்முடைய கருத்துச் சுதந்தரத்தைப் பாதுகாக்கும், எல்லாவிதமான தணிக்கைகளிலும் ஈடுபடாத அரசாங்கத்தைத் தேர்வு செய்வோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

Share:

Author: theneeweb