அன்ரன் அன்பழகன்

கருணாகரன் – –

 

கல்வி, விளையாட்டு, கூட்டுறவு போன்ற துறைகளின் வழியாகவே அன்ரன் அன்பழகனைப் பலருக்கும் அறிமுகம் உண்டு. அல்லது இவற்றின் வழியாகவே அன்ரனைப் பலரும் அடையாளம் காண்கிறார்கள். ஆனால் அன்ரனுடைய முதல் ஈடுபாடும் தெரிவும் அரசியலும் கலை, இலக்கியமுமே.

அன்ரன் தன்னுடைய பதின்ம வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அந்த ஈடுபடல் இன்னும் தீவிரம் குறையாமல் தொடர்கிறது. அவருடைய அரசியல் சண்முகநாதன் செயலாளராக இருந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் ஆரம்பமாகியது. அதன்வழியாகவே அன்ரன்  இடதுசாரிய நிலைப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இதனால்தான்  1970, 80 களில் முனைப்புப் பெற்றிருந்த ஈழவிடுதலைப்போராட்ட (இயக்க) அரசியலிலும் அவர் என்.எல்.எவ்.ரியைத் தேர்வு செய்தார். தோழர் விசுவானந்ததேவன் அவருக்கு மிக நெருக்கமான, பிடித்தமான தோழமையாகவும் தலைமைக்குரியவராகவும் இருக்கக் காரணமாகியது. பின்னர் என்.எல்.எவ்.ரி மாறுதல்களைச் சந்தித்து பி.எல்.எவ்.ரியாகியேபோது அன்ரன் விசுவுடன் இருந்தார். விசுவின் மறைவுக்குப்பிறகு, புலிகளினால் அரசியல் நெருக்கடிக்குள்ளாகினார் அன்ரன்.

ஆனாலும் தன்னை இழக்காமல், தன்னுடைய நோக்குநிலையை மாற்றிக் கொள்ளாமல் விடுதலை அரசியலின் வழியிலேயே தொடர்ந்தும் பயணித்தார். ஒரு கட்டத்தில் புலிகளுடன் இணைந்து வேலை செய்தார். ஆனால், புலிகளின் உறுப்பினராகவில்லை. இது தொடர்பாகச் சிலருக்கு விமர்சனங்கள், மறுப்புகள் இருக்கலாம். ஆனால்  களச் சூழல், காலச்சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு, தனக்குரிய அரசியல் செயற்பாட்டு முறைமையை அன்ரன் வகுத்திருந்தார். அதுவும் ஒரு கட்டத்தில் நெருக்கடிக்குள்ளாகியது. இருந்தபோதும் அன்ரன் அதையிட்டுச் சோர்ந்து விடவில்லை. மாக்ஸியவாதிக்கிருக்கும் சமூகவியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படியும் மானுடவியலின் அடிப்படையிலும் தன்னைத் தொடர்ந்து மக்கள் அரசியலில் – விடுதலை அரசியலில் – நிலை நிறுத்தினார்.

அன்ரனுடைய அரசியல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. முழுமானுட விடுதலையைக் கோருவது. எல்லோரையும் சமத்துவமாக நோக்குவது. அணுக முற்படுவது. வர்க்கம், சாதி, பால், பிரதேசம், நிறம், இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களின் வழியான ஏற்ற இறக்கங்களும் பிரிவினைகளும் அவருக்கு ஒரு போதுமே உவப்பானதல்ல. எதன்பொருட்டும் அவற்றை அவர் ஏற்பதில்லை.

இத்தகைய கோட்பாட்டியலில் மாறாக் கொள்கை வழிநிற்கும் அன்ரன் அன்பழகன், ஏறக்குறைய 40 வருட கால அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பெருந்திரள் அறிமுகத்தையோ செல்வாக்கினையோ பெறவில்லை என்பது உண்மையே. அப்படிப் பெருந்திரள் அறிமுகத்தையும் செல்வாக்கினையும் பெறும் (குறுகிய) அரசியல் அன்ரனுடையதல்ல. அவருடைய அரசியல் மக்களுக்கான அரசியல். மாற்று அரசியல். விரிந்த தளத்திலான அரசியல். மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றும் அரசியல். மக்களை முன்னேற்றும் அரசியல் என்பதால் இவ்வாறு செயற்படும் ஏனையவர்களைப்போலவே அன்ரனாலும் வெகுஜனக் கவர்ச்சியைப் பெற முடியவில்லை.

இன்று பொதுப்பரப்பில் செல்வாக்குப்பெற்றிருப்பது சிந்தனைக்கு இடமற்ற, அறிவுநிலைக்கு அப்பாற்பட்ட உணர்ச்சிகர அரசியலே. இந்த உணர்ச்சிகரநிலையானது  பெருந்திரளின் “மோக அரசியலாக” வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் ”பெருந்திரள் மோக அரசியலில் அதாவது பெருந்திரள் ஈடுபாட்டரசியலில்” இருந்து விலகி, வேறுபட்டதால்தான் அன்ரன் அரசியல் செல்வாக்கைப் பெற்று அதன்வழியாக உயரவில்லை. வெகுஜனக் கவர்ச்சியைப் பெறவில்லை. ஆனால் வரலாற்றில் அவருக்கான இடம் தனித்துவமாக எப்போதுமிருக்கும். அது புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட, தண்டனை விதிக்கப்பட்ட, எதிர்நிலையாளர் என முத்திரை குத்தப்பட்ட வரலாற்றுச் சிலுவையேற்றத்தோடிணைந்தது. அந்தச் சிலுவையேற்றம் மாண்புக்குரியது. மகத்துவமானது.

ஆனால், இந்தப் “பெருந்திரள் மோக அரசியல்” என்பது ஆய்வுகள், மறுபரிசீலனைகள், விமர்சனங்கள், விவாதங்கள், கேள்விகள் என்பனவற்றுக்கு அப்பாலானது.  எந்தவிதத்திலும் இது அறிவு சார்ந்து இயங்குவதில்லை. எதனொன்றினால் உணர்வேற்றப்படுகிறார்களோ அதை அப்படியே ஏற்று அலையென மேற்கிளம்புவது. இதிலிருந்து விலகியதால் அன்ரனுக்கு அலைகளில்லை. அவ்வளவுதான் ஆனால் சீரான ஆற்றோட்டம் போன்ற தெளிவோடு தொடரும் பயணத்தில் அன்ரன் இயங்கிக் கொண்டிருக்கிறார். அதுவே அவருடைய அடையாளமாக காலத்தினால் வரலாற்றுக்கு அடையாளப்படுத்தப்படும்.

இவ்வாறானதே அன்ரனுடைய கலை இலக்கியத் தெரிவும். நுண்ணுணர்வு மிக்க படைப்புகளைத் தேர்ந்து அடையாளம் காண்பது அன்ரனுடைய இயல்பு. இதன்வழியாக அவர் உலகளாவிய சிறந்த எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் மட்டுமல்ல, தன்னுடைய சூழலில் புதிதாக எழுதுவோரையும் அவர்களின் எழுத்துகளையும் அடையாளம் கண்டு முன்னிலைப்படுத்தினார். அன்ரன் பொறுப்பு வகித்த சங்கமம், அவர் பணியாற்றிய ஈழநாதம் போன்ற பத்திரிகைகளில் அவருடைய அடையாளம் காணுதலுக்கூடாக உருவாகியவர்கள் இந்த வகையினரே.

அடிப்படையில் அன்ரன் ஒரு தேர்ந்த வாசிப்பாளர். புத்தகங்களின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர். எங்கே, எந்தச் சூழலில் நல்ல புத்தகங்களைக் கண்டாலும் அவற்றை உடனே வாங்கி விடுவார். சட்டைப்பையில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்ன தேவைக்கு அந்தப் பணம் அவசியம் என்றெல்லாம் யோசிப்பதேயில்லை. திட்டமிடலில் இது தவறானதல்லவா என்று நீங்கள் சொல்லலாம். அதைப்பற்றி அன்ரனுக்குப் பொருட்டில்லை. அந்தத் தேவையை இன்னொரு வழியில் ஈடு செய்து நிறைவாக்கிக் கொள்ளலாம். ஆனால், புத்தகத்தைக் கை விட முடியாது என்பார்.

இந்த ஈடுபாட்டின் அளவுக்குக் கலை, இலக்கியத்துறையில் அன்ரன் தனி அடையாளமாக மேற்கிளம்பவில்லை என்பது உண்மையே. அன்ரன் நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். கவிதைத் தளத்தில் தொடர்ந்து செயற்படவில்லை. அப்படிச் செயற்பட்டிருந்தால் இன்று தமிழ்க்கவிதைப் பரப்பில் அன்ரனுடைய கவிதைகளுக்கு சிறப்பிடம் கிட்டியிருக்கும். கலையிலும் அரசியல் வெளிப்பாட்டிலும் கட்டிறக்கமான கவிதைகள் அன்ரனுடையவை. “வெளிச்சம்” இதழில் அவற்றை வெளியிட்டிருக்கிறேன்.  குறைவாக எழுதியிருந்தாலும் அவற்றுக்கான இடம் எப்போதும் உண்டு. கட்டுரைகளையும் சிறுகதைகளையும் கூட எழுதியிருக்கிறார் அன்ரன்.  அவற்றிலும் அவர் தொடர்ந்து ஈடுபடவில்லை. மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்து அவற்றைச் சேகரமாக்கவில்லை. அதன் மூலம் தனி அடையாளமாக மேற்கிளம்பவில்லை. இது குறித்தெல்லாம் அன்ரனுடன் பல தடவைகள் வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். கடிந்திருக்கிறேன். “உங்களுடைய சோம்பலை விட்டுத் தள்ளுங்கள். கொஞ்சம் தீவிரமாக வேலை செய்யுங்கள்” என.

