இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை

இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சி(யுஎன்பி) தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு முடிவு எடுத்திருப்பதாக எழுந்த ஊகத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜித் பி.பெரேரா, கொழும்பில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்கு முன்பே, அதற்குத் தேர்தல் நடத்த ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு முன் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படாது என்றார்.

மேலும்அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில், நாடாளுமன்றத்தின் காலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடைகிறது. அரசின் பதவிக் காலம் முடியும் தருவாயிலேயே தேர்தல் நடத்தப்படும் என்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்நிலைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.  ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா விருப்பப்பட்டால், அதிபர் பதவிக்கான தேர்தலை அவர் முன்கூட்டியே நடத்திக்கொள்ளலாம். ஆனால், மற்ற தேர்தல்கள் அனைத்தும் அவற்றிற்குரிய காலத்திலேயே நடைபெறும் என்றார்.

ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ராஜபட்சவை நியமித்து கடந்த அக்டோபர் மாதம்  ஜனாதிபதி  சிறீசேனா உத்தரவிட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட  ஜனாதிபதி, புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறீசேனா, ராஜபட்ச கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. இதன் பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ரணில் வெற்றி பெற்றார்.

இருந்தபோதிலும், ரணிலை பிரதமர் பதவியில் மீண்டும் நியமிக்க முடியாது என்று  ஜனாதிபதி வெளிப்படையாக அறிவித்து வந்தார். இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி  கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்று   உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ராஜபட்ச இலங்கையின் பிரதமராகச் செயல்பட, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். ரணில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், ஜனாதிபதி சிறீசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாட்டைப் போக்க நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்கூட்டி தேர்தல் நடத்துவதே உகந்ததாக இருக்கும் என்று ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து, ராஜபட்சவின் மூத்த மகனான நமல் ராஜபட்ச கூறுகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து எம்.பி.க்களிடையே வாக்கெடுப்பு நடத்துமாறு பிரதமருக்கு சவால் விடுக்கிறோம் என்றார். நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்னால்,  ஜனாதிபதி அதனைக் கலைக்க முடியாது என்று இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால்,  ஜனாதிபதி சிறீசேனாவால் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

அதே வேளையில், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் சம்மதம் தெரிவிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த புதிய சட்டத் திருத்தம் வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb