ஜெனீவா – தமிழர்கள் தங்கள் காதில் தாங்களே வைக்கும் பூ

–          கருணாகரன்   —Add New

 

ஒருவாறு ஜெனீவாவைப் பற்றிய அலை ஓய்ந்து கொண்டிருக்கிறது. இனி முள்ளிவாய்க்கால் நினைவு கூரலைப்பற்றிய அலை எழும். இந்த மாதிரி அவ்வப்போது பேசிக் கொள்வதற்கு தமிழர்களுக்குச் சில சங்கதிகள் உண்டு. அதைப் பட்டியற்படுத்தி, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் வருகின்ற நீத்தார் நினைவு கூரலைப்போல இவை நினைவு கூரப்படும். கொறிப்பதற்குச் சரக்கு வேணுமே என்ற அளவில். அவ்வளவுதான் இவற்றின் பெறுமதி.

தமிழ் அரசியல் தரப்பினர் மட்டுமல்ல, தமிழில் செயற்படும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள் என்போரும் இந்த இழுவிசைக்குட்பட்டே இயங்குகின்றனர்.

சீஸன் பொலிற்றிக்ஸ், சீஸன் சப்ஜெக்ற் என்ற வகையிலேயே எல்லோருடைய கவனமும் உள்ளது. இவற்றின் விளைபயன் என்ன என்று யாரும் மதிப்பிடுவதில்லை. சாத்தியங்களைக் குறித்தும் எவரும் சிந்திப்பதில்லை. இதையிட்ட கவலைகளும் யாருக்குமில்லை. அப்படித்தான் உண்மை தெரிந்தாலும் அதைப்பேசுவதற்கு யாரும் தயாரில்லை. அதற்கான துணிச்சல் கிடையவே கிடையாது.

உதாரணமாக காணாமலாக்கப்பட்டோர் எவரும் இனி மீண்டு வரப்போவதில்லை என்று எல்லோருக்குமே தெரியும். அப்படித் தெரிந்து கொண்டும் அதைச் சொல்லாமல் இழுத்தடித்து, மழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர் எல்லோரும். இதைப்போல ஜெனீவாத் தீர்மானத்தின் வலுவைப்பற்றியும் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். ஆனாலும் அதைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லை. பதிலாக ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானங்கள் இலங்கை அரசினுடைய கழுத்தில் சுருக்குக் கயிறாக மாறும் என்ற கணக்கில்தான் ஒவ்வொருவரும் மாயைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இது கும்பலில் கோவிந்தா என்ற மாதிரி அந்தந்தச் சீஸனுக்கு அதையதைப்பேசுவது என்றே அமையும். ஏறக்குறைய திருவிழாக்காலக் கடை விரிப்புக்கு நிகரானது.

இந்தப்போக்கு உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது. உண்மையை மறைத்து மக்களை மாயையில் வைத்திருப்பது அவர்களை ஏமாற்றும் நடவடிக்கையே. இது ஏறக்குறைய சமூக விரோதக் குற்றத்துக்குரியதொரு செயற்பாடாகும். அந்த வகையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தச் சூழலில் விருப்பமில்லாது விட்டாலும் தவிர்க்க முடியாமல் சில சில விடயங்களைப்பற்றி நாமும் பேசியே தீர வேண்டியுள்ளது. அதில் ஒன்று இந்த ஜெனீவா விவகாரம்.

ஜெனீவா பொறிமுறையை மையப்படுத்திப் பார்க்கையில், இதற்கு மேல் சர்வதேசத்தினால் இலங்கை மீது “பிடி”யை வைத்திருப்பதற்கு வேறு வழிகள் இல்லை. சர்வதேச நாடுகளால் இவ்வாறான தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றும் தீர்மானங்களை மையமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சில உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கி பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்காக ஊக்குவிப்பார்கள். அதற்கு மேலாக வேறெதனையும் ஜெனீவா பொறிமுறை ஊடாக எதிர்பார்க்க முடியாது. ஜெனீவாவில் வாக்குறுதி அளித்த விடயங்களை அரசாங்கம் செய்யத்தவறினால் உடனடியாக பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறமுடியாது. தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொள்வார்களாயின் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும். பொறுப்புக்கூறவில்லை என்பதற்காக நீதிமன்றப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இடம்பெறாது” என்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

மேலும் அவர் சொல்கிறார், “தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை கையாள்வதற்கு எவ்விதமான பிடிமானங்களும் சர்வதேசத்திடம் இருந்திருக்காது. இதனை நாங்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தரப்புக்களும் உணர்ந்துள்ளோம். கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று மக்கள் மத்தியில் கூறும் தரப்புக்கள் ஜெனீவாவுக்குச் சென்று அங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திருத்தங்களின்றி முன்னகர்த்துவதற்கு தங்களது பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்து கடுமையாக உழைத்திருந்தன. ஆகவே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் அடுத்து எதுவுமே இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் எதற்காக பொய்யான பிரசாரம் செய்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது.

2017ஆம் ஆண்டு 34/1தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றபோது வவுனியாவில் ஒருநாள் முழுவதும் ஆராய்ந்து நாங்கள் இத்தகையதொரு தீர்மானத்தினையே எடுத்திருந்தோம். அன்றும் சிவசக்தி ஆனந்தன் தான் அதற்கு மாறாக இருந்தார். ஏனைய கட்சிகள் இணங்கியிருந்தன. அவ்வாறிருக்க இம்முறையும் இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயாவின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடி ஆராய்ந்திருந்தது. இதன்போது, சர்வதேசத்தின் மேற்பார்வைக்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தான் தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டது.

அப்படியிருந்தும், பொதுவெளியில் கால அவகாசம் என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை பிழையாக வழிநடத்தி கோஷங்களை எழுப்பியபோது அரசியல்வாதிகளும் வேறுநிலைப்பாட்டுடன் இருக்கின்றோம் என்ற நிலை ஏற்பட்டு விடும் அச்சத்தின் காரணமாக கால நீடிப்பு வேண்டாம் என்று குரல் கொடுத்துள்ளனர். உண்மையை அறிந்திருந்தும் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களும் சரி, பங்காளிக் கட்சிகளும் சரி அனைவருமே அரசியல் சுயலாபத்துக்காக கோமாளித்தனமாக செயற்பட்டமையை காணமுடிந்தது.  கூட்டமைப்பாக நாங்கள் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கின்றபோது அனைவரும் இணங்குகின்றார்கள். பின்னர் நேரெதிராக செயற்படுகின்றார்கள்” என்று.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையையும் நிலைப்பாட்டினையும் சுமந்திரன் தெளிவாக்கியிருக்கிறார். அதோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய இரண்டக நிலையைப் பற்றியும் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

இதனைத் தனியே சுமந்திரனின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ யாரும் சுருக்கப்பார்க்க முடியாது. ஏனெனில் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தைக் கையாண்டு வருகிறது. இந்த விடயத்தில் மட்டுமல்ல, ஏனைய விடயங்களும் கூடச் சுமந்திரனின் அறிவித்தல்கள், கருத்துகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படி முன்னெடுக்கப்படும் விடயங்களைச் சுமந்திரன் சொல்வதைப்போலக் கூட்டத்தில் ஆதரித்தும் வெளியே (சனங்களுக்குக் காட்டுவதற்காக) எதிர்த்தும் செயற்படுவதாக ஒரு தோற்றம் காண்பிக்கப்படுறது. இதில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் ரெலோ சிறிகாந்தா, சிவாஜிலிங்கமும் பலே கில்லாடிகள்.

ஒப்பீட்டளவில் சுமந்திரன் யதார்த்தமாகப் பல விடயங்களையும் பற்றித் துணிச்சலாகப் பேசுகின்றவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள மாவை சேனாதிராஜா போன்ற மூத்த தலைவர்களையும் விட உண்மையைச் சொல்லக் கூடிய வல்லமையுள்ளவர். எந்தத் தரப்போடும் உரையாடக்கூடிய, வாதிடக்கூடிய ஆற்றலுள்ளவர். ஆனால் சுமந்திரனுடைய குறைபாடு எல்லாவற்றையும் தன்னுடைய அரசியல் இலக்கு, நலன், ஸ்தாபிதம் என்ற அடிப்படையிலேயே செய்வார் என்பதேயாகும்.

இங்கும் சுமந்திரன் இந்த இரண்டும் இணைந்த கலவையாகவே பேசுகிறார்.

ஜெனீவா விடயம் தொடர்பாகச் சுமந்திரன் கூறுவதை முதலில் பார்க்கலாம். “ஜெனீவா பொறிமுறையில் இதற்கு மேல் சர்வதேசத்தினால் இலங்கை மீது “பிடி”யை வைத்திருப்பதற்கு வேறு வழிகள் இல்லை. சர்வதேச நாடுகளால் இவ்வாறான தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பது உண்மையே”.

அப்படியென்றால் இந்த உண்மையை ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுக்குச் சொல்லவில்லை? பத்து ஆண்டுகளாக கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அணியினர் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகை பணத்தைச் செலவழித்து எதற்காக ஜெனீவாவுக்குப் பயணமாகின்றனர்? மட்டுமல்ல, ஜெனீவாவில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் மூலம் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கலாம், விசாரணைக் கூண்டில் நிறுத்தி இலங்கைக்குத் தண்டனை வழங்கலாம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியமென்ன? அல்லது இப்பொழுதுதான் இந்த உண்மை நிலவரம் கூட்டமைப்புக்குத் தெரியவந்ததா?