நாம் சொல்வதிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவற்றைச் செயற்படுத்த முன்வரவில்லை. இவற்றையெல்லாம் ஒரு இயக்கமாகச் செய்யக் கூடிய ஆற்றலும் தெளிவான புரிதலும் அன்ரனுக்குண்டு. இருந்தும் அவரிடமிருக்கின்ற அலட்சியப்போக்கு இவற்றில் பொறுப்பாக ஈடுபட வைக்கல்லை என்றே தோன்றுகிறது. சிலபோது உஷாராக இவற்றைச் செய்தாலும் இதெல்லாம் அவசியம்தானா என்பதைப்போன்ற ஒரு அலட்சியம் அல்லது சோர்வுத்தன்மை நீங்காத நிழல்போலிருந்து அவரை மேவி விடும். உடனே எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விடுவார். ஆனால், அன்ரன் இந்தத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தால் அவருடைய அடையாளமே வேறாக இருந்திருக்கும். தமிழ் மொழிச் செயற்பாட்டியக்கத்துக்கு இன்னொரு வளமும் கிடைத்திருக்கும்.

எழுத்து, மொழிபெயர்ப்பு போன்றவற்றுடன் அன்ரனுக்குள்ள இன்னொரு ஆர்வம் நாடகம். கிளிநொச்சியில் 1990, 2000 களில் கிளிநொச்சியில் உருவாகிய நவீன நாடக அரங்கில் அன்ரனுடைய பிரசன்னம் முக்கியமானது. நாடக உருவாக்கத்துக்கான கலந்துரையாடல்கள், அளிக்கைகள் எல்லாவற்றிலும் அன்ரன் பங்களித்திருக்கிறார். பிரதியிலும் நடிப்பிலும் அன்ரனின் பங்களிப்புகளை விஜயசேகரன், கணேசன், கிருபா, அநாமிகன், பங்கையற்செல்வன், அன்பரசி போன்றவர்கள் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. அந்தளவுக்கு அன்ரன் அன்பழகனின் பங்கேற்பு இருந்திருக்கிறது. அன்ரன் அரங்காடிய காட்சிப்படிமங்கள் பார்வையாளர்களிடம் எப்போதுமே செறிந்திருக்கும்.

ஊடகத்துறையிலும் குறிப்பிட்ட  சில காலம் அன்ரன் செயற்பட்டிருக்கிறார். வன்னி ஈழநாதம் மற்றும் சங்கமம் போன்ற பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் அன்ரனுடைய செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. ஈழநாதம் வெகுஜனப் பத்திரிகை. சங்கமம் கூட்டுறவுத்துறை சார்ந்த பத்திரிகை. இரண்டும் யுத்தகால நெருக்கடிகளின் மத்தியில் வெளியானவை. அந்த நெருக்கடிச் சூழலை எதிர்கொண்டவாறே அவற்றில் பணியாற்றியிருக்கிறார்.

இவற்றிலும் அவருடைய சமூக அக்கறையையும் விடுதலை அவாவுதலையுமே நாம் காணமுடியும். சங்கமத்தின் ஆசிரியர் தலையங்கங்களில் அன்ரன் முன்வைத்த சேதிகள் அத்தனையும் இதற்குச் சாட்சியம்.

இவற்றைப்போலவே அன்ரனுடைய பிறதுறை ஈடுபாடுகளான விளையாட்டு, கல்வி போன்றனவும். கல்வித்துறையில் அவர் ஆங்கில பாட ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். நெருக்கடி மிக்க போர்க்காலத்தில், இடப்பெயர்வுகள், அலைச்சல்களின் மத்தியில் தளராமல் நின்று சமூகப் பணிகளைச் செய்திருக்கிறார். மாணவப்பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபட்ட அன்ரன் பல சாதனைகளை நிகழ்த்தியமை பலரும் அறிந்தது. பல நூறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி, ஊக்கப்படுத்தியிருக்கிறார். இதில் அன்ரனுடைய பிரதான அடையாளங்கள் குண்டெறிதல், தட்டெறிதல், உதைபந்தாட்டம் என்பனவற்றில்தான் அதிகம். இதன்வழியாக நிறையத் தொடர்புகளையும் உறவையும் பெறக் கூடியதாக இருந்தது. விளையாட்டுத்துறைச் செயற்பாட்டின் நிமித்தமாக விளையாட்டு அணிகளோடு ஐரோப்பியப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் அன்ரன்.

இப்படிப் பன்முக ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள்  நம்மத்தியில் உள்ளது குறைவு. அப்படியிருந்தாலும் அவர்களிடம் செயற்பாட்டுத் தொடர்ச்சியிருக்காது. தொடர்ந்து செயற்பட்டாலும் தீவிரத்தை இழந்து விடுவார்கள். ஆனால், அன்ரன் தன்னால் முடிந்தவரையில் தீவிரத்தோடு செயற்படுவதில் ஆர்வத்தோடிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவே இன்று அன்ரனைப் பலரும் மதிக்கவும் நேசிக்கவும் காரணம். தோழமை உணர்வோடு எதிலும் எவரிடத்திலும் கலந்து நிற்கும் ஆற்றல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அத்தகைய ஆற்றல் கொண்ட சக பயணிக்கு வாழ்த்துகளும் அன்பும்.

Share:

Author: theneeweb