திக்குத் தெரியாத காட்டில் தமிழகத்தில் ஈழ அகதிகள் – – பத்திநாதன்

நேர்காணல் – கருணாகரன் —

இலங்கையில் மன்னார் மாவட்டம் வட்டக்கண்டலை பிறப்பிடமாக கொண்டவர் பத்திநாதன். 1990 இல் ஏற்பட்ட போர்காரணமாக பதினாறாவது வயதில் அகதியாக தமிழகம் சென்றார். எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்தார். பின்னர் சென்னை சென்று சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை பொது நிர்வாகம் படித்தார்.

தமிழக ஈழ அகதிகள் நிலை குறித்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இவருடைய முதல் புத்தகம் போரின் மறுபக்கம்பரவலான கவனம் பெற்றது. மற்ற நூல்கள் தமிழகத்தில் ஈழ அகதிகள்”, ”தகிப்பின் வாழ்வு போரும் இடப்பெயர்வும்ஆகியன.

திரைத்துறையிலும் சிரிதுகாலம் பணி செய்த இவர், தற்போது காலச்சுவடுவில் பணி செய்து வருகிறார். மதுரையில் அரசு அனுமதி பெற்று முகாமிற்கு வெளியே வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளின் நிலை பற்றி பத்திநாதன் விரிவாகப் பேசும் அனுபவங்களோடிருக்கிறார். அவருடன் அகதிகள் குறித்து உரையாடியதில் ஒரு பகுதி இது.

1) தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகளின் நிலை எப்படியிருக்கு? நீங்கள் அங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீங்கள்?

இங்கே அகதிகள் என்பது சும்மா பயன்பாட்டுக்கான பொருள் இல்லாத சொல் மட்டுமே. தமிழகத்தில் அகதி என்பது சட்டவிரோத குடியேறி என்பதே பொருள்படும். இங்குள்ள நடைமுறைகள் அதற்கு சான்று. எவ்வளவு காலம் என்பதை சற்று விரிந்த தளத்தில் பார்க்க வேண்டும். முன்பு ஈழ அகதிகள் என்று மட்டுமே பொதுவாக புரிந்துவைத்திருந்தேன். பின்பு இந்திய வம்சாவழி ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது புரிவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆனது. 2018 கொட்டப்பட்டு முகாமுக்கு போனபோதுதான் மூன்று பிரிவான மக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

அதாவது சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம் 1964 ல் கையெழுத்தாகி 1967ல் நடைமுரைக்கு வருகிறது. அதன்படி ஐந்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு, அதாவது தமிழகம் வவேண்டும். அதன் காலம் முடிந்ததும் 1982ல் அவ் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அனால் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான படகு போக்கு வரத்து 1984 ல் இலங்கை கலவரத்தை காரணம் காட்டி நிறுத்தப்படுகிறது.

இதில் அரச அறிவிப்புக்கள் ஒன்றாகவும் நடைமுறைகள் ஒன்றாகவும் பல குழப்பங்களுடையது அந்த ஒப்பந்தம்.

தாங்கள் படகில் அகதியாக வந்தபோது கப்பலிலும் ஆட்கள் வந்தார்கள் என்று கொட்டப்படில் இருக்கும் ஒரு அம்மா என்னிடம் தெரிவித்தார்கள்.

1984 ஒப்பந்தபடி விடப்பட்ட கப்பல் நிறுத்தப்படுகிறது. ஆனால் 1983  களிலே அகதிகளும் வர ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே 1982 க்கு பின் ஒப்பந்தப்படி வந்தவர்களுக்கு முறையாக இந்திய அரசு குடியுரிமை கொடுக்கவில்லை. அவர்களும் அகதிகளும் முகாம்களில் கலந்துபோனார்கள். அந்தக் காலகட்டம் குழப்பமானதாக இருந்தது. ஆகவே 1982 க்குபின் ஒப்பந்தப்படி  வந்தவர்கள், அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகளாக அரசால் கையாளப்படுகிறது. இப்பொழுது 37 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் சட்டவிரோத குடியேறிகள் முகாம்கள் இருக்கிறது.

1)   முதல் கட்டமாக 1983-1987 – 134,053

2)   இரண்டாம் கட்டமாக 1989-1991 – 1,22,078

3)   மூன்றவது கட்டமாக 1996-2005 – 22,418

4)   நான்காம் கட்டமாக  2006-2007  – 25,720

3,04,269 பேர் அகதியாக வந்தாக தமிழ்நாடு அரசு கணக்கு சொல்கிறது. 2016 கணக்குப்படிமுகாமில் 63,351 நபர்களும், முகாமுக்கு வெளியே 37,868 நபர்களும் ,மொத்தம் 1,01,219 இருப்பதாக அரசு சொல்கிறது. இடப்பெயர்வின் புள்ளிவிபரங்கள் எப்பவும் அரசுகளிடத்தில் சரியாக இருந்ததில்லை.

2) தற்போது அகதிகள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டில் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் ஆரம்பத்தில் இருந்தது. இலங்கை சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் போக தற்போது 106 அகதிகள் முகாமும், ஒரு சிறப்புமுகாமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. சிறப்பு முகாம் திருச்சி கொட்டப்படில் உள்ள மாவட்ட சிறை வளாகத்திற்குள்ளும் ஏனைய அகதிகள் முகாம்கள் 25 மாவட்டங்களிலும் இருக்கின்றன.

3) நீங்கள் அங்கே போகும் போதிருந்த சூழல் என்ன? அப்பொழுது அரசு, மக்கள், உதவும் அமைப்புகள் எல்லாம் எப்படி அணுகினார்கள் ?

1990 களில் அகதிகள் தமிழகம் வந்தபோது அகதிகளுக்கு முதலில் தமிழக மக்களின் ஆதரவு இருந்தது. அவர்கள் அகதிகளின்மீது பரிதாபத்தோடு கருணை காட்டினார்கள். அரசுசாரா அமைப்புக்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. கிறிஸ்தவ அமைப்புக்கள் பங்களிப்பு முக்கியமானது. ஆரம்பத்தில் ராமகிருஷ்ணா மடம், மண்டபம் முகாமில் உள்ள குழந்தைகளுக்கு பால் வழங்கியது. அதிகமான அகதிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் வந்ததால் அரசு பல சிரமங்களை எதிர்கொண்டது. தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதும் அகதிகளை தங்க வைப்பதும் சிரமத்தை ஏற்படுத்தியது. அப்போது இருந்த நிர்வாகத்தை கொண்டு அரசு அதனைக் கையாண்டது. 1990 க்கு பின் உலகமயமாதல் வந்தது. தொடர்ந்து 1991 ராஜிவ்காந்தி மரணத்திற்கு பின் எல்லாமே ஒரே நாளில் தலைகீழாக மாறியது. ஜெயலலிதா முதன் முதலாக தமிழக முதல்வர் ஆனார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. திமுக விற்கு எதிர்நிலை கடுமையாக எடுக்கவேண்டிய தேவை ஜெயலலிதாவுக்கு இருந்தது.

 ஆப்பிரேசன் பிளமிங்கோ என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தனியாக பதிவில் இருந்தவர்கள், பதிவு இல்லாதவர்கள் 2000 ற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்கள். சிறப்பு முகாம்கள் அதிகரிக்கப்பட்டது. முகாமிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. கடலோரத்தில் இருந்த முகாம்கள் தமிழகத்தின் உட்பகுதிக்கு மாற்றப்பட்டன. 1992-1995 க்கும் இடைப்பட்ட காலத்தில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கட்டாயமாக அனுப்பப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட ஈழ ஆதரவார்களின் விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றம்வரை சென்று கட்டாயமாக அகதிகளை அனுப்பக்கூடாது என்று உத்தரவு பெறப்பட்டது. அதுமட்டுமில்லை 1993 ஆண்டு முகாம்களுக்குள் பணி செய்ய தொண்டு நிறுவணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. படிப்படியாக இல்லாமல் ஒரே நாளில் இலங்கைத்தமிழர் மீதான பர்வை தமிழ்கத்திலும் முழு இந்தியாவிலும் மாறிப்போனது. தடா சட்டம் அப்போது அமுலில் இருந்தது . இது அகதிகளின் இருண்டகாலம்.

1996 க்கு பின் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்ததும் சில சலுகைகள் செய்தது. ஆனால் முகாம் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றுவரை நீக்கப்படவில்லை.

4) இப்போதைய சூழல் –  நிலவரம் எப்படியிருக்கு?

அகதிகள் முகாம்களையும், அகதிகளையும் அந்த அந்த காலகட்டதோடு பொருத்திப் பார்க்க வேண்டும். உலகமயமாதலுக்குப் பின் இந்தியா அதன் மாநிலமான தமிழ் நாடு என்ன மாற்றத்தை அடைந்திருக்கிறதோ அதே மாற்றங்கள் முகாம்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. உதாரணமாக நுகர்வு மனநிலை, சினிமா, சாராயம், தமிழக அரசியல் அனைத்தையும் முகாம்கள் உள்வாங்கியிருக்கின்றன. மிகுந்த கட்டுப்பாடு, உளவியல் நெருக்கடி, மட்டுப்படுத்தப்பட்ட புழங்கு வெளி, ஜனநாயகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டநிலை போன்றவை இருந்தும் அரசு உதவி, தமிழக அரசின் சமூகநலத்திட்டங்கள், மற்றும் அவர்களுடைய உடல் உளைப்பு ஆகியவற்றால் இன்று கணிசமான அகதிகள் நடுத்தர வாழ்க்கையை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதுவே அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களை காழ்ப்புணர்வு அடையும் நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

ஆனாலும் பெரும்பாலான அகதிகள் அரசு உதவியை நம்பிமட்டுமே வாழ்கிறார்கள்.

 ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்ச்சூழலை ஈர்த்ததுபோல் அகதிகளையும் ஈர்த்தது. ஆங்காங்கு அகதிகள் முகாம்களில் போராட்டம் நட்த்தினார்கள். சமீபத்தில் புல்வமா தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த இந்திய வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பேணர்கள் சில முகாம்களில் வைக்கப்பட்டது. தங்களுடைய வாழ்வாதார உரிமைக்காஇன்னும் போராடும் தைரியம் அகதிகளுக்கு வரவில்லை. பாதிக்கும் மேற்பட்ட அகதிகள் இன்று குடியுரிமை வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதில் அதிகம் அடங்கும். முகாம்களுக்கான சரியான தீர்வு வரவில்லையானால் காலப்போக்கில் அகதிகள் போராட தெருவுக்கு வருவார்கள்.

அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதும் , அகதிகள் விடயமும் சட்டச் சிக்கலுடைய மத்திய அரசு விவகாரம் என்பது இங்குள்ள தமிழக அரசிலிருந்து பிரதான அரசியல் கட்சிகள், சிறிய கட்சிகள் அமைப்புகளுக்கெல்லாம் தற்போதுதான் புரிந்திருக்கிறது.

பிரதானமான கட்சிகளுக்கு அகதிகள் விடயத்தை வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் இலங்கைப் பிரச்சினைபற்றிப் பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தயக்கம் தற்போது அகதிகள் விடயத்தைப்பற்றிப் பேசுவதற்குத் தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறு அரசியல்கட்சிகள், அரசியல் குழுக்கள் உண்மையில் அகதிகள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அவர்கள் உணர்வு பொங்க ஈழம் பற்றி பேசுவதாலும் அகதிகள் பற்றி சந்துக்குள் நின்று பேசுவதாலும் எதுவும் ஆகிவிடாது. இவர்கள் இப்படிப் பேசப்பேச அரசுக்கு அகதிகள் மேல் உள்ள சந்தேகம் போகாது. இந்திய அரசு குடியுரிமை பற்றியும் பரிசீலிக்காது. சமீபத்தில் தேர்தல் அறிக்கையில் திமுக அகதிகள் பற்றி பேசியிருக்கிறது.

இதையெல்லாம் தமிழக சிவில் சமூகம் கரிசனையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

5) ஈழ ஆதரவு இயக்கங்கள், அமைப்புகளின் உதவி, நிலைப்பாடு,பங்களிப்பு, எல்லாம் எப்படி இருக்கிறது?

அரசுகள் இவ்வாறான குழுக்களை தீவிரமாக கண்காணிக்கும் அதுக்குள் திரண்டு வரும் உளவியலையும் கண்காணிக்கும். இந்த குழுக்கள் கனவுலகத்தில் இருந்து இன்னும் இறங்கி வரவில்லையோ என்று பலநேரங்களில் தோன்றும். ஈழத்தை அவர்கள் அவர்களுடைய அரசியலுக்காகவே பயன்படுத்துகிறார்கள். அகதிகள் அகதிகளானதுக்கு அகதிகள் காரணமில்லை அந்த காலகட்டத்தோட புறச்சூழல்தான் காரணம். நீண்ட தூரம் பல இன்னல்களுடன் கடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எதையும் இன்னும் கடந்துவிடவில்லை. இன்றைக்கு எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் புறச்சூழலை மாற்றுவதற்கு எல்லாரும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இந்த தீவிர ஈழ ஆதரவுக்குழுக்கள் அகதிகள் பற்றி பேசாமல் இருப்பதே அகதிகளுக்கு செய்யும் பெரிய உதவி.

இவாறான குழுக்கள் அகதிகள் முகாமிற்குள் வரமுடியாது. அரசு அனுமதிப்பதில்லை. அதுவும் அகதிகளுக்கு நல்லதுதான்.

6) அகதிகள் முகாம்களிலுள்ள இளைய தலைமுறையினர் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய கல்வி, தொழில், எதிர்காலம் எப்படியிருக்கிறது? அவர்களுடைய விருப்பம் எப்படியுள்ளது? அதாவது அவர்கள் தங்கள் தாய்நாடான இலங்கைக்குத் திரும்ப விரும்புகிறார்களா? அல்லது அங்கேயே தங்கிவிட விரும்புகிறார்களா? 

முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பல சமூகங்களைச் சேர்ந்த விளிம்புனிலை மனிதர்கள் தமிழகம் முழுவதும் சிறு சிறு குழுவாக பிரிந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ்ச் சமூகத்தின் மரபுரீதியான இயல்புகளும் அதில் அடங்கியிருக்கிறது.

இந்தநிலையில் ப்படியான நெருக்கடியான சூழ்நிலைக்குள் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக வாழ நிற்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கான பொது ஜனநாயக வெளி சுருக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இடதிற்குள்தான் இவர்களுடைய கல்வி, வேலை, தொழில் அதனை ஒட்டிய வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது.

இன்று பெரும்பாலும் இளயதலைமுறை கல்லூரிவரை படிக்கிறார்கள். அதற்கு அகரம் பவுண்டேசன் மற்றும் முகாமிற்குள் அனுமதிக்கப்பட்ட தொண்டுநிறுவனங்களும் ஒரு காரணம். மேற்படிப்பு படிப்பவர்களுக்கு பல சவால்கள் இருக்கிறது மருத்துவம், விவசாயம் படிக்க அனுமதியில்லை. பொருளாதார சிரமத்தையும் எதிர்கொண்டு மேற்படிப்பு படித்தாலும் தனியார் நிறுவனங்கள் அகதி என்பதால் நம்பி வேலை கொடுக்க மாட்டார்கள். முகாம் நடைமுறைகள் அதற்கு அனுமதிக்காது. அரசு சமீபகாலங்களில் முகாமிற்கு வெளியே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் அதற்கான அனுமதியை அரசிடம் வாங்க வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் அப்படி வேலை செய்கிறார்கள் பெரும் நிறுவனங்களில் வேலைக்கு சேரும்போதே அகதி என்ற அடையாளத்தை மறைத்து வேலை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். நான் 5 வருடங்கள் அவ்வாறு வேலை செய்திருக்கிறேன். அவற்றையெல்லாம் விபரமாகபோரின் மறுபக்கம்புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

படித்தும் வேலைக்காக இவ்வளவு சிரமத்தை எதிர்கொள்வதால் அவர்கள் இயல்பாகவே உடலுழைப்பை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள். இன்று அகதிமுகாமின் தேசிய தொழில் பெயிண்ட் அடிப்பது.

 முகாமிற்குள் சுய தொழில் என்பது அதிகபட்சம் சிறிய அளவில் கடைவைப்பது. அதை எத்தனை பேர் செய்துவிடமுடியும்? முகாமிற்கு வெளியே முகாம்வாசிகள் வெற்றிகரமாக தொழில் செய்ததாக நான் அறியவில்லை அந்த அளவிற்குப் பொருளாதர வளம் அவர்களிடம் இல்லை.

 நான் 90 களில் சிறுவர்களாக பார்த்தவர்கள் இன்று நடுத்தர வயதை கடந்திருக்கிறார்கள். 90 க்கு பிறகு பிறந்த தலைமுறை உருவாகியிருக்கிறது. இவர்களுக்கு இலங்கை குறித்த எந்தப் புரிதலும் இல்லை. அவர்கள் இங்குள்ள சூழ்நிலைக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் இலங்கை வர விரும்பமாட்டார்கள்

8 வயதில் ஒரு மகன் 5 வயதில் ஒரு மகன் என ஒரு குடும்பத்தினர் 90 ல் அகதியாக வந்தார்கள். தகப்பன் முகாமில் இறந்துவிட்டார். இருவரையும் தையல் வேலை பார்த்து தாய் கல்லுரிவரை படிக்க வைத்தார். இருவரும் குடும்பமாகிவிட்டார்கள். குழந்தைகளும் இருக்கிறார்கள். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார்கள். தற்போது மகன்கள் இருவருக்கும் இலங்கை வர விருப்பமில்லை. தாய் மட்டும் இலங்கை செல்வதற்குப் பதிந்திருக்கிறார் அவருக்கு தான் வாழ்ந்த ஊர் உறவுகளை பார்க்க்க வேண்டுமென்ற மரபான ஏக்க மனநிலை இருப்பது அவரிடம் பேசியதில் வெளிப்பட்டது. இளைய தலைமுறையின் ஆரோக்கியமான எதிகாலம் கேள்விக்குறிதான் முகாம்கள் இருக்கும்வரை.

7) தேர்தல்கள் மற்றும் தமிழகஇந்திய அரசியலில் அகதிகளின் பங்களிப்பும் ஈடுபாடும் எப்படியானது?

 இது ஒரு முக்கியமான நல்ல கேள்வி. அகதிகளிக்கான ஜனநாயக வெளி எங்கே இருக்கிறது.? சிவில் சமூகத்தின் பொது மனநிலைபோல்தான் வெகுஜன ஊடகங்களால் கட்டமைக்கப்படுபவர்கள்தான் அகதிகளும். முன்பெல்லாம் அதாவது 2009 க்கு முன்புவரை தேர்தல்காலங்களில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்ச்னை தீர்ந்துவிடும். நாம் நம் நாட்டுக்கு போய்விடலாம் என்ற மனநிலை இருக்கும். தீருமா தீராதா என்ற ஆழமான பார்வை இருக்காது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் மறுபடியும் போர் வரும் என்ற  நம்பிக்கைபோன்றது அது. தொடர் ஏமாற்றம் ஏற்பட்டிருந்தாலும்  ஆட்சி மாறினால் தங்களுக்கான தீர்வு கிடைக்கும் என்று இப்பவும் நம்புகிறார்கள். அனால் அவ்ர்கள் எதிர்பார்ப்பு தற்போது மாறி இருக்கிறது. அப்போது இலங்கை செல்ல நினைத்தவ்ர்கள் இப்போது தங்களுக்கு குடுயுரிமை கிடைக்கும் என்று பெரிதும் நம்புகிறார்கள்.

 அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படும் நிலையில் அகதிகள் வாக்களிப்பது, அரசியலில் ஈடுபடுவது என்பது கற்பனைகூட செய்யமுடியாது. குடியுரிமை இல்லாதவரை அது சாத்தியமில்லை.

இடப்பெயர்வுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லமுடியும். போர். பொருளாதார காரணம், பருவநிலை மாற்றம். ஆனால் நாம் இந்தக் கேள்வியில் தமிழகத்தில் உள்ள அகதிகள் என்று சொல்லப்படும் போர் காரணமாக வந்த சட்டவிரோத குடியேறிகளைப் பற்றி பேசுகிறோம். பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் மறுக்கப்படும் நிலையே போருக்கான ஆரம்ப்புள்ளி. போர் எப்பவும் ஜனநாயதன்மையுடன் நடப்பதில்லை. அது மறுக்கப்படும்போது, போர் உருவாகும்போது அகதிகள் வெளியேறுகிறார்கள். இப்படிப் போராலும் மேற்குறிப்பிட்ட காரணங்களாலும் இன்று கோடிக்கணக்கானவர்கள் நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் உலகமெங்கும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் இல்லை. தீவிரவாதிகளும் இல்லை என்கிறபோது உலகமுழுதும் ஏற்றுக்கொள்ளபட்ட ஜனநாயகப் பங்களிப்பு இவர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? ஏன் ஜனநாயகம் இவர்களை தீண்டத்தகாதவர்களைப்போல் ஒதுக்கி வைத்திருக்கிறது? குடியுரிமை இருந்தால் மட்டுமே ஜனநாயக கடமையாற்றுவது என்பது ஒருநிலை. நீண்டகாலம் ஒரு இடத்தில் வாழ்பவர்கள் அவர்களுக்கான அரசியலில் ஈடுபட அனுமதிப்பதே முழுமையான பன்முகத்தன்மையுடைய ஜனநாயகமாக இருக்கமுடியும். அப்படி வாக்களிக்கும் நிலைவந்தால் அகதிகள் மற்றும் நாடற்றவர்களை நோக்கி அரசியல் பார்வை திரும்பும்போது அவர்களுடைய பிரச்சினக்கும் தீர்வுகிடைக்க வழிவகை ஏற்படும்ஜனநாயகம் பன்முகத்தன்மை கொண்டதுதான். ஆனால் அது வலியவர்கள் கையில் இருப்பதால் எளிய மக்களைப் புறந்தள்ளியிருகிறது. இதனை ஜனநாயவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இன்னும் பரந்த தளத்தில் உரையாட வேண்டும்.

8) இந்திய அரசு, இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு ஆகியவை இந்த அகதிகள் பற்றிக் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? இந்த தரப்புகளை அகதிகள் தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லையா?

 ஜெயலலிதா ஆரம்பதில் இலங்கை தமிழர்மீது கடுமையாக நடந்துகொண்டாலும் பிற்காலத்தில், கருனாநிதி அகதிகளுக்கு கொடுத்த சமூகநலத்திட்டங்களை விரிவு படுத்தினார். இவர்கள் இருவரும் அகதிகள் மேல் காட்டிய கரிசனத்தை இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் காட்டவில்லை என்பதை குற்றச்சாட்டாகவே பதிவு செய்கிறேன். குறிப்பாக 2009 க்கு பிறகு இலங்கையில் தமிழர் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்கிறார். இப்பொழுதுள்ள ஆட்சியிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் உள்ளார். அவர் இந்த அகதிகள் பற்றிப் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. வடக்குப் பகுதியை சேர்ந்த அகதிகள் அதிகமாக இருக்கிறார்கள். விக்னேஸ்வரன் முதல்வரானதும் தமிழகம் வந்தபோது பத்திரிகையாளர் கேள்விக்கு அகதிகள் நாடு திரும்பவேண்டும் என்றார். இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும் ஒத்த வார்த்தையில் கடந்துபோகும் விடயமில்லைகடந்தவருடம் வந்தவர் இந்திய அரசு அனுமதியுடன் அகதிகள் முகாமை பார்வையிட்டிருக்க வேண்டும் அல்லது அகதிகளை கூப்பிட்டாவது அவர்கள் குறைகளை கேட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

2009 க்கு பிறகு நாடு திரும்பியவர்களுக்கு இதுவரை நம்பிக்கை தரும்படியாக அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. போருக்கு பின்பான பொருளாதர அரசியல் சூழலைப் புரியாமல் இதனைச் சொல்லவில்லை. ஓரளவிற்கேனும் மீள்குடியேற்றத்தில்  அகதிகள் மத்தியில் கரிசனையான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தால் அகதிகள் இந்திய குடியுரிமைக்கு விரும்பமாட்டர்கள். தமிழர்தரப்பின் போதமையே இன்று அகதிகளை இந்தியக் குடியுரிமையை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இது தமிழர் தரப்பு அரசியல்வாதிகளுக்கு அவமானமாகும். அன்று மலையக மக்களுக்கு நடந்தது இன்று இந்த அகதிகளுக்கு நடக்கிறது. இது வர்களுடைய மரபுத்தொடர்ச்சி. புலிகளைப்போல்  தொடர்ச்சியாக இவர்களும் தமிழகம் வாழ் அகதிகளை பாராமுகமாக நடந்துகொள்கிறார்கள்.

இலங்கை அரசு அகதிகளை மட்டுமில்லை தமிழர்களையே எப்படி நடத்துகிறது என்பது உலகறிந்த விடயம். அவர்கள் அகதிகள் வெளியேறியதையும் விரும்பவில்லை. அகதிகளையும் விரும்பவில்லை.

உலகில் ஒரு நாடாக இலங்கை, தன் நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை கேட்கிறார்கள் என்பது இலங்கைக்கும்தான் அவமானம். இலகையில் இருந்து இந்தியா வந்தவர்கள் மீளத் திரும்பியவர்கள் போக இன்று இருப்பவர்களைக் கணக்கில் எடுத்தால் நடுவில் கொஞ்சப்பேரை காணவில்லை. இதனை யார் பேசுவது? யார் யாரிடம் கேட்பது? அவுஸ்ரேலியாவுக்கு படகில்போன நூற்றுக்கனக்கானவர்கள் கண்முன்னே காணாமல் போயிருக்கிறார்கள். ஏன் இதெல்லாம் நடந்தது? அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. இதற்கெல்லாம் யார் பொறுப்பு கூறுவது?

முன்பே கூறியிருக்கிறேன் இன்று அகதிகள் முகாமில் இருப்பவர்களின் அட்ப்படையை புரிந்துகொள்ள வேண்டுமென்று. இவர்களால் எந்தளவுக்கு அரசுகளை அணுகமுடியும்? அதுமட்டுமில்லை அகதிகளை ஆரம்பம் முதலே அமைப்பாக திரளும் சூழ்நிலையை அரசு அனுமதிக்கவில்லை. அரசுக்கும் அகதிகளுக்கும் பாலமாக இருந்தது சந்திரஹாசனின் OFERR என்று சொல்லப்படும் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம். இது தொண்டு நிறுவனமாக மட்டுமில்லமல் அகதிகளின் பிரதிநிதியாகவும் செயல்பட்டது. அரசால் நியமிக்கப்பட்ட இந்நிறுவனம் அகதிகளைவிட அரசுகளுக்கே விசுவாசமாக இருந்தது. அகதிகளின் உரிமை சார்ந்து சந்திரஹாசன் இன்னும் செயல்பட்டிருக்க முடியும். அகதிகளின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். தற்போதுதான் அகதிகள் தங்களுக்கான பிரச்சனையைத் தாங்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

9) அண்மைய ஆண்டுகளில் கணிசமான அகதிகள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். இது அங்கே உள்ள அகதிகளின் உளநிலையில் என்னமாதிரியான உணர்வையும் நிலைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கு?

அகதிகளுக்கான நிரந்தரத் தீர்வாக ஐ.நா மூன்று விடயங்களை குறிப்பிடுகிறது. தாயகம் திரும்புதல், இடம்பெயர்ந்த இடத்திலேயே வாழ்வது, மற்றும் மூன்றாவது அகதியாக இருக்கும் நாட்டில் குடியேறுதல். அகதிகள் இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்கும் சட்டப்படி போக முடியாது. பொருளாதார பலம் இருந்து போவதாக இருந்தால் இலங்கை சென்றே செல்லமுடியும். பொருளாதார வசதியற்றவர்களே இன்று வேறு வழியின்றி இங்கு இருக்கிறார்கள். குறைந்த பணம் மற்று ஏஜெண்டுகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பியே பலர் மூன்றாம் நாடான அவுஸ்ரேலியா போனார்கள்.

உண்மையில் அகதிகள் இன்று போக்கிடம் தெரியாமல் முட்டுச்சந்தில் விடப்பட்டிருக்கிறார்கள். மூன்றாம் நாட்டுக்கு சட்டரீதியாகப் போக முடியாது. இந்தியாவில் குடியுரிமைக்கான எந்த உத்தரவாதமும் இதுவரை இல்லை. தாயகம் திரும்புவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அங்கு மறுவாழ்வுக்கான என்ன உத்தரவாதம் இருக்கிறது? இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்துவிட்டு  தாயகம் திரும்பி மறுபடியும் அகதிவாழ்க்கையா?

OFERR நிறுவனம் தொடர்ந்து அகதிகள் நாடு திரும்பவேண்டுமென்று பிரச்சாரம் செய்கிறது. இது அரசுகளுக்கு செய்யும் விசுவாசமான வேலை. இலங்கையிலிருந்து இந்துத்துவா அமைப்புகளால் ஈர்க்கப்பட்டவர்கள் முகநூல்வழியாக பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்குத் தமிழர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற கவலை. யாருக்கும் அகதிகளின் மீள்குடியேற்றம், மறுவாழ்வுபற்றி கவலையில்லை. பரவலாக்கப்பட்ட தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறது. அதன் மூலம் அகதிகள் நிலமைகளை கவனித்தே வருகிறார்கள். ஆனால் இவர்களின் பிரச்சாரம் பெரியளவில் அகதிகளை ஈர்க்கவில்லை என்றே சொல்வேன். 2009 போருக்கு பின் பத்துவருடங்களில் பத்தாயிரத்துக்கும் குறைவான அகதிகளே நாடு திரும்பியிருக்கிறார்கள். உலகம் முழுதும் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிவிடுவதில்லை. திரும்பிவிடவும் முடியாது. அதற்கான வரலாறு இருக்கிறது

10)  அகதிகள் விடயத்தில் இலங்கை, இந்திய, தமிழ்க அரசுகள் என்னவெல்லம் செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்கள்? இலங்கை தமிழ் தலைமைகள் என்ன செய்யவேண்டும்?

ஜனநாயக வெளிக்கு வெளியே தள்ளப்பட்டு நீண்டகாலம் அலைக்களிப்பில் நம்பிக்கையற்று நிற்கும் மக்களுக்கு அரசுகள் முதலில் நம்ம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இடப்பெயர்வின் பிரச்சினைகளை அரசுகள் மட்டுமில்லை சிவில் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பிருக்கு. அதனை தட்டிக்கழிக்கக் கூடாது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமிருக்கு. இந்தியா கருணை உள்ளத்தோடு அகதிகளுக்கு வாழ்வாதரத்தை உறுதிப்படுத்தி முதல் கட்டமாக அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கவேண்டும். படிப்படியாக விரும்பும் ஏனையவர்களுக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பாக சட்டவிரோதக் குடியேறிகள் என்ற அரசாணயை நீக்க வேண்டும்.

லங்கை அரசு நாடு திரும்பும் அகதிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி மீள்குடியேற்ற வேண்டும். மீள்குடியேற்றம் சரியாக நடக்குமாக இருந்தால் கணிசமான அகதிகள் நாடு திரும்புவார்கள்.

இடப்பெயர்வில் இருக்கும் முக்கியமான பிரச்சனை ஆவணங்கள் சரியாக இல்லாததாகும். அரசுகள் ஆவணங்களின்படி இயங்கக்கூடியன. இதுதான் அகதிகளை அரசு அலுவலகங்களில் அலைக்களிப்பை ஏற்படுத்துவது. ஆகவே சீரமைக்கப்பட்ட வாய்மொழித் தகவலின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்களின் ஆவணங்களை உருவாக்குவதும் முக்கியமானது. முக்கியமாக மனிதாபிமான அடிப்படையில்,  அரசுகளும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு அகதிகளைக் கையாள வேண்டும்.

தமிழ்த்தேசிய இலக்கியத்திற்குள்ளும், தமிழ்த்தேசிய அரசியலுக்குள்ளும் இதுவரை அகதிகள் விடயம் பேசப்பட்டதில்லை. இனிமேலாவது பேசுங்க.

Share:

Author: theneeweb