அவ்வாறென்றால், “இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம். இந்தளவுக்குத்தான் ஜெனீவா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் வலு” என்று ஏற்கனவே பலரும் சொன்னதையெல்லாம் அவமதித்து நடந்திருக்க வேண்டிய அவசியமென்ன?

இப்போதுகூடச் சுமந்திரன் மட்டுமே இந்தளவுக்காவது உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஏனையவர்களான சிறிதரன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இதற்கு மாறாகவே சனங்களுக்கு மாய்மாலக்கதைகளைப்  பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அரசுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுத்து விட்டே நாட்டில் காலடி வைப்போம் என்ற கணக்கில் போகுமிடமெல்லாம் வாயடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா.

இதை “உண்மையை அறிந்திருந்தும் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களும் சரி, பங்காளிக் கட்சிகளும் சரி அனைவருமே அரசியல் சுயலாபத்துக்காக கோமாளித்தனமாக செயற்பட்டமையை காணமுடிந்தது” என்று சுமந்திரன் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டாலும் இதற்கு – இந்த இரண்டக நிலைக்கு – மக்களை ஏமாற்றும் நடவடிக்கைக்கு – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய (ஒழுங்காற்று) நடவடிக்கைகள் என்ன?

ஏனென்றால் இந்த விடயத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு விடயங்களிலும் ஆளாளுக்கு வெவ்வேறு விதமாகவே அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர். இது மக்களைக் குழப்பி  மடையர்களாக்கும் முயற்சியல்லவா?

இதையிட்டுத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேசாதிருப்பது தவறு. பொறுப்புள்ள கட்சி என்ற வகையிலும் மக்களால் அதிகாரமளிக்கப்பட்ட தரப்பாக கூட்டமைப்பு இருப்பதாலும் இதற்குப் பதிலளித்தே ஆக வேண்டும்.

இந்தச் சீர்கேடுகளை நெறிப்படுத்துவது ஒன்றும் பெரிய விசயமுமில்லை. ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றியும் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? அதனுடைய நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன? அதற்கான பொறிமுறைகள் எவ்வாறானவை? அவற்றைச் செயற்படுத்தும் பொறுப்புக்குரியவர்கள் யார்? என்பதை கூட்டாகப் பங்காளிக்கட்சிகள் ஒப்பமிட்டு மக்களுக்கு அறிவித்தால் இந்த மாதிரிக்குழப்பங்களுக்கு இடமில்லை. ஜெனீவா விடயத்திலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இதுதான் நிலவரம். இதுதான் கூட்டமைப்பின் தீர்மானம். இதன்படியே அதனுடைய நடவடிக்கைகள் அமையும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கலாம். அப்படிச் செய்யப்படவே இல்லை. அப்படிச் செய்யப்படப்போவதுமில்லை.

ஏனெனில் இப்படிச் சொல்கின்றவர்கள் இப்படிச் சொல்லட்டும். அப்படிச் செய்கின்றவர்கள் அப்படிச் செய்யலாம். அந்தப்பக்கத்தாலும் வாக்குகள் சேரட்டும். இந்தப் பக்கத்தாலும் வாக்குகள் சேரட்டும். எல்லா வாக்குகளும் எங்களுக்காகவே இருக்கட்டும் என்ற உத்தியையே கூட்டமைப்புப் பின்பற்றி வருகிறது.

நிச்சயமாக இந்த இரண்டக நிலை திட்டமிடப்பட்டதே. இதற்குப் பிரதானமான காரணம், வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டும் என்பதேயாகும். மற்றும்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நிவாரணம், நியாயம்  கிடைக்க வேண்டும் என்பதல்ல.

அப்படியென்றால் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படும் தரப்புகளுக்கும் இவர்களுக்குமிடையில் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம். அந்தக் கேள்வி நியாயமானதே. மக்களை வைத்து தங்கள் பிழைப்புகளை நடத்தலாம் என்று வந்து விட்டால் அதற்குப்பிறகு, மனச்சாட்சியும் அறிவும் வேலையே செய்யாது. வெட்கம், மானம், சூடு, சொரணை, நீதி, நியாயம் என்பதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

இவர்களையிட்டு மக்களாகிய நாம்தான் விழிப்பாக இருக்க வேணும். அந்த விழிப்பே நம்மைப் பாதுகாக்கும். தவறானவர்களைத் தூர விலக்கும். வரலாற்றுக்கு மக்களாகிய நாம் செய்கின் பங்களிப்பும் செலுத்துகின்ற மரியாதையும் அதுவே.

Share:

Author: theneeweb