டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஆளுநர் றெஜினோல்ட் குரே பணிப்பு

அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்பினை கால நேரம் பாராது வழங்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே பணித்துள்ளார்.
அண்மையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஆளுநர் தலைமையில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (28) மாலை நடைபெற்றது.
சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.கேதீஸ்வரன் வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பற்றிக்நிறஞ்சன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் சுகாதார அமைச்சின் செயலர் திவாகரன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் மற்றும் டெங்கு நோய் தடுக்கும் விசேட செயலணியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தாண்டில் 1344 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக டிசம்பர் 24ம் திகதிவரையில் 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் சுகாதார திணைக்களம் ஆளுநரிடம் தெரிவித்தனர். கடந்த 27ம் திகதி முதல் டெங்கு நோய் தடுப்பு விசேட செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாவும் இதன்போது யாழ்ப்பாணம் பசார் வீதியில் 30 இடங்களில் டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று நாவாந்துறை பகுதியில் 45 இடங்களை இனங்கண்டிருப்பதாகவும் அவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த  ஆளுநர் டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக முழு நேரமும் சம்பந்தப்பட்ட தரப்பினர் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலதிக தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை அவ்வப்போது நடாத்தி டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பணி விரைவாக முன்னெடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
Share:

Author: theneeweb