இலங்கையில் தமிழ் மொழி அரச கருமமொழியாக இருக்கின்ற போதும், நடைமுறை ரீதியில் தமிழ் மொழி அமுலாக்கம் குறைவாகவே இருக்கிறது

இலங்கையில் தமிழ் மொழி அரச கருமமொழியாக இருக்கின்ற போதும், நடைமுறை ரீதியில் தமிழ் மொழி அமுலாக்கம் குறைவாகவே இருப்பதாக அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டிற்கான பாதீட்டின், அரச கருமமொழிகள், இந்து சமய விவகார அமைச்சுக்கான ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்ற போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் கடந்த மூன்று வருடங்களில் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அரச நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் மொழிப்பிரச்சினைகள் நிலவுகின்ற நிலையில், அவற்றை தீர்ப்பதற்கான விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி சிறிலங்கா வன் என்ற மும்மொழிகளிலுமான எழுத்துரு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அரச நிறுவனங்களுக்கு தேவையான பெயர்ப்பலகைகளை மொழிப்பிழை இன்றி வடிவமைத்து வழங்குவதற்கான மத்திய நிலையம் ஒன்றையும் தமது அமைச்சு உருவாக்கவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா, காணாமல் போனோரது உறவினர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற 6000 ரூபாய் கொடுப்பனவு, அவர்களின் மொத்த இழப்பையும் ஈடு செய்யும் வகையில் அமையாது என்று குறிப்பிட்டார்.

இதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன் பதில் வழங்கிய அதேநேரம், காணாமல் போனோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவை ஈ.பி.டி.பியுடன் தொடர்பு கொண்டவை என்று குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